கமலாதாஸ் கவிதைகள்

>> Monday, November 2, 2009

காலி நெற்குதிர்

தனிமை -

ஒருசமயம் அது என் வீடாக இருந்தது
இன்று நான் அதன் வீடாகிவிட்டேன்.

உருவமற்றது எனினும் ஒரு காலி நெற்குதிர்போல
அது என்றென்றும் எனக்குள் நிலைத்திருக்குமென்று
நான் அறிகிறேன்.

கனமில்லாதது எனினும் அதன் பாரத்தால்
என் கால்கள் தளருவதை நான் புரிந்துகொள்கிறேன்.

வாசகா, சொல், நான் முன்னோக்கி நகர்கிறேனா,
அல்லது, பின்னோக்கியா எனது இந்தப் பயணம்?

எனது விருந்தாளிகள் என் கண்களைப் புறக்கணித்து
வெள்ளி மெட்டிகளணிந்த என் கால்விரல்களை மட்டும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

முந்தின நாள் நெட்டுருச் செய்த அன்புமொழிகளையெல்லாம்
எனது முற்றத்திலேயே அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

விடைபெற்றுப் போனபிறகும் வாசற்படியில்
அவர்கள் ஒவ்வொருவரும் தயங்கி நிற்கிறார்கள்.

எதையோ நினைத்துக்கொண்டதுபோல அவர்கள்
திரும்பிப்பார்க்கிறார்கள்
ஆனால், அவர்கள் திரும்பிவருவதில்லை, ஒருபோதும்
திரும்புவதில்லை.

அவர்களது காலடிகள் பாதையிலூடே
விலகிவிலகிப் போகின்றன, என்னிலிருந்து
விலகிவிலகிப் போகின்றன.

எனது இரும்பு கேட்டின் விசும்பலைமட்டும்
பிறகு, என் கனவுகளில் நான் கேட்கிறேன்.

*****************************

ஜூலைக்குப் பிறகு ...

அந்த ஜூலைக்குப் பிறகு
கொழும்பு நகரத்தில்
தமிழர்களை வெளியில் பார்க்கவில்லை
மண்டபங்களில்
அரங்கேற்றங்கள் இருக்கவில்லை
பெண்களின் கூந்தலுக்கு வாசனை பகிர
முல்லைச்சரங்களுடன்
ஒரு பூக்காரியும் வாசலில் வரவுமில்லை.
வெருண்ட எலிகள்போல
அவர்கள் பொந்துகளில் ஒளிந்தனர்
அவர்களது உடல்களில்
எலியின் நாற்றமிருந்தது.
சாணமும் செம்பும் வெடிமருந்தும் கலந்த நாற்றம்
அவர்கள் வேட்டையாடப்பட்டவர்களாக இருந்தனர்
அவர்களது அறைகளின் . . . மாலை ஒளியில்
கதவுக்குப் பின்னால் பயந்து அரண்டு
அவர்கள் நின்றார்கள்
அவர்களது விழிவெண்மைகள்
முத்துக்கள்போல மின்னின.
இறந்தவர்களிலிருந்து
ஹிட்லர் எழுந்து வந்தான்
மீண்டும் ஒரு கைத்தட்டல்
தேவைப்படுகிறது அவனுக்கு.
வலிமையான ஆரிய ரத்தத்தைப்
புகழ்ந்து பேசுகிறான் அவன்.
அவனது
முன்னாள் நண்பர்களைக் கொல்ல
உரிமைதரும் அந்த ரத்தம்
ஒரு போதையூட்டும் பானம்.
கறுத்த திராவிடன்
மகளை அணைத்து
மடியில் கிடத்திச் சொல்கிறான்:
“கண்ணுறங்கு, மகளே,
கண்ணுறங்கு.”

(பெண்வழிகள் மலையாளக் கவிதைகள் - தமிழில்: சுகுமாரன்)

நன்றி - கவிஞர் சுகுமாரன் & காலச்சுவடு

Read more...

நேரமில்லை - பூங்குழலி

>> Monday, October 5, 2009

நேரமில்லை!

அட! என்ன வாழ்க்கை இது!
நேரமில்லை! நேரமில்லை!
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை!

மர நிழலில் இளைப்பாறி
மந்தைகளாய் சில நிமிடம்
வெற்றுவெளியில்
விழியை விட்டு வைக்க நேரமில்லை!

பயணிக்கும் பாதையில் விளையாடிய சிறு அணில்கள்
கவ்வி வந்த விதையோடு
தோட்டத்தில் மறைந்து விட்டால்
எந்த புல்லில் ஒளித்திருக்கும்
என எட்டிப் பார்க்க நேரமில்லை!

சல சலவென்று ஓடி வந்து
நிலம் நிறைக்கும் நீர் மடியில்
இரவில் கொட்டி விட்ட விண்மீன்கள்
பகலில் நின்று பார்க்க நேரமில்லை!

காதல் வீசும் வேல் விழியால் பாவை
ஒரு கணை தான் வீசிப் போக
மறுபார்வையில் சில பதில்கள்
சொல்லி வைக்க நேரமில்லை!

மண்தொட்ட அவள் பாதம்,
நடப்பதே அழகென்றால்
அவை நடனமாடும் அழகுதனை
பார்த்துச் செல்ல நேரமில்லை

அவள் விழி துவங்கிய புன்னகையும்
கன்னத்தில் வடிந்து வந்து
கடைவாய் ஓரம் தேங்கத் துவங்கும் வரையும்
காத்திருக்க நேரமில்லை!

என்ன வீணான வாழ்க்கை இது !
நேரமில்லை! நேரமில்லை !
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை !

- பூங்குழலி


Leisure
by William Henry Davies

What is this life if, full of care,
We have no time to stand and stare.

No time to stand beneath the boughs
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars like skies at night.

No time to turn at Beauty's glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouth can
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.

Read more...

இணைந்து நடத்தல்

>> Monday, September 28, 2009

ஹிந்தியில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளர்களில் ஒருவரான வினோத் குமார் ஷுக்லா நாவல், சிறுகதை, கவிதை என பல நூல்களை வெளியிட்டுள்ளார். இவரின் Naukar Ki Kameez (The Servant's Shirt) என்ற நாவல் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. Deewar Mein Ek Khirkee Rahati Thi என்ற நாவல் A Window Lived in a Wall என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலுக்காக 1999 ஆண்டில் சாகித்ய அகாதமி விருது பெற்றார். இவரின் சில கவிதைகள் Poetry International, Pratilipi போன்ற தளங்களில் வாசிக்க கிடைக்கின்றன. இவரின் 'A MAN HAD SAT DOWN IN DESPERATION' என்ற கவிதையை மொழிபெயர்த்து இடுகின்றோம்.


இணைந்து நடத்தல்

விரக்தியில் சரிந்து
வீற்றிருந்தான் ஒருவன்
அவனை அறி்ந்திலேன் எனினும்
விரக்தியை அறிவேன்
ஆதலினால் அவனிடம் சென்று
கரத்தை நீட்டினேன்.
கரத்தைப்பற்றி எழுந்தானவன்.
என்னை அறிந்திலையெனினும்
நீளுமென் கரத்தை அறிவான் அவன்.
இணைந்தே நடந்தோம் நாங்கள்
ஒருவரையொருவர் அறிந்திலையெனினும்
இணைந்து நடப்பதைப்பற்றி
அறிந்திருந்தோம்.

***

A Man Had Sat Down in Desperation

A man had sat down in desperation
I did not know the man
But I knew the desperation
So I went to him
And extended my hand
Holding my hand, he rose
He did not know me
But he knew the extending of my hand
We walked together
We did not know each other
But we knew walking together.

Read more...

நெஞ்சின் அலைகள் – ஜெயபாரதன்

>> Sunday, August 30, 2009தமிழின் முதல் குறிப்பிடத்தகுந்த அணுசக்தி நூலை எழுதியவரும், இந்தியாவில் முதன்முதலாக இலக்கியத்திற்கான நோபல் பரிசபெற்ற கவிஞரும் படைப்பாளியுமான இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழாக்கம் செய்தவருமான ஜெயபாரதன்
தமிழில் விஞ்ஞானம் சார்ந்தும் மொழிபெயர்ப்பு சார்ந்தும் பல பெரும் பணிகளை செய்துவருபவர். மதுரையில் பிறந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியா மற்றும் கனடாவிலுள்ள அணுமின் சக்தி நிலையங்களில் உயர் பதவிகளில் வகித்தவர்.

அவரின் தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு எழுந்து நீராடிப் பாரதியாரின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ்ப் பற்றும் அவரிடம் பதிந்துவிட்டன.

இவரது வலைதளமான 'நெஞ்சின் அலைகள்' என்பதிலும் திண்ணை வலைப் பதிவிலும் அண்டவெளிப் பயணங்கள் பற்றியும் அணுசக்தி பற்றியும் விஞ்ஞான மேதைகளைப் பற்றியும் முன்னூறிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றில் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.

* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ?
* பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
* ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
* இந்தியாவின் முதல் விஞ்ஞானத் தமிழ்ப் பெண்மணி
* கணித மேதை ராமானுஜன்
* முதல் விஞ்ஞானி கலிலியோ
* விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர்
* விஞ்ஞானி ஜெயந் நர்லிகர்
* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

இதுவரை அவரின் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா

ஜெயபாரதனின் 'அணுசக்தி' நூலில் அணுசக்தியின் ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் தயக்கமின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்களும், எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றிய விபரங்களும் உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.


'வானியல் விஞ்ஞானிகள்' என்ற அவரது இரண்டாம் நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர், மேலும் சிலரின் விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன.

இவர் பல நாடகங்களையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் உருவான படைப்புகள் :

1. தாகூரின் கீதாஞ்சலி மற்றும் பிற கவிதைகள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. பாப்லோ நெருடாவின் கவிதைகள்
4. ஷேக்ஸ்பியரின் கவிதைகள், ஜூலியஸ் சீஸர், ஆண்டனி & கிளியோபாத்ரா ஆகிய நாடகங்கள் 5. பெர்னாட்ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா, உன்னத மனிதன் ஆகிய நாடகங்கள்
6. காற்றினிலே வரும் கீதங்கள் என மீராபாயின் பாடல்கள்
7. எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள்
8. ஆப்ராஹாம் லிங்கன் பற்றிய வரலாற்று தொடர் நாடகம்
9. 'சாக்ரடிஸின் மரணம்' என்ற மூவங்க நாடகம்
10. சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)
11. நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்)
12. எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)
13. பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
14. உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்)

இவை மட்டுமல்லாமல் "சீதாயணம் (ஓரங்க நாடகம்), முக்கோணத்தில் மூன்று கிளிகள் (குறு நாவல்), முடிவை நோக்கி, ஒரு பனை வளைகிறது, என் விழியில் நீ இருந்தாய், எமனோடு சண்டையிட்ட பால்காரி" ஆகிய சிறுகதைகளையும், பல கவிதைகளையும் இயற்றியுள்ளார்.

சீதாயண நாடகத்தைப் பற்றி ஜெயபாரதன் குறிப்பிடுகையில் :

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. "

'உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று!' .

"மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்றெழுந்த துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்."
என்று கூறுகிறார்

தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களுக்கு மூலத்தில் இல்லாத தலைப்புக்களை அவரே அளித்துள்ளார். அம்மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து ஒரு பாடலை இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

கீதாஞ்சலி 35
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்


விழித்தெழுக என் தேசம்!
———————————
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!


- ஜெயபாரதன் (jayabarat@tnt21.com)


*****************************************
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-
Into that heaven of freedom, my Father, let my country awake.

- Rabindranath Tagore

Read more...

தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்

>> Thursday, August 20, 2009

The Sorrow of Children Having Lost Their Streets


Children are no longer seen on our streets
Armored trucks are speeding up
Crushing the dreams of our children

After armed men, their faces
Masked with black cloth
Began to wander about,
Our children lost their streets

Our mothers seeking
To feed their children
Cajoled them they'd be taken
Away by armed men
Should they refuse to eat: After that,
Our streets lost their children

Arms have begun to devour
The magic of our children's universe
The gram seller walks idly about
The streets, wailing. Ice cream vans
Do not tarry at our streets
Street dogs stray freely without fear
There is no one to run after
The landmasters and get into them.

Streets having lost children
Cease to be streets
The smoke of armored vehicles
Glom on to trees like gloom

Kites flail from lampposts
Torn in the wind
Leaves fall off like the twittering
Of sparrows on tree branches
The misery of streets
Having lost children
Oozes in the songs of the old man
Selling balloons and masks

Hot wind absorbs the sighs
Exhaled by the boy confined
Inside his hut under the shade of a tree,
Looking at the chariot he has made
Out of unripe coconuts
His rusty bicycle wheel and its guide stick

Emptiness with wings sheared
Is seated on the swings

The tracks of armed men
Abound in the streets
Where the footprints
Of children are lost

Amidst the noise of speeding armored trucks
Is heard the sobbing sound of a mother
Her child sacrificed to another armored truck…

-Siththaanthan


Sithanthan is a noted poet in the Lankan Tamil literary sphere.

(Translated from Tamil by Thava Sajitharan -
blog: http://sajitharan.blogspot.com/
email: sajitharan@gmail.com )


மூலம்:

(http://tarunam.blogspot.com/)


தெருக்களை இழந்த குழந்தைகளின் துயர்
- சித்தாந்தன்
............................................

எங்கள் தெருக்களில் குழந்தைகளைக்
காணவில்லை
குழந்தைகளின் கனவுகளை மிதித்துக்கொண்டு
இராணுவ வாகனங்கள் விரைந்து செல்கின்றன

முகங்களை கறுப்புத்துணியால் கட்டிய இராணுவர்கள்
நடமாடத் தொடங்கிய பிறகு
குழந்தைகள் தெருக்களை இழந்தன
தாய்மார் இராணுவத்தைப் பயங்காட்டி
உணவூட்டத் தொடங்கிய பிறகு
தெருக்கள் குழந்தைகளை இழந்தன

குழந்தைளின் உலகங்களின் அற்புதங்களை
ஆயுதங்கள் தின்னத்தொடங்கிவிட்டன
சுண்டல்க்காரன் வெறுமனே கூவித்திரிகிறான்
ஜஸ்பழவான்கள் தரிக்காது செல்கின்றன
தெருநாய்கள் அச்சமற்றுத்திரிகின்றன
லான்மாஸ்ரர்களைத் துரத்திச் சென்று ஏற எவருமில்லை

குழந்தைகளை இழந்த தெருக்கள்
தெருக்களாயிருப்பதில்லை

இராணுவ வாகனங்களின் புகை
மரங்களில் இருளாய் படிந்திருக்கிறது

மின் கம்பங்களில் தொங்குகின்ற பட்டங்கள்
காற்றில் கிழிபடுகின்றன
மரக்கிளைகளில் கீச்சிடும் குருவிகளின் குரலாய்
உதிர்கின்றன இலைகள்
பலூனும் முகமூடியும் விற்கும் முதியவனின்
பாடல்களில் வழிகிறது
குழந்தைகளை இழந்த தெருக்களின் துயர்

மரநிழல் குடிசையில் முடங்கிக்கிடக்கும்
சிறுவன்
தனது குரும்பட்டித்தேரையும்
கறள் ஏறிய சைக்கிள் வளையத்தையும்
அதன் ஓட்டு தடியையும்
எடுத்துப்பார்த்து விடும் பெருமூச்சை
உஸ்ணம் நிரம்பிய காற்று குடிக்கின்றது

ஊஞ்சல்களில் குந்தியிருக்கிறது
சிறகுகள் கத்தரிக்கப்பட்ட வெறுமை

குழந்தைகளின் சுவடுகள் தொலைந்த தெருக்களில்
இராணுவத்தடங்கள் பெருகிக்கிடக்கின்றன

விரைந்து செல்லும் இராணுவ வாகனங்களின்
இரைச்சல்களுக்கிடையில் கேட்கிறது
தன் குழந்தையை
இராணுவ வண்டிக்கு காவுகொடுத்த
தாயின் ஒப்பாரி.

Read more...

ஒளியை நோக்கி கிளிகள் - சித்தார்த்

>> Thursday, August 13, 2009

ஒளியை நோக்கி
- யோ ஃபெங் (சீனா)

விளக்கை மறைவிற்கு திருப்பிவிடு
இனி இருள்
யாரது, விட்டில் பூச்சியை தடுத்து
இருளில் வசிக்கப் பழக்குவது?

முடிவற்ற பயிற்சிக்குப் பின்
அதன் சிறகுகள் முறிகின்றன
பறக்கவியலாது
அந்தியை இழுத்தபடி
நத்தையென மெல்ல ஊர்ந்து செல்கிறது
ஒளியை நோக்கி


TOWARD THE LIGHT

Return light to the lampshade
and then it’s dark
Who is it that blocks out a moth
and trains it to stay in darkness?

After endless training
the moth eventually breaks its wings
and is unable to fly
Dragging the dusk
it creeps as slow as a snail toward light

**********


கிளிகள்
– ஆல்பர்ட்டோ ப்ளாங்கோ

நாளெல்லாம் பேசிக்கொண்டிருக்கின்றன.
இருட்டத்துவங்கியதும்
குரல் தாழ்த்தி
தம் நிழலுடனும்
மௌனத்துடனும்
உரையாடுகின்றன.

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
நாளெல்லாம் பேச்சு
இரவினில் துர்கனவுகள்.

அறிவார்ந்த முகத்தினில்
தங்க வளையங்களும்
அட்டகாசமான இறகுகளும்
இதயத்துள் ஓயாத பேச்சும்….

கிளிகளும்
அனைவரையும் போலத்தான்.
சிறப்பாய் பேசுபவை
தனி கூடுகளில்

The Parakeets என்ற மெக்ஸிக்க கவிதையின் ஆங்கிலம் வழியான மொழிபெயர்ப்பு.

The Parakeets
by Alberto Blanco
Translated by W. S. Merwin


They talk all day
and when it starts to get dark
they lower their voices
to converse with their own shadows
and with the silence.

They are like everybody
—the parakeets—
all day chatter,
and at night bad dreams.

With their gold rings
on their clever faces,
brilliant feathers
and the heart restless
with speech...

They are like everybody,
—the parakeets—
the ones that talk best
have separate cages.

தமிழில் : சித்தார்த்

Read more...

நானூறு புறத்திலிருந்து 'நான்கள்' - நாகார்ஜுனன்

>> Monday, August 10, 2009

மேற்குலகத்தின் இருத்தலியம், மார்க்சியம், குறியியல் போன்ற சிந்தனை முறைகள் மற்றும் பல கோட்பாட்டுக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள் எண்பதுகளில் வெளியாகத் தொடங்கின. அப்போது அமைப்பியல், பிறகான-அமைப்பியல் மற்றும் பிறகான-நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டுக்கட்டுரைகளும் அறிமுகங்களையும் தமிழில் கொண்டுவந்தவர்களில் ஒருவர் நாகார்ஜுனன் என்கிற ரமேஷ். தவிர, அவற்றின் தர்க்கங்களை தமிழ்ப்படைப்புகளோடு ஒட்டி உரையாடல்களையும் நடத்தியிருக்கிறார். அதிகார உறவுநிலைகள் குறித்த ஆய்வுகளைச் செய்த பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் பூக்கோவின் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை இவர் தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார். Discourse என பூக்கோ அறிமுகப்படுத்திய ஒரு சொல்லாட்சியை தமிழில் 'சொல்லாடல்' என்பதாக இவர் செய்த மொழியாக்கம், இன்று சாதாரணச் சொல்வழக்கிலும் பயன்படும் ஒன்றாக மாறியுள்ளது. இவரைக் கேட்டால், தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஏற்கனவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்!

தவிர, பிரெஞ்சு மொழி கற்று அதிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்து இவர் பதிவுகளில் வெளியிட்ட, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த
ஆர்தர் ரைம்போவின் கவிதைகள் தமிழில் புதிய கவிதைநடையுடன், கவிதைக்கான இசைத்தன்மையுடன் கூடிய சங்கப்பாடல்களின் சொல்லாட்சிகளைக் கொண்ட ஓர் அசலான தமிழ் வடிவத்தில் இயங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக்கவிஞர் சில்வியா பிளாத்தின் கவிதைகளையும்தான். தற்கொலை செய்துகொண்ட இந்தக்கவிஞரின் 36 கவிதைகளை இவ்வாண்டு தொடங்கி சுமார் நான்கு மாத காலத்தில் தமிழாக்கியிருக்கிறார். இலங்கைத்தீவில் போர் உச்சக்கட்டத்துக்கு வந்து ஈழத்தில் நடந்த பெரும் படுகொலைகள், அழிவுகள் பற்றிய செய்திகள் வரவர அவற்றுக்கு முகம் கொடுக்கும் ஆய்வுகளை ஒருபுறம் செய்துகொண்டே, சில்வியா ப்ளாத்தின் கவிதைகளையும் தமிழாக்கியதாக கூறும் இவர், அப்போது வெவ்வேறான, சிக்கல்மிக்க, பேதலித்த, பித்த உணர்வுகளை அடைந்தேன் என்கிறார். இவற்றுக்கும் கூட சங்கப்பாடல் போன்ற அமைப்பை நாடியிருக்கிறார்.

பிறகு post-marxist and post-politics கோட்பாட்டாளரான ஜோர்ஜியோ அகம்பென் மற்றும் அமைப்பியல்- மானுடவியலை உருவாக்கிய கிளோத் லெவி-ஸ்டராஸ், நவீனக் கோட்பாட்டாளர்கள் புரூனோ லத்தூர் மற்றும் மிஷெல் செர் போன்றவர்களின் கோட்பாட்டுக் கட்டுரைகளையும் தொடர்ந்து தமிழாக்கி, தற்காலத்திய சிந்தனைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். தவிர, இந்தச்சிந்தனைகளை முன்வைத்து புதிய கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதுகிறார். சில வேளை, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து நேரடித் தமிழாக்கங்களை முயன்றும் வருகிறார். தமிழில் தாம் விரும்பும் ஆக்கங்களை ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் செய்ய முயலப்போவதாகவும் கூறுகிறார். இது தமிழுக்கு இவர் செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.

நாகார்ஜுனன், இளமைப்பருவத்தில் பொறியியல் படித்து அணுசக்தித்துறை தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்திய அணுசக்தித்திட்டத்தில் பொதிந்திருந்த அணுஆயுதத் தயாரிப்பு தன் மனசாட்சிக்கு விரோதம் என்பதால் அந்தப் பணியைத் துறந்து பிறகு, பத்திரிகைத்துறையில் ஈடுபட்டவர். 

Deccan Herald, UNI செய்தி நிறுவனங்களில், பத்திரிகைகளில் பெங்களூர், சென்னை, டில்லி ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு பத்தாண்டுகள் முன்பு லண்டன் சென்று BBC வானொலி உலக சேவையில் ஆறாண்டுகள் பணியாற்றிவிட்டு தற்சமயம் Amnesty International - சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய துணைவியார், காலனியக்கால இந்தியாவில் விஞஞானத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்பவர். மகள் இளநிலை அறிவியல் மாணவி. இவர்களுடன் லண்டன் நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாகார்ஜுனன் வேகமாக மலையாள மொழியும் பயின்றுவிட்டார். பத்தாண்டுகள் தமிழில் எழுதாமலிருந்த இடைவெளியில் இப்படிப் பல மொழிகளைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பிறகு கடந்த ஒன்ற்ரை ஆண்டுகளாக தமக்கான வலைத்தளம் தொடங்கி அதில் நிறையத் தமிழாக்கங்களைப் பதிந்து வரும் நாகார்ஜுனன் அண்மையில் ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார்.


படிகள், மீட்சி உள்ளிட்ட தமிழில் வெளிவந்த முக்கிய ஆய்வுப் பத்திரிக்கைகளில் இணைந்து செயல்பட்டவர். வித்யாசம் என்கிற பத்திரிக்கையை ஆசிரியர் குழுவில் இருந்து நடத்தியவர். அந்தக்காலகட்டத்தில் தமிழில் புதிய கதைசொல்லும் உத்தியை உருவாக்கும் நோக்கில் கர்நாடக முரசும் தமிழ் இலக்கியம் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற தலைப்பில் நான்-லீனியர் வகை சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு கலாச்சாரம் அ-கலாச்சாரம் எதிர்-கலாச்சாரம், திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டைன், திணை இசை சமிக்ஞை - நளிர் - ஆகியவையும் ஊழிக்குப்பின் - ஆர்தர் ரைம்போ கவிதைகள் என பிரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழாக்கமான கவிதை நூலும் ஆகும்.

நவீன கோட்பாடுகளின் இணைய தள இதழான C-Theory-யில் இந்தியாவின் அணுவெடிப்பு சோதனைகள் பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை India's Nuclear Blasts - Siddharta's Betrayal - Ramesh Gopalakrishnan. பத்தாண்டுகள் முன்பு வெளியானது இந்தக்கட்டுரை. இந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த சிந்தனையாளர் மறைந்த ழான் போத்ரியார் மற்றும் பேராசிரியர் ஆர்தர் குரோக்கர் இருவரும் வாசித்து அலசிய பிறகே அவர்கள் வெளியிட்டதாக நாகார்ஜுனன் கூறுகிறார்.

இவருடைய வலைத்தளம் - திணை இசை சமிக்ஞை

தமிழை அடுத்ததளத்துக்குக் கொண்டுசெல்லும் முனைப்புள்ள இவரிடம் பிரெஞ்சு மொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழாக்கங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது தமிழ் மொழிபெயர்ப்புலகில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய வியஷயமாகும். நாகார்ஜுனனின் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் தமிழாக்கிய கவிதை ஒன்றை அவரது பதிவிலிருந்து மீளபதிவாக வெளியிடுவதில் பெருமை அடைகிறது எட்டுத்திக்கும்.
[Doom+of+Exiles.jpg]
Doom of Exiles
Now we, returning from the vaulted domes
Of our colossal sleep, come home to find
A tall metropolis of catacombs
Erected down the gangways of our mind.

Green alleys where we reveled have become
The infernal haunt of demon dangers;
Both seraph song and violins are dumb;
Each clock tick consecrates the death of strangers

Backward we traveled to reclaim the day
Before we fell, like Icarus, undone;
All we find are altars in decay
And profane words scrawled black across the sun.

Still, stubbornly we try to crack the nut
In which the riddle of our race is shut.

புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்

ஈண்டு
அதிபேருறக்கம் எமதின்
வணர் கும்மட்டம் பலதினின்றும்
வீடு திரும்பக் காண்போம்,
மனம் எமதின்
குறுவழி பலதினூடே
எழும்பிச் சுருங்கைநிறை
பேருயர் நகரம்.

அன்று
யாம் களியாட்டமிட்ட
பசும் நடைவழி பல,

ஈண்டு
அபாய ராட்சதக்கணங்கள்

நடமாடும் நரகம்.

யூதத்தேவதை, வயலின் பல
இரண்டும் ஊமையாக,

நாள் மீட்கப் பின்செல்வோம்
ஐகாரஸெனக் கழன்று வீழுமுன்.

பாழ்பட்ட பலிபீடம் பல,
ஒளிஞாயிறதன் குறுக்கே
கறுப்பாய்க் கிறுக்கிய
கெட்ட வார்த்தை பல
மாத்திரம்
காணும் யாம்.

இருந்தும்
எம் இனமெனும்
புதிர்க்காய் மூடும்
ஓடுடைக்கப் பிடிவாதமாய்
முயலும் யாம்.

--- Sylvia Plath, The Doom of Exiles, 1954.

குறிப்பு: ஜமாலன் - ஆகஸ்ட் ஒன்பது 2009.

Read more...

தமிழ் மொழிபெயர்ப்பு 'மீட்சி'-யாளர் பிரம்மராஜன்

>> Monday, August 3, 2009

தமிழ் சிறுபத்திரிக்கைகள் மற்றும் புதிய சிந்தனைகளின் காலமாக கருதத்தக்க 80-களில் வெளிவந்த மிக முக்கிய சிறுபத்திரிக்கை மீட்சி. கலை மற்றும் கருத்துக்களை முன்னெடுக்கும் அறிவிப்புடன் வந்த மீட்சி, ஐரோப்பிய மற்றும் லத்தின் அமேரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய சிற்றிதழ் ஆகும். ஒருவகையில் தமிழில் ஐரோப்பிய, லத்தின் அமேரிக்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வழியாக மொழிபெயர்ப்பிற்கான ஒரு மீட்சியை ஏற்படுத்தியது அப்பத்திரிக்கை எனலாம். அதன் ஆசிரியர் பிரம்மராஜன் என தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ராஜாராம் பிரம்மராஜன். ஆங்கில இலக்கியப் பேராசிரியரான இவர் தமிழின் நவீனத்துவத்தின் மற்றும் நவீன கவிதையின் தவிர்க்கவியலா ஒரு படைப்பாளி ஆவார். டி.எஸ். எலியட் துவங்கி எண்ணற்ற கவிதைகளை இன்றுவரை தமிழில் மொழிபெயர்த்தும், அறிமுகப்படுத்தியும் பெரும்பணி ஆற்றிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கவிதையின் நவீனக்குரலை முன்வைத்து இவர் எழுதிய பல கவிதைகள் புதிய தமிழ்க் கவிஞர்கள் பலருக்கும் ஆதர்சமாக உள்ளது.

தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக பணியாற்றிவருகிறார். அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபக சிற்பங்கள் மற்றும் புராதன இதயம் என்பன இவரது கவிதை நூல்கள் ஆகும். பல நவீன கவிதை உத்திகளையும், படிமங்களையும் தமிழுக்க அறிமுகப்படுத்தியவர் இவர். புதுக்கவிதை எனப்படும் நவீனக் கவிதைக்கான கோட்பாட்டு அடிப்படைகளை தந்த எஸ்ரா பவுண்டு பற்றி அறிமுகம், பதினைந்து ஐரோப்பிய நவீனத்துவவாதிகள் மற்றும் நாடோடி மனம் போன்ற முக்கியமான அறிமுக நூல்களை எழுதி உள்ளார். நவீன மனத்தின் இருத்தலியல் துயரங்களைச் சொன்ன ஆல்பர் காம்யூவின் எழுத்துக்கள், உலக கவிதைகள், உலக இலக்கிய முன்னோடியும், உலகின் தற்போதைய நவீன படைப்பாளிகள் பலரின் ஆதர்ச படைப்பாளியும் ஆன ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே கதைகள், நவீன நாவல்கள் பலவற்றை எழுதிய சிறந்த கதைசொல்லியான இடாலோ கால்வினோ கதைகள் மற்றும் ஐரோப்பிய இலக்கிய உலகை லத்தின்-அமேரிக்க மற்றும் கீழ்திசை நாடுகளின் இலக்கியங்கள், நம்பிக்கைகள் நோக்கி திருப்பிய காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஒரு நூறு வருசத்து தனிமை' (One Hundred years of Solitude) போன்றவை ஆங்கிலத்திலிருந்த தமிழில் இவரால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமகால உலக கவிதைகள், வார்த்தையின் ரசவாதம் மற்றும் ஜென் மயில் இவரது சமீபத்திய படைப்புகள். ஐரொப்பிய மற்றும் லத்தின்-அமேரிக்க எழுத்தாளர்கள் பற்றிய இவரது சிறப்பான அறிமுகத்தையும், படைப்புகளையும் இவரது இந்த பதிவில் படிக்கலாம். பிரம்மராஜன் பற்றி தாஜ்

தொடர்ந்து தமிழில் நவீனக் குரலை, இலக்கியத்தை, கவிதையை ஒலித்துக் கொண்டிருக்கும் பிரம்மராஜன, தமிழ் இலக்கிய உலகிற்கு தனது மொழிபெயர்ப்புகள் மூலம் செய்துள்ள அளப்பரிய பணியை மனதில்கொண்டு எட்டுத்திக்கும் அவரது அறிமுகத்துடன் அவரது ஒரு மொழிபெயர்ப்பு கவிதையை முன்வைத்து தனது பயணத்தை தொடர்கிறது.

குறிப்பு - ஜமாலன் - 02/08/2009

************************************

ஸ்பரிசம்

எனது கைகள்
உனது உயிரின் திரைகளைத்திறந்து
உடுத்துகிறது உன்னை
இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில்
உனது உடல்களின் உடல்களைக் களைந்து
எனது கைகள்
கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென
வேறொரு உடலை
- பிரம்மராஜன்

Touch

My hands
open the curtains of your being
clothe you in a further nudity
uncover the bodies of your body
My hands
invent another body for your body

Octavio Paz

Translation by Eliot Weinberger

Read more...

அகம் மற்றும் புறப்பாடல்கள் ஆங்கிலத்தில்..

>> Sunday, July 26, 2009

223. குறிஞ்சி

‘பேர் ஊர் கொண்ட ஆர்கலி விழவில்
செல்வாம் செல்வாம்’ என்றி; அன்று, இவண்
நல்லோர் நல்ல பலவால் தில்ல;
தழலும் தட்டையும் முறியும் தந்து, ‘இவை
ஒத்தன நினக்கு’ எனப் பொய்த்தன கூறி,
அன்னை ஓம்பிய ஆய் நலம்
என்னை கொண்டான்; யாம் இன்னமால் இனியே.

வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டு. வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி கூறியது.

– மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன்

223. Kurunthokai

Once you said
let’s go, let’s go
to the gay carnival in the big city;
that day
the good elders spoke of many good omens
for our going.
But he waylaid me,
gave me a sling shot and rattles
for scaring parrots,
and a skirt of young leaves
which he said look good
on me,
And with his lies
he took the rare innocence
that mother has saved for me.
And now I am like this.

Poet: Maturaikkataiyattar Makan Vennakan
Translated by A.K.Ramanujan


74. புறநானூறு

குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
‘ஆள் அன்று’ என்று வாளின் தப்பார்;
தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறு பதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணிய,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ, இவ் உலகத்தானே?
திணை பொதுவியல்; துறை முதுமொழிக் காஞ்சி.

சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப் புறத்துப் பொருது, பற்றுக் கோட்பட்டு, குடவாயில் கோட்டத்துச் சிறையில் கிடந்து, ‘தண்ணீர் தா’ என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக் கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு.

74. Purananuru

If a child of my clan should die,
if it is born dead,
a mere glob of flesh
not yet human,
they will put it to the sword
to give the thing
a warrior’s death.
Will such kings
bring a son this world
to be kept now
like a dog at the end of a chain
who must beg,
because of fire in the belly,
for a drop of water
and lap up a beggar’s drink
brought by jailers,
friends who are not friends?

Ceramaan Kanaikkal Irumporai fought with Colan Cerikanan on the field of Tirupporppuram, was captured, imprisons at Kutavayir Kottam (fortress), asked "Give me water", did not get it, then [When he asked again] did get it, kept it in his hand without drinking, and died. This is his song as he died. (colophon from Purananuru by George Hart and Hank Heifetz)

Translated by A.K.Ramanujan


நன்றி : http://karkanirka.wordpress.com/

Read more...

ஏ. கே. ராமானுஜன் – தமிழின் “அகநிலப்பரப்பை” புறத்திற்கு எடுத்துச் சென்றவர்.

ங்கிலேயக் காலனியம், தங்கள் தேசத்து மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் கொண்டு “இந்தியவியல்” (Indology) என்கிற ஒரு ஆய்வுப் புலத்தைக் கட்டமைத்தது. இந்த ஆய்வுப்புலம் இந்திய மொழிகளில் குறிப்பாக வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்த எண்ணற்ற புராணங்கள், வேதங்கள் மற்றும் இலக்கியங்களை மொழிபெயர்த்து ஆங்கில உலகிற்கு இந்தியா பற்றிய ஒரு அறிமுகத்தை செய்வித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ஆய்வாளர்கள், அறிவுஜிவிகள் ஆங்கிலம் படித்து, இந்தியா பற்றி ஆய்வுகளையும், இந்திய இலக்கியங்களையும் மொழிபெயர்ப்புகள் வழியாக வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு முயன்றனர். இத்தகைய இந்தியவியல் ஆய்வுப்புலத்தின் மிக முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர் ஏ.கே. ராமானுஜன். இவர் வடமொழியில் அதீத கவனம் செலத்திவந்த மேற்கத்திய ஆய்வுப் புலத்தை தென்னிந்திய இலக்கியங்கள் நோக்கி திருப்பிவிட்டவர் என்றால் மிகையாகாது.தெற்காசிய ஆய்வியலில் குறிப்பிடத்தகுந்தவரும், இந்தியாவின் தென்பகுதிகளின் இலக்கியங்களையும், இந்திய நாட்டுப்புறக் கதைகளையும் விரிவாக ஆய்வு செய்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தென்னிந்தியா பற்றிய கவனத்தை உலக அறிவுச்சுழலில் உருவாக்கிய ஒரு முக்கிய இலக்கிய, மொழியியல், ஆய்வாளர், கவிஞர் ஏ.கே. ராமானுஜன்.1929-ல் மைசூரில் பிறந்தவர். 1959-ல் அமேரிக்காவிற்கு ஆய்விற்காக சென்றவர். 1993-ல் இறக்கும்வரை பல பல்கலைக்கழகங்களில் ஆய்வாளராக, விரிவுரையாளராக இருந்தவர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய அறிவுஜீவிகளில் ஒருவரும், பல பல்கலைக் கழகங்களில் இந்திய குறிப்பாக தென்னிந்திய மொழிகள் பற்றியும், அவர்களது இலக்கியம், வாழ்வியல் பற்றியும் ஆய்வுப்புலங்களையும், தென்னிந்திய மொழிகளுக்கான கவனத்தையும் உருவாக்கியவர். அமேரிக்க-ஐரோப்பிய தத்துவங்களும், அதன் யுத-கிறித்துவ அடிப்படைகளும் உலக சிந்தனை முறையில் செலத்தும் ஆதிக்கத்திற்கு எதிராக, கீழ்திசையியல் சுதந்திரச் சிந்தனைமுறையை முன்வைத்தவர்.ஆங்கிலத்தில் எழுதியவர் என்றாலும், தான் பிறந்த நிலத்தின் மொழியான கன்னடம் மற்றும் தனது குடும்ப மொழியான தமிழ் ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்ததால், அம்மொழிகளின் முக்கிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, தமிழின் சங்க இலக்கியங்களான அகநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய நாட்டுப்புறக் கதைகளை தானே தொகுத்து அவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மொழியியல் குறித்து ஆய்வுகள் செய்துள்ள ஒரு மொழியியல் அறிஞர். சிவம் என்கிற புராணிகம் பற்றிய இவரது ஆய்வு இந்திய புராணிக ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஐரோப்பிய-அமேரிக்க மையவாத காலனிய சிந்தனை கட்டமைக்கும் ஒருபடித்தான (Streotype) (கருப்பர்கள், காட்டுமிராண்டிகள், பழமைவாதிகள், நாகரீகமற்றவர்கள் இப்படியான) ஆசிய-இந்திய காலனிய பிம்பத்திற்கு எதிராக, சுதந்திரமான கீழ்திசைவியல் சிந்தனை பற்றிய கருத்தாக்கத்தை முன்வைத்தவர். “இந்திய வழியில் சிந்திப்பது” (Is There an Indian Way of Thinking?) என்பதான பின்காலனிய ஆய்வியல் கருத்தாக்கத்தை உருவாக்கியவர். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தால் முழுத்தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இவரது சில கவிதைகள் பின்காலனியக் கருத்தாக்கமானcover கலப்பினம் (hybridity), போலச்செய்தல்-பகடி (mimicry) என்பதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதை ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். இவர் குறித்த சுருக்கமான அறிமுகத்தை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம். இவரது சில கவிதைகளை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்.

இவரது நாட்டுப்பறவியல் நூலான Folktales from India, Oral Tales from Twenty Indian Languages. இங்கு இணையத்தில் வாசிக்க கிடைக்கும். இவரது நூல்கள் சில தமிழில் வெளிவந்துள்ளது.எஸ். ராமகிருஷ்ணன் ஏ.கே. ராமானுஜன் பற்றி எழுதிய விரிவான அறிமுகம் உயிர்மை இதழில் வெளிவந்துள்ளது.எட்டுதிக்கும் ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பு முன்னொடிகளுக்கு செய்யும் கௌவரமாக, அவரது மொழிபெயர்ப்பு ஒன்றை மீள்பதிவு செய்து தனது பணியைத் துவக்குகிறது.– குறிப்பு – ஜமாலன். – 26/07/2009

Read more...

அறிமுகம்

>> Saturday, July 25, 2009

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை தானே உயர்த்திக்கொண்டு வாழும் "கிணற்றுத்தவளை" வாழ்வைவிட்டு வெளியேறி உலகின் எட்டுத்திக்கும் சுழற்றியடிக்கும் காற்றை, தென்றலை சுவாசிக்க வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்துகொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டுவருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழிபெயர்ப்பு.

இவ்வலைப்பதிவு மொழிபெயர்ப்பிற்காகவென தனிக்கவனம் செலுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. நண்பர்கள் இப்பணியில் இணைந்து செயல்பட ettuththikkum@gmail.com மின்அஞ்சலில் தொடர்புகொண்டு தங்களது மொழி பெயர்ப்புகளை வலை ஏற்றலாம். விதிமுறை என்று எதுவும் இல்லை. அதிகபட்சம் இலக்கியம், கலை படைப்புகள் மற்றும் அவை சார்ந்த கோட்பாடுகள், உரையாடல்கள் மற்றும் விவாதங்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அல்லது கட்டுரையை மூல மொழியுடன் அனுப்பினால் அதனை மொழிபெயர்ப்பில் திறமை உள்ள நண்பர்களிடம் தந்து சரிபார்த்து வெளியிடப்படும்.

  2. அரசியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளை தவிர்ப்பது நலம். கலை, இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்துதல் நலம்.

  3. கூடுமானவரை ஆங்கிலம்-தமிழ் அல்லது தமிழ்–ஆங்கிலம் என இருந்தால் சிறப்பு. பிறமொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை அம்மொழிதெரிந்த நண்பர்களிடம் தந்து சரிபார்க்கப்பட்டே வெளியிடப்படும். அதற்கு சற்று தாமதமாகலாம்.

  4. வருட இறுதியில் சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து நூலக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதனால் கூடுமானவரை காப்பிரைட் பிரச்சனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பது நல்லது. அப்படி மொழிபெயர்த்துவிட்டாலும், அதற்கான காப்பிரைட் பெற சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நாம் முயற்சிப்போம்.

மொழிபெயர்ப்பிற்கான ஒரு வலைப்பதிவாக இதனை துவக்கியுள்ளோம். துவக்கமாக எங்களால் இயன்ற மொழிபெயர்ப்புகளை இதில் வெளியிடுகிறோம். நண்பர்கள் தங்களது மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அல்லது இதில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளையும் திருத்தலாம். இந்த கூட்டமுயற்சியால் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை" தமிழில் கொண்டுவருவது நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பயனுடையதாக அமையும்.

சிற துளிகள்தான் பெருவெள்ளத்திற்கு காரணம் என்பது நமது மூதாதைகள் கண்ட முதுமொழித்தானே….

அன்புடன்

எட்டுத்திக்கும்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP