It was like a stream - Akka Mahadevi

>> Sunday, March 28, 2010

It was like a stream

By Akka Mahadevi

(12th Century)
English version by A. K. Ramanujan

It was like a stream
running into the dry bed
of a lake,
like rain
pouring on plants
parched to sticks.

It was like this world's pleasure
and the way to the other,
both
walking towards me.

Seeing the feet of the master
O lord white as jasmine,
I was made
worthwhile.

**************

மின்னல் புகைப்படம் வரைந்த
பாளங்கள் படர்ந்த ஏரியில் பரவும் சிற்றோடை
முதிர்ந்த விரல்களாய் உலர்ந்த சுள்ளிகள் தாங்கும்
தாவரங்களை நனைக்கும் மழை

இப் பிரபஞ்சத்தின் ஈர்க்கும் இச்சை முகிழ்ப்பும்
பிறிதொரு வழியின் பேராவலும் ஒருங்கே
என் பால் ஊர்வதென

உன் திருத்தாள் கண்ணுற்று என் இருப்பு நிறைந்தது
வெண்மல்லி வடிவான இறைவ

மொழிபெயர்ப்பு : நேசமித்ரன்

Read more...

பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முகமது பஷீர்

>> Monday, March 22, 2010

கள்ளமும் காதலும்
வைக்கம் முகமது பஷீர் பற்றிய அறிமுகம் அதிகம் தேவையில்லை. நாடறிந்த ஒரு முக்கிய எழுத்தாளர். மலையாள புனைவிலக்கியத்தின் ஒரு அழியாச்சுடர். இவரது வாழ்க்கை குறிப்புகளையும் பாராட்டு பரிசகளையும் விக்கியில் இங்கு நீங்கள் அறிந்துகொள்ளலாம். பஷீரின் எழுத்துலகையும் அவரது வாழக்கையும் இனைத்து பேசும் சந்திப்பின் இப்பதிவு அவரை சிறப்பாக அறிமுகப்படுத்துகிறது. பஷீரின் வாழ்க்கை மற்றும் கலைபற்றிய கோட்பாடுகளை விவாதிக்கிறது தீப்பாவையின் இக்கட்டுரை. எளிய மக்களின் வாழ்வை கலையாக்கிய பஷீர் அம்மக்களின் வாழ்வியலை வெளிக்கொண்டுவந்து அம்மக்களின் குரலை பதியவைத்தவர்.

அரசின் அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுத்த ஒரு முக்கியப் படைப்பாளி. அதற்காக பலமுறை சிறை சென்றவரும்கூட. தனது சிறை வாழ்வை ஒரு அற்புதமான காதல் கவிதையாக படைத்தார் மதில்கள் என்கிற நாவலில். மதில்கள் என்கிற பெயரிலேயே அதனை ஒரு திரைக்காவியமாக்கியவர் இந்திய சினிமாவின் ஒரு குறிப்பிடத் தகுந்தவரும், உலக அளவில் பேசப்பட்ட இயக்குனரான அடூர் கோபாலகிருஷ்ணன். மம்முட்டி பஷீர் பாத்திரம் ஏற்று நடித்த அப்படம் தேசிய விருதையும் வேனிஷ் விருதையம் பெற்றது. பஷீரின் எழுத்துக்கள் மற்றும் இந்நாவல் பற்றி பிரவீன் குமார் எழுதிய இக்கட்டுரை மிகச்சிறப்பான அறிமுகத்தை தரக்கூடியது. விடுதலை சுதந்திரம் என்பதுகூட ஒருவனுக்கு மதில்களாகிவிடும் குறியீட்டைக் கொண்ட அப்படம் விடுதலை என்பது என்ன? என்கிற கேள்வியை எழப்பி நிற்கிறது. நேசிக்கும் ஒன்றிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒரு மனிதனுக்கு விடுதலை என்பது சொர்க்கமல்ல நரகம்தான் என்பதை சொல்லும் படம்.

இக்கதையும் காதல் பற்றிய ஒரு புனைவுதான் என்றாலும், இந்த காதலில் உள்ள யதார்த்த தன்மை, பலரும் அனுபவமாகி உள்ள ஒன்றுதான் என்றாலும், இதற்குள் புரட்சியாளன் என்கிற இரட்டைத் தன்மையின் மன முரண்பாடு முக்கியமானது. புரட்சிகர இயகக்கங்கள் அவதானிக்க வேண்டிய பாலியல், காதல், பெண் மற்றும் பெண் உடல் பற்றிய உளவியல் தளத்திலான சிக்கலை பேசுகிறது இக்கதை. கள்ளம் அல்லது களவு அல்லது தமிழன் அற்புதச் சொல்லான களவொழுக்கம் என்பது யாரிடம் இல்லை? யார் அதில் தப்பியவர்? புரட்சி முதல் இலக்கியம் மற்றும் லட்சியம் எல்லாம் இந்த கள்ளத்தின்மேல்தான் கட்டப்பட்டுள்ளது. இந்த கள்ளம் பிறர் பார்க்காதவரை, கள்ளமல்ல அதுதான் காதல். அதனால்தான் சங்கத் தமிழ்காலம் கள்ளம் என்பதை களவொழுக்கம் என்கிற இலக்கிய அந்தஸ்தில் வைத்திருந்ததுபோலும்.

உலக இலக்கியத்திலும், இந்திய இலக்கியத்திலும் குறிப்பிடதக்க இடத்தில் உள்ள வைக்கம் முகமது பஷீரின் இக்கதையை மீள் பிரசுரம் செய்வதில் எட்டுத்திக்கும் பெருமை அடைகிறது.

குறிப்பு : ஜமாலன்
******************************************

பழைய ஒரு சிறிய காதல் கதை - வைக்கம் முஹம்மது பஷீர்
தமிழில் : சுரா

காதல்வயப்பட்டிருந்த கால கட்டத்தில், முன்பு யுகங்களுக்கு முன்னால் என்பதைப் போல நடைபெற்ற… பழைய ஒரு சிறிய காதல் கதையைக் கூறப் போகிறேன். காதலுக்குள் எப்போதும் காமமும் இருக்குமல்லவா? அப்போது மிகவும் இளம் வயது. கோபம், தைரியம்… இளமையின் உஷ்ணத் தில் நான் இருந்தேன். கேள்வி கேட்பதற்கு யாருமில்லை. தாவிக் குதிப்பது… இதயம் காட்டும் வழியில் பயணிப்பது… தெளிவற்ற வசீகரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பசித்துப் பசித்து அப்படியே வாழ்வது… எல்லா வகைப்பட்ட பசியும்… எல்லா வகைப்பட்ட தாகமும்… அவை இல்லாமல் போவதற்கு ஒரு வழியும் இல்லை. யார் மீதோ எதன் மீதோ கோபம் இருந்தது. பயங்கரமான கோபம். எனினும், ஆசையின் அழகான பாதையில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது. எல்லாம் சரியாகும்… சரி செய்வேன். சூடான குருதியில் கழுவி பிரபஞ்சங்களை முழுமையாகப் புதுமையாக்கு வேன். புரட்சிவாதி… கொல்வதற்குத் தயங்காத பயங்கரவாத இயக்கத் தின் தலைவன்… கத்தியையும் ரிவால்வரையும் கையில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த பயங்கர பயங்கரமான காலகட்டமே, உனக்கு வணக்கம்!

பேனாவின் முனையிலிருந்து அன்று நெருப்பு மழை பெய்து கொண்டிருந்தது. சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. வாழ்க்கையின் இலக்கு சம்ஹாரம் செய்வதாக இருந்தது. இந்த லட்சியத்துடன் ஒன்று சேர்ந்த முந்நூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் இருந்தனர். அன்று எங்களுக்கு ஒரு பத்திரிகை யும்… நான்தான் பத்திரிகையின் ஆசிரியர்.

நெருப்புப் பெட்டியைப் போன்று இருந்த சிறிய ஒரு அறைதான் பத்திரிகை அலுவலகம்.

தங்கியிருந்ததும் அங்கேதான். இரவும் பகலும் சிந்தனைதான். எழுத்துதான். இரவும் பகலும் கலந்துரையாடல்கள்… இரவும் பகலும் செயல்பாடுகள்…

என்னுடைய வார்த்தைதான் வேத வார்த்தை… நான் மிகவும் நல்ல மனிதன். மறுக்க முடியாத தலைவன். எனினும், இதயத்திற்குப் பெரிய எரிச்சல். ஒரு அழுகை. சிறிய அளவில் கவலையும் இருந்தது.

பயங்கரவாத செயல்களுக்கு இவை எதுவும் பொருத்தமானவை அல்ல. எனினும், கவலைகள் நிறைந்த பாடல்களைப் பாட வேண்டும் என்று தோன்றும்.

இரண்டு வகைப்பட்ட உணர்ச்சிகள் மனதில். இரண்டும் போராடிக் கொண்டிருக்கின்றன. மொத்தத் தில்- ஒரு மூச்சு அடைப்பதைப் போல.

இப்படித் தோன்றும்போது முற்றத்திற்கு வருவேன். சுவரின் அருகில் சென்று பரந்து கிடக்கும் உலகத்தையே பார்ப்பேன். அப்ப டிப் பார்த்துக் கொண்டு நிற்கும் போது ஒருநாள் அழகான தோற்றத் தைக் கொண்ட ஒரு இளம் பெண் ணைப் பார்த்தேன். அழகான இளம் பெண்… பெண்ணரசி!

முதல் பார்வை…

பிறகு காதல் வலையில் சிக்கு வதற்கு அதிக நிமிடங்கள் தேவைப் படவில்லை. அழகு தேவதையே, தேவீ, உன்னை நான் வழிபடுகி றேன்- மகாமாயே!

இப்படிப் பாடலைப் பாடிய வாறு நான் அவளையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன். வழிபாடுதான்… வழிபாடு!

இந்த விஷயங்கள் எதுவும் அவளுக்குத் தெரியாது. அவள் என்னைப் பார்க்கவே இல்லை.

நான் அவளைப் பார்த்ததே ஒரு எதிர்பாராத சம்பவம்தான். ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியைப் பார்த் தேன். அவளைப் பார்த்துவிட்டேன்!

உடனடியாக அந்த இடம் புண்ணிய இடமாக மாறிவிட்டது. நான் நின்று கொண்டிருந்த இடமா? ஹோ! அவளை நின்று கொண்டே பார்த்த இடம் அல்லவா? புண்ணிய பூமியின் பகுதி!

முழங்கைகள் இரண்டையும் கற்சுவரில் வைத்து, கை விரல்களை தலையின் இரண்டு பக்கங்களிலும் வைத்துக் கொண்டு கிழக்குத் திசையை நோக்கிப் பார்த்துக் கொண்டு நான் நின்றிருந்தேன். சுவரின் அந்தப் பக்கத்தில் வாழை கள் நிறைந்த ஒரு தோட்டம். தோட்டத்தின் எல்லையில் காம்பவுண்ட் சுவர். அதைத் தாண்டி தெற்கு வடக்காக பொதுச்சாலை… சாலையின் அருகில் இரண்டடுக்கு வீடுகள்.

என்னுடைய இடப் பக்கத்தில் கிழக்கு மேற்காக நகரத்தை இரண்டாகப் பிரித்துக் கொண்டு ஓடும் அசுத்தமான ஒரு பெரிய வாய்க்கால். வாய்க்காலின் இரு பக்கங்களிலும் உயர்ந்த கற்சுவர்கள். அந்தக் கரையில் உள்ள கற்சுவரைக் கட்டும் காலத்தில் சுவர் இருந்த வழியில் ஒரு தென்னை மரம் நின்றிருந்தது. தென்னை மரத்து டன் சேர்த்து இருக்கிற மாதிரி சுவரைக் கட்டி விட்டார்கள். காலம் சிறிது கடந்து சென்றதும், அந்த தென்னை மரத்தை வெட்டி னார்கள். அதைத் தொடர்ந்து அந்த வெள்ளை நிறச் சுவரில் ஒரு வெற்றிடம் எஞ்சியது.

அந்த வெற்றிடம் என்று கூறப் படும் இடைவெளி வழியாகத்தான் நான் அவளைப் பார்ப்பேன். சதைப் பிடிப்புடன் பருமனாக இருக்கும் வெளுத்த அழகி… ப்ரேஸியருக்குள் அழுத்தப்பட்டு இருக்கும் கனமான மார்பகங்கள் திரண்டு திரண்டு உந்திக் கொண்டு நின்று கொண்டிருக்கின்றன- உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் வெள்ளை ரவிக்கைக்குள். மெல்லிய ரவிக்கை யின் வழியாக அனைத்தும் நன்றா கத் தெரியும். கூந்தலை அவிழ்த்துத் தோளில் விரித்துப் போட்டுக் கொண்டு அவள் கனவு காண்கிறாள்!

தெய்வமே!

அவளுடைய இனிய கனவு என்னவாக இருக்கும்? என்னைப் பார்க்கவில்லையா? சொர்க்கத்தின் அழகியே, ஏன் இங்கு பார்க்காமல் இருக்கிறாய்?

நான் நின்று இருமினேன். ஒன்றல்ல, பத்தல்ல- இருமல்; இருமல்களின் சிறிய சிறிய மேக கர்ஜனைகள்!

அனைத்தும் வீணாகிவிட்டது. அந்த கனவுப் பேரழகி கேட்க வில்லை. ஏன் கேட்கவில்லை?

அதற்குப் பிறகு அங்கு இருமல் தான் வாழ்க்கை. இருமல்களின் பரவலான போராட்டம்! அந்த புண்ணிய இடத்திற்குச் சென்று நிற்பது, கருத்த இடைவெளி வழியாகப் பார்ப்பது… அவள் அங்கு எங்காவது இருப்பாளா? திடீரென்று பார்த்தால், உடனடியாக இரும வேண்டும்! முறையாக இருமுவதற் காக ஏராளமான இருமல்களை ஸ்டாக் பண்ணி வைத்துக் கொண்டு காத்து நின்றிருந்தேன். சில நேரங் களில் மின்னலைப் போல பார்ப் பேன். அரை டஜன் இருமல்களை ஒவ்வொன்றாக குறுகிய கால அளவில் வெளியே விடுவேன்! ஒரு பயனும் இல்லை. இருமலைக் கேட்கவும் இல்லை. பார்க்கவும் இல்லை. மரணத்தைத் தழுவி விட்டால் என்ன?

இப்படியே கவலை நிறைந்த ஒன்று, ஒன்றரை மாதம் கடந்து சென்றது. அதற்குள் அந்த வீட்டின், அதன் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் வரலாறுகளை நான் தெரிந்து கொண்டேன். குறிப்பிட் டுக் கூறும்படி எதுவும் இல்லை. மானத்துடன் இருக்கும் மானிடர் களின் வீடுகள்.

நான் வழிபடும் தெய்வம் ஒரு வேலைக்காரி. சர்வன்ட்!

அதனாலென்ன? காதலுக்கு ஓலைக் குடிசை என்றும் அரண் மனை என்றும் உள்ள பெரிய வித்தியாசங்கள் ஏதாவது இருக்கிறதா என்ன? காதல் நிரந்தரமானது. புனிதமானது.

ஆனால், அவள் என்னைப் பார்க்கவில்லை. அவளுடைய மன உலகத்தில் நான் தோன்றவே யில்லை.

ஏராளமான இருமல்களின் ஸ்டாக்குடன் நான் நின்று கொண்டிருந்தேன். இறுதியில் நான் முழுமையான ஏமாற்றத் திற்குள்ளானேன். என்னுடைய இருமல்கள் அனைத்தும் இறந்து விட்டன. என்னுடைய உலகம் இருண்டது. இறந்துவிட்டால் என்ன?

ஆச்சரியம்! அவள் என்னைப் பார்த்துவிட்டாள்…! அமிர்த கிரணங்களைப் பரப்பியவாறு உயர்ந்து கொண்டிருக்கும் குளிர் நிலவு என்னைப் பார்த்தது. நான் பார்த்தேன். அவள் பார்த்தாள். நான் பார்த்தேன். அவள் புன்னகைத்தாள். என்னால் புன்னகைக்க முடியவில்லை. புன்னகை என்பது ஒரு பலவீனம் அல்லவா? எனினும், எனக்குள் புதிய ஒரு உற்சாகம் பிறந்தது. இதோ எனக்கு ஒரு புதையல் கிடைத்திருக்கிறது! இறுதியில் என்னுடைய மோகினி மறைந்து போய் விட்டாள். நான் சூனியமாக ஆனேன்.

கவலை நீங்கியது. செயல்களில் அதிகமான உற்சாகம் புரண்டு கொண்டிருந்தது. வாழ்க்கை அழகானதாகத் தோன்றியது.

தினமும் நாங்கள் பார்ப்போம். அவள் புன்னகைப்பாள். நானும் சற்று புன்னகைக்கக் கற்றுக் கொண்டேன்.

காதல் வயப்பட்ட நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. கவித் துவமான நாட்கள்.

அப்படி நாட்கள் போய்க் கொண்டிருந்தபோது ஒரு மாலை நேரம் வந்தது. வானத்திலிருந்து பன்னீர் தெளிப்பதைப் போல கொஞ்சம் மழை பெய்தது. சான்டோ பனியனும் அரை கால் சட்டையும் அணிந்து நான் அந்த கறுத்த இடைவெளிக்கு நேராக வாய்க்காலின் இந்தக் கரையில் நின்று கொண்டிருந்தேன். இடுப் பில் உறை இல்லாத கத்தி இருந்தது. ஒரு தீவிர செயல்கள் செய்பவனிடம் எப்போதும் பயங்கரமான ஆயுதம் இருக்க வேண்டும் அல்லவா?

நான் காதல் தேவதையை எதிர் பார்த்து எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தேன். லாட்ஜுக்கு வருபவர்களும் லாட்ஜில் இருந்து செல்பவர்களும் என்னைப் பார்த் தார்கள். யாராவது வரும்போது “ஒன்றுக்கு’ போவதைப் போல நான் கீழே உட்காருவேன். அப்படி உட்கார்ந்தும் நின்றும் நேரம் சிறிது கழிந்தது. திடீரென்று கறுத்த இடைவெளி வெள்ளை யால், அழகாக நிறைந்தது.

நான் முற்றிலும் சூடாகி விட்டேன். இதயம் தாங்க முடியாத அளவிற்கு… ஓ! வாயில் நீர் வற்றி விட்டது. அப்போது வசீகரமான, இனிய ஒரு குரல்!

“ஏன் மழையில நனைஞ்சுகிட்டு இருக்கே?”

“சும்மா…”

உணர்ச்சிமயமான நிமிடங்கள் நகர்கின்றன. எதைப் பற்றியும் அறியாமல் மனிதர்கள் மின்சார வெளிச்சத்தில் மூழ்கி சாலையின் வழியாகப் போய்க் கொண்டிருக் கிறார்கள். நாற்றமெடுக்கும் வாய்க் காலில் எங்கோ ஒரு தவளையை தண்ணீர் பாம்போ சாரைப் பாம்போ வேறு ஏதோ பாம்போ பிடித்திருக்கிறது. தவளை தாங்க முடியாமல் மரண வேதனையுடன் கத்துகிறது. இருட்டிற்கு அடர்த்தி அதிகமாகிக் கொண்டு வருகிறது. காட்சிகள் மறைந்து கொண்டிருக் கின்றன. அவள் கேட்டாள்:

“”போயாச்சா?”

“”இல்லை. நான் அங்கே வரட்டுமா?”

“எதற்கு?”

“சும்மா!”

“வேண்டாம்!”

“வேணும். நான் வருவேன்!”

“நாய் இருக்கு!”

“பரவாயில்லை!”

“அவர்கள் இந்தப் பக்கம் சாப்பிடுவதற்கு இப்போ வருவார் கள்!”

“பரவாயில்லை. நான் வருவேன்!”

“அய்யோ… வேண்டாம்!”

நிறைந்து நின்றிருந்த வெள்ளை நிறம் போய்விட்டது. இடைவெளி முழுமையாகக் கறுத்தது.

நான் சுவரில் ஏறி உட்கார்ந்தேன். வெளிச்சம் வாய்க்காலில் விழுந்து கொண்டிருந்தது- சுவரின் மேற் பகுதியிலும். நான் வாய்க்காலில் மெதுவாக இறங்கலாம் என்று பார்த்தேன். கால்கள் எட்டவில்லை. கால்களை நீட்டி, கைப்பிடியை விட்டேன். ப்ளும்… முழங்கால் வரை சேறு. இடுப்பு வரை நீர். காட்டுச் செடிகளின் முட்களும் புட்டித் துண்டுகளும் இருக்கின்றன என்று தோன்றுகிறது. பாதங்களில் கற்களை வைத்து கட்டிவிட்டிருப்ப தைப் போல கனமாக இருக்க, நான் முன்னோக்கி நகர்ந்தேன். வாய்க்காலின் நடுப்பகுதியை அடைந்தேன். வெளிச்சத்தில் நான் நன்கு தெரிய நின்றிருந்தேன். புரட்சிவாதி…! ஒரு அடிகூட முன்னால் வைக்க முடியவில்லை. சேற்றில் சிக்கி நின்றிருக்கிறேன். ஆட்கள் பார்ப்பார்கள்! முன் னோக்கி நகர வேண்டுமே! நான் முன்னோக்கி நகர்ந்தேன். நகர்ந்து நகர்ந்து வாய்க்காலின் அந்தக் கரையை அடைந்தேன். நான் மேலே பார்த்தேன். அதிர்ச்சி யடைந்து விட்டேன்!

நீர்ப்பரப்பிலிருந்து வானம் வரைக்கும் என்பதைப் போல சுவர் உயரமாக இருந்தது. என்ன செய்வது? எப்படி ஏறுவது? திரும்பிப் போவது என்றால்…? ச்சே… ஏறிவிட வேண்டும்! கை எட்டாத உயரத்தில் சுவரில் ஒரு சிறிய ஆலஞ்செடி வளர்ந்து நின்றிருந்தது.

அந்த ஆலஞ்செடியை நான் பாய்ந்து பிடித்தேன். பிறகு நான் தெரிந்து கொண்டது- நான் சுவரின் மேற்பகுதியில் இருக்கிறேன் என்ற விஷயம்தான்.

“ஹவ்’ என்று அவள் உண்டாக் கிய ஆச்சரியக் குரல் கேட்டது.

ஆனால், அதற்குப் பிறகும் தூரம் இருந்தது. கீழே குதிக்க முடியாது. தூரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த வீட்டின் அரைச் சுவர் இருந்தது. அது சிறியதாக இருந்தது. பூனையைப் போல சுவரின் வழியாக நான் நடந்தேன். மேற்கு வீட்டின் காலி இடத்தில் இறங்கினேன். அங்கு ஒரு தொழுவம் இருந்தது. அது வளைந்து போகும் போது “கிருகிரா’ என்று இலைகள் சத்தம் உண்டாக்கின. இருட்டில் கால்களை எச்சரிக்கையாக வைத்து… வைத்து… மிகவும் மெதுவாக வைத்து… அரைச்சுவரின் அருகில் சென்றேன்.

அவள் மெதுவாக அந்தப் பக்கம் வந்தாள்.

நான் இரண்டு கைகளையும் நீட்டி அவளின் தோளைப் பற்றி இழுத்தேன். மேலே ஏற்றியபோது கல்லின் ஏதோ முனை பட்டு அவளு டைய ரவிக்கை “பர்ர்ர்’ என்று கிழிந் தது. வெள்ளை நிற மார்பகங்கள்.

தொடர்ந்து என்னுடைய காதலின் கன்னத்தில் இரண்டு பலமான, மிகவும் பலமான அடிகள் கிடைத்தன!

எப்படி என்றால்… “”அய்யோ!… அவர்கள் எல்லாரும் இப்போ சாப்பிடுவதற்காக இந்தப் பக்கம் வருவார்கள். போ!” என்று கூறிய போது, மோசமான கெட்ட நாற்றம் கொண்ட ஒரு காற்று அவளுடைய வாயிலிருந்து என்னுடைய முகத் தில் வந்து பட்டது. என்னுடைய தலை மரத்துப் போனதைப் போல ஆனது.

நான் சற்று விலகி நின்றேன். கொஞ்சம் சிறு சிறு குச்சிகள் ஒடிந்தன. ஒரு நாய் குரைத்தது.

“”போ…” என்று கூறி அவள் அங்கிருந்து சென்றாள்.

பிறகு நாய்கள் குரைக்கும் சத்தம்தான். இந்த அளவிற்கு அதிகமான நாய்களா?

நான் மிகவும் மெதுவாக நடந்து சிறிய சுவரில் ஏறினேன். அங்கிருந்து பெரிய சுவரில். அப்ப டியே சற்று முன்னோக்கி நகர்ந் தேன். அப்போது அந்த சுவரும் கீழே இருந்த முற்றமும் வெளிச்சத் தில் மூழ்கியது.

வாழையின் ஒரு இலை நுனி மட்டுமே எனக்கு இருந்த ஒரே மறைப்பு. காற்று வீசும்போது இலை அகலும். நான் வெளிச்சத்தில் நன்றாகத் தெரிவேன்!

அந்தச் சமயத்தில் என்னுடைய சில நண்பர்கள் என்னுடைய அறைக்கு அருகில் போவதைப் பார்த்தேன். அவர்களுக்கு என்னைப் பார்ப்பதற்கு எந்தவொரு சிரமமும் இருக்காது. ஆனால், அவர்கள் பார்க்கவில்லை. என்னை எப்படி சந்தேகப்படுவார்கள்?

என்னவோ பேசிக் கொண்டு இரண்டு மூன்று பெண்களும் இரண்டு ஆண்களும்! அவர்களில் வயது குறைவான ஆள்- இளைஞன்- முற்றத்திற்கு வந்து நான் அமர்ந் திருந்த பக்கமாக வந்தான். என்னைப் பிடிப்பதற்காக வருகிறான். பார்த்துவிடுவான். அவமானம்!

“நீ அங்கு இருட்டில் என்னடா செய்றே?’ என்று கேட்டவாறு என்னைப் பிடிப்பான்.

ஆட்கள் கூடுவார்கள். “ஓ… இது நம்முடைய அந்த நெருப்புப் பொறி பத்திரிகையின் ஆசிரியராச்சே! தலைவர்!’ ஆட்கள் கூடுவார்கள்.

தெய்வமே! என்னை இதில் இருந்து ஒரு தடவை காப்பாற்றி விடு! இனிமேல் நான் எந்தவொரு தவறையும் செய்ய மாட்டேன். சத்தியமா… அவன் என்னை பார்த்துவிடக்கூடாது!

நான் கத்தியைக் கையில் எடுத் தேன். அவன் கண்டுபிடித்து விட்டால்… கத்தியைப் பயன்படுத்தி என்னுடைய கழுத்தை அறுக்க வேண்டும்! தெய்வமே! அவனு டைய கண்களின் பார்க்கும் சக்தியை சிறிது நேரத்திற்கு இல்லாமல் செய்!’

கடவுளே!… என்னுடைய நண்பர்கள் என் பெயரைக் கூறி சத்தம் போட்டு அழைக்கிறார்கள். தலைவரைத் தேடுகிறார்கள்! தெய்வமே! என்னை அவமானப் படுத்தி விடாதே.

அவன் எந்தப் பக்கமும் பார்க்காமல் எனக்கு மிகவும் அருகில் வாழை மரத்திற்குக் கீழே வந்து சிறுநீர் கழித்துவிட்டு எழுந்து போனான்.

எனக்கு மிகவும் களைப்பாக இருந்தது. எனக்குள் என்னவோ இல்லாமல் போயிருக்கிறது.

அதற்குப் பிறகு நடந்தது எதுவும் சரியாக ஞாபகத்தில் இல்லை. யாரும் எதையும் தெரிந்து கொள்ள வில்லை. வாய்க்காலுக்குள் குதித்த தையும், உடலெங்கும் கிழித்து ரத்தம் வந்ததையும், சேற்றில் புதைந்ததையும், சுவரில் ஏறி அறை யின் அருகில் சென்று என்னுடைய நண்பர்களுக்கு முன்னால் நின்றதையும் தெளிவில்லாமல் நினைத் துப் பார்க்கிறேன்.

அவர்கள் பதைபதைப்பு அடைந்து என்னைப் பார்த்தார்கள். காதல் சம்பந்தப்பட்ட ஒரு சாகசப் பயணம் முடிந்து வந்திருக்கிறேன் என்பதை அவர்கள் நினைக்க வில்லை. தலைவர் ஏதோ மிகவும் உயர்ந்த செயலைச் செய்துவிட்டு வந்திருக்கிறார் என்பது அவர் களின் நினைப்பு. கடவுளே!

நான் சோப்பு போட்டு நன்றா கக் குளித்துவிட்டு அறைக்கு வந்து ஆடைகளை மாற்றி, தலையை வாரி முடித்து நாற்காலியில் போய் உட்கார்ந்தேன். நடந்த சம்பவங்கள் முழுவதையும் சிஷ்யர்களிடம் சொன்னேன்.

இறுதியில் அவர்கள் கூறினார்கள்:

“”இப்போதே நாம் இந்த இடத்தை மாற்ற வேண்டும்!”

மாறினோம். கனமான இதயத் துடன் இரவின் அமைதியான சூழ்நிலையில் காதல் நகரத்தில் இருந்து நாங்கள் கவலையுடன் விடை பெற்றோம். அந்த வகையில்… அந்த வகையில்… அவமானத் தின் காயத்தை உண்டாக்காமல் கடந்து சென்ற- காதல் நிறைந்த- தாகம் கொண்ட- மிக உயர்ந்த- கவலை நிறைந்த கால கட்டமே, உனக்கு வணக்கம்!

மங்களம்.


நன்றி : அழியாச் சுடர்கள்

Read more...

என் இருத்தலின் நஞ்சு - கான் ஸ்யூ

>> Tuesday, March 9, 2010

என் இருத்தலின் நஞ்சு
- கான் ஸ்யூ
தமிழில் : ஜெயந்தி சங்கர்


ஆசிரியர் குறிப்பு

டெங் ஸியாவ்ஹூவா என்பவரின் புனைப்பெயர் கான் ஸ்யூ. ஹ்ஹூன்னனின் ச்சாங்ஷாவில் பிறந்து இன்றும் அங்கே வளர்ந்து வரும் பெண்மணி. 1983ல் முதலில் எழுத ஆரம்பித்த இவர் ஹாங்காங், தாய்வான் தவிர சீனாவின் அனைத்து இலக்கிய இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளது. 'சொர்க்கத்தில் உரையாடல்கள்', 'மிதந்திடும் பழைய மேகம்' ஆகியவற்றின் ஆசிரியர்.
*****************************

கடைசியில் நான் என் பூனையைத் துரத்தினேன். எனது அச்செயல் எனக்குப் புதியதொரு வாழ்க்கையைக் கொணரும் என்று தான் நான் நினைத்தேன். மேசையினருகே கண்களை மூடி ஆழ்ந்து சிந்தித்தபடி உட்கார்ந்திருந்தேன். என்னுடைய கேடு கெட்ட சிதறிய சிந்தனைகளை ஒழுங்கு படுத்த மிகவும் முயன்றேன். அது வீண் கனவு. அவன் திரும்பி விட்டான். ரத்தம் உறைய வைக்கும் விதமாக ஊளையிட்டான். குரலில் கொஞ்சமும் கெஞ்சல் இல்லை. மாறாக வன்மம் நிறைந்திருந்தது. மிரட்டும் விதத்தில் கூட இருந்தது. கதவைத் தன் கால் நகங்களால் சுரண்டியும் பற்களால் கடித்துக் கீரியும் தன் வன்மத்தை வெளிப் படுத்தினான். உறுமிய படியே இருந்தவனை நான் உள்ளே விட்டால், நிச்சயம் பிராண்டியும் கடித்தும் என்னையே கொன்று விடுவான் என்று நினைத்தபடி நடுங்கிக் கொண்டிருந்தேன்.

ஒரு உறையும் பனிக்கால நாளில் என் வீட்டின் முன் இருந்த சாக்கடையிருகே நான் அவனை பார்த்தேன். சின்னஞ் சிறியதாக, பழுப்பு மஞ்சளில் தலையில் இரண்டு வெள்ளைத் திட்டுக்களுடன் கண்களில் கண்ணீருடன். அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். தன் அம்மா ஏன் தன்னை நிராகரித்தாள் என்று கூட அறியாத சிறியவனாக இருந்தான். ஏன் இவ்வுலகில் தன்னைச் சகிக்கும் ஓர் இடமில்லை என்று கூட அவனால் புரிந்து கொண்டிருக்க முடியாது. இங்கேயே இரு என்று நான் அவனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றே கூட மிகவும் கஷ்டப் படுவதாகப் பாசாங்கு செய்தானோ.

அப்போது தான் நான் சட்டென்று ஒரு முடிவெடுத்தேன். ஏதேனும் புதிதாகச் செய்ய நினைத்த துடிப்பு என்னில் இருந்தது. எனக்கு வாழ்க்கையில் ஓர் இணை வேண்டியிருந்தது என்றே தோன்றுகிறது. அவனை நான் வைத்துக் கொண்டேன். வீட்டிற்குள் எடுத்துக் கொண்டு போய் அடுப்புக்கு அருகில் வைத்தேன். கொஞ்சம் பால், ஒரு துண்டு ரொட்டி மற்றும் மீன் சூப்பைப் புகட்டினேன். வேக வேகமாகச் சாப்பிட்டான். முடித்ததும், கிண்ணத்தையும் தட்டையும் தன் கால்களால் கவிழ்த்தான்.

அறையைச் சுற்றிச் சுற்றி வலம் வந்தான். பிறகு, என்னருகில் வந்து என் பாதத்தைப் பற்றினான். இன்னும் சாப்பிட வேண்டுமோ? நான் ஒரு துண்டு இறைச்சியைக் கொடுத்தேன். இன்னும் வேண்டுமாம். இப்படியே நான்கைந்து முறை நடந்தது. தின்பதை அவன் நிறுத்தும் போது பீப்பாயைப் போலிருந்தது அவனது வயிறு. நான் அவனோடு விளையாட நினைத்தேன். ஒரு காகிதத்தைக் கசக்கி ஒரு சிறு பந்தாக்கினேன். நூலொன்றில் கட்டி அவன் முன்பு, முன்னும் பின்னும் ஆட்டினேன். அது அவனை மகிழ்விக்கும் என்றே நினைத்தேன். ஆனால், அவனோ என்னை நோக்கி ஒரு சோகப் பார்வையை வீசினான். பிறகு, விலகி நடந்து போனான். அறைக்குள்ளிருந்த ஒரு குப்பைக் கூடையினுள் பாய்ந்து குதித்தான். சொகுசுடன் அங்கேயே இருந்தான். கொஞ்ச நேரமானதும் தூங்கிப் போனான்.

நாட்கள் கடந்து மாதங்களும் சென்றன. அவனைத் திருப்திப் படுத்த விடாமுயற்சியுடன் நானும் தினமும் அவனுக்கு சுவைமிகு உணவைக் கொடுத்தேன். இதன் விளைவாக கொழுகொழுவென்றும் மினுமினுப்பாகவும் அவன் வளர்ந்தான். நாளுக்கு நாள் அவனது பசியும் கூடியது. என்னிடம் நெருங்கும் எந்த அடையாளத்தையும் அவன் காட்டவில்லை. பழைய மாதிரியே பசித்தால் அழுதான். சாப்பிடக் கொடுக்க நான் கொஞ்சம் தாமதித்தாலும் என் பாதத்தைப் பற்றவும் கடிக்கவும் செய்தான். கடிகள் நல்ல வேளை பெரியதாக இல்லை. இரு சிறு பல் தடங்களையே விட்டிருந்தன. பெரும்பாலும் குப்பைக் கூடையினுள் தூங்கினான். அவ்வப்போது வெளியேறி, வீங்கிய கண்களுடன் உற்சாகமின்றித் திரிந்தான். சூழலின் மீது அவனுக்கு எந்த ஈடுபாடுமில்லை. அவன் வாடகைக்கு இருப்பவனைப் போல் மிகவும் விட்டேற்றியாக இருந்தான்.

ஒரு நாள், புதிதாக ஏதாவது முயற்சிப்போம் என்று காரணமேயில்லாமல் தோன்றியது. என் படுக்கையின் மீது அவனைப் படுக்க வைத்தேன். அது அவனை மகிழ்வித்து எங்களது உறவு நெருக்கம் கொண்டு மேலும் பலப்படும் என்றே கருதினேன். படுக்கையில் படுக்க வைத்ததும், அவன் கொஞ்சமும் மகிழவில்லை. மிகவும் முரண்டு பிடித்து ரத்தம் வரும் வரை என் கைகளைப் பிராண்டினான். நான் பிடியைத் தளர்த்தியதும், திருடனைப் போல அகன்று சென்று கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டான். அவனது கண்கள் நெருப்பெனக் கனன்றன. அவன் வாயிலிருந்து விநோத சத்தம் வந்தது. மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். ஒரு கோழியிறகு வாரியலால் அவனிடமிருந்து என்னைத் தற்காத்துக் கொண்டேன். ஆனால், திடீரென்று அவன் மூர்க்கமாகவும் பலம் மிகுந்தவனாகவும் மாறியிருந்தான். பெரிய அலமாரியின் மீது மின்னலாகப் பாய்ந்து மேசையின் மீது தொம்மென்று குதித்தான். அவ்விடத்தை விட்டு விலகவே விருப்பமின்றியிருந்தான். நானோ வியர்வையில் குளித்தேன். அவ்வறையின் மீது அந்தச் சின்ன விலங்கிற்கு ஏதோவொரு பிடிப்பிருந்தது.

அந்தச் சிந்தனைக்குப் பிறகே என் கோபம் குறைந்தது. அவன் அக்கணத்தில் என் தோள் மீது குதித்து இரு ரத்தக் கோடுகள் உருவாகிடும் அளவுக்கு என் முகத்தைப் பிராண்டுவான் என்று நான் நினைக்கவேயில்லை. மீண்டும் கட்டிலுக்கு அடியில் போய் ஒளிந்து கொண்டான். அதிர்ச்சியில் காற்று போன பலூனைப் போல படுக்கையின் மீது உட்கார்ந்தேன். மிகவும் கவனமாக யோசித்தேன். புரிந்தது போலவும் இருந்தது. புரியாதது போலவும் இருந்தது. கடைசியில், வாரியலைத் தூர எறிந்தேன். நடந்ததை மறந்து போனதாக நடித்தேன்.

மேலோட்டமாக, நான் அவனைக் கண்டு கொள்ளவே இல்லை. தினமும், என் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனுக்கு சாப்பாடு கொடுக்க நான் தவறவில்லை. மற்ற படி அவனுடைய விஷயத்தில் தலையிடவேயில்லை. அவனைப் பற்றிய பெரிய கனவுகளையோ நம்பிக்கையையோ வளர்த்துக் கொள்ள மட்டும் நான் விரும்பவில்லை. அது வெறும் காட்டுப் பூனை தானே எனச் சமாதானம் செய்து கொண்டேன். நான் அதிக அன்பு பாராட்டினால் பெரிய குழப்பங்களைத் தான் ஏற்படுத்துவேன் என்று உணர்ந்து கொண்டேன். இருந்தும், இது தான் உண்மையா என்று பொறுமியது மனம். அதன் குணங்கள் எனக்குத் தெரியாமலா இருந்தது? உதாரணத்துக்கு, வெளியே சென்று வேறு ஒரு காட்டுப் பூனையுடன் பழகியதில்லை. வீட்டுக்குள்ளேயே அடைந்திருந்தது சிநேகமில்லாமல். அவனது பசி இருக்கிறதே! ஏயப்பா, என்னை விட அதிகமாகச் சாப்பிட்டான்.

மூன்று நாட்கள் சென்றன. நான் அவனைக் கண்டு கொள்ளவில்லை என்று என் மீது கோபப் பட்டான். அந்த நிராகரிப்பை அவனால் தாங்க முடியவில்லை என்று அவனது முகபாவம் சொன்னது. எனது அனைத்துப் புறக்கணிப்புகளுக்கும் பழி வாங்கத் துணிந்தான். நான் வீட்டில் இல்லாத போது, என் மேசை மீது குதித்து என் கோப்புகளையும் பொருள்களையும் கிழித்துக் குதறிக் குப்பையாக ஆக்கியிருந்தான். என் படுக்கையில் சிறுநீரும் கழித்திருந்தான்.

வீட்டுக்கு வந்ததுமே முதலில் மூத்திர வாடை தான் மூக்கில் அடித்தது. கோபம் கட்டுக்கு அடங்காது போனதில், நான் அப்படியே நாற்காலியில் அமர்ந்தேன். உள்ளே ஆத்திரம் பொங்கியது. ஆனால், நான் அவனைத் தண்டிக்க நினைக்கவில்லை. நான் தண்டித்தால், நானே அவனது கைகளில் போய் விழுவதற்குச் சமம். அவனை நான் அடித்தால், பைத்தியத்தைப் போல அழுவான். என் மீது கண்ட படி திரும்பப் பாய்வான். படுக்கையில் மூத்திரம் விடவும் மேசையில் ஆர்பாட்டம் செய்யவும் விட்டுவிட்டேன். முக்கியக் கோப்புகள் சிலவற்றை மட்டும் எடுத்துப் பூட்டி வைத்தேன். மூத்திர வாடையுடன் நாள் முழுவதும் வாழப் பழகினேன். நல்ல வேளையில் அலுவலகத்தில் யாரும் கவனிக்கவில்லை. மனிதன் பழக்கத்துக்கு அடிமையானவன். எதுவுமே சகித்துக் கொள்ளக் கூடியது தான். அதோடு சமரசம் செய்து கொள்ளும் மனநிலை தான் மிக முக்கியம். அவன் தன் அட்டகாசங்கள் எந்தப் பயனையும் கொணரவில்லை என்று உணார்ந்தவுடன் குப்பைக் கூடையில் அமைதியாகக் குந்தியிருக்க ஆரம்பித்தான்.

என் வெற்றியை நான் கொண்டாட நினைக்கும் போதே, என் மீது மீண்டும் விழுந்தது பிரச்சனை. ஓர் இரவில், அப்போது தான் தூங்க ஆரம்பித்திருந்தேன். ஒரு விநோத அழுகை ஒலி என்னை எழுப்பியது. அவ்வழுகை பூனையுடையதைப் போலில்லை. ஒரு மாதிரியான அமானுஷ்யத் தன்மையுடன் கொஞ்சம் பயமுறுத்தியது. சந்தேகமேயில்லாமல் அவ்வோசை அறையிலிருந்து தான் வந்தது. மின்விளக்கைப் போட்டேன். எழுந்து பார்த்தேன். என் பூனை நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தது. எனக்குள் ஒரு நடுக்கம். ஒரு கைவிளக்கை அடித்து கட்டிலுக்கடியில் நீண்ட நேரம் பார்த்தேன். விட்டத்திலும் விளக்கைக் காட்டிப் பார்த்தேன். அலமாரி, பெட்டி என்று எல்லா இடத்திலும் விளக்கடித்துப் பார்த்தேன். சன்னல் தாழ்பாள்கள் மற்றும் வாயிற் கதவின் பூட்டு என்று எல்லாவற்றையும் சோதித்தேன். காட்டு மிருகம் ஒளியக் கூடிய ஒரு இடம் விடாமல் பார்த்த பிறகு நடுங்கியபடியே தூங்கப் போனேன். விளக்கையும் அணைத்தேன்.

புரண்டு புரண்டு படுத்தேன். கண்ட படி கற்பனை விரிந்தது. குழப்பத்தில் பெருமூச்செறிந்தேன். கடைசியில் எப்போது, எப்படி என்று தெரியாமலேயே தூங்கியிருந்தேன். கிட்டத்தட்ட அக்கணத்தில், மீண்டும் அந்த அழுகைச் சத்தம் கேட்டது. நிச்சயம் அறையில் தான்! மீண்டும் எழுந்து விளக்கைப் போட்டேன். நேராக என் பூனையின் இடத்திற்குப் போய்ப் பார்த்தேன். குப்பைக் கூடையில் மல்லாந்த நிலையில் நான்கு கால்களையும் வானை நோக்கி வைத்துக் கொண்டு ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். பாசாங்கு செய்கிறானா? நடந்தது ஒவ்வொன்றையும் நினைக்க நினைக்க இவ்விலங்கை வைத்திருக்கலாகாது என்றே தோன்றியது. வெளியே விட்டு விடும் நோக்கில் ஒரு கையால் தூக்கினேன். அப்போது தான் கடுமையாக என் கையில் கடித்தான். அவனை விலக்கிய படி வலியில் வீரிட்டேன். அவன் கட்டிலுக்கு அடியில் பதுங்கினான்.

அவ்விரவில் காயத்தினால் ஏற்பட்ட மிகுந்த வலியிலிருந்தேன். அவ்வலியிலும் குரலெழுப்பியது அவன் தான் என்று முன்பு எப்போதையும் விட நிச்சயமாக இருந்தேன்! அவனது விநோத குரலால் என்னைப் பயமுறுத்தியிருக்கிறான் என்று புரிந்து கொண்டேன். இங்கேயே இருக்க ஏன் விரும்புகிறான்? என்னைப் புதை குழிக்கு அனுப்பத் தானோ! அப்படியும் தெரியவில்லையே. இங்கேயே இருக்க இவன் நினைத்ததற்கு வெளியே இருந்த பொறுக்க முடியாத காற்றும் குளிரும் தான் காரணம். அதற்குப் பிறகு, அந்த அகோரப் பசி. வேண்டியதைச் சாப்பிட்டு சுகமாக இருக்கலாம் என்ற நினைப்பு போலும். ஆனால், இதெல்லாம் போதாதென்று நான் அவன் மீது அக்கறையுடன் இருக்க வேண்டும் என்று வேறு எதிர்பார்த்தான். அவனுக்கு என் கவனம் கிடைக்காத போது என்னைத் தாக்க வழிகள் தேடினான். நினைக்க நினைக்க அன்று மட்டும் அவனை உள்ளே விடாமல் இருந்திருந்தால், இந்த எல்லா சச்சரவுகளையும் தவிர்த்திருக்கலாம் என்றே தோன்றியபடியிருந்தது. ஆனால், வாழ்க்கையில் இரக்கம் காட்டக் கூடவா தடை? ஆனால், இரக்கம் காட்டியதிலும் ஏதேனும் நோக்கம் இருந்ததோ எனக்கு? வெறும் இரக்கம் தானா? என்னில் இருந்த பற்றின்மையும் எனது இருத்தல் குறித்த கவலையும் அது சார்ந்த ஒரு வித ஆன்மீகத் தேடலுமே கூட என்னை அவ்வாறு செய்யத் தூண்டியதோ. எது எப்படியோ நான் விதைத்ததை நான் தானே அறுக்க வேண்டும்.

என்னைக் கடித்த பிறகு இரவு முழுவதும் அவன் அழவேயில்லை. காயம், வீங்கி மிகவும் வலித்தது. சீக்கிரமே, எனக்கு கடுங்காய்ச்சல் அடித்தது. ஏதேதோ மருந்தை உட்கொண்டேன். ஆனால், ஒன்றுமே பயனற்றுப் போனது. மருத்துவமனையில் சேர்ந்து நரம்பு வழி மருந்து ஏற்றிக் கொண்டேன். நோய் மிகக் கடுமையாக இருந்தது. எல்லாம் அவனால் தான். மருத்துவமனையில் படுத்தபடி இருந்த போது நினைத்தேன். இப்போது வீட்டில் ஒருவரும் இல்லை. சாப்பிட ஒன்றுமில்லை. அவனுக்கு உண்ண ஒன்றுமில்லா விட்டால் என்னைக் குறை சொல்லவா முடியும் இப்போது அவனால்! எல்லாம் அவன் தவறு தானே. இப்போது நான் துரத்தத் தேவையில்லை. தானே வேறிடம் தேடிப் போகத் தானே வேண்டும். இல்லையானால், பசியில் வாடிச் சாக வேண்டியது தான். கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கிறதோ! இனிமேல் வீட்டில் கொஞ்சம் அமைதியிருக்கும். இப்படி யோசித்த போது நல்ல என்னில் குணம் தெரிந்தது. படுத்திருந்த எனக்கு பெரும் நிம்மதி கூட ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் அங்கிருக்கும் போது, அவனது கொடுமைகளுக்கெல்லாம் அவனை மனதார திட்டித் தீர்த்தேன். பத்து தினங்களுக்குப் பிறகு, வீட்டிற்குப் போக வேண்டியிருந்தது.

வீட்டிற்கு வந்து பார்த்தால் புழுதி படிந்து கிடந்தது. அங்கே அவனும் இருந்தான். இளைத்துச் சோர்ந்திருந்தான். படுக்கைக்குள்ளிருந்து மெதுவாக வெளியேறியவன் ஒரு ஓசையும் எழுப்பவில்லை. ஒருமுறை என்னைச் சுற்றி வந்தான். மீண்டும் படுக்கைக்குப் போய் விட்டான். அறையெங்கும் நோட்டமிட்டேன். எந்தவித மாற்றங்களும் இல்லாதிருந்தது. குளிர்ப் பதனப் பெட்டி மட்டும் லேசாகத் திறந்திருந்தது. அவன் அதை எப்படித் தான் திறந்தனோ! அங்கே ஓரத்தில் வைத்திருந்த இறைச்சித் துண்டைக் காணோம். அந்தச் சிறு உணவில் தான் பத்து நாட்களையும் கடத்தியிருந்தான் போலும். அவனது அகோரப் பசி நினைவுக்கு வந்ததுமே, என் கண்கள் குளமாகின. மெதுவாக வெளியே கூப்பிட்டு நான் எனக்காக வாங்கி வந்திருந்த கொழுக் கட்டைகளைக் கொடுத்தேன். அவனை அன்போடு தடவிக் கொடுத்தேன். சாப்பிட்டானதும், குப்பைக் கூடைக்குள் குதித்து தூங்க ஆரம்பித்து விட்டான்.

மிகவும் வருத்தமாகி விட்டது. நான் செய்தது தவறா? விட்டுவிட்டுச் சென்றது தவறோ? துரத்த நினைத்திருந்தேனே, அது தான் தவறா? ஒன்றுமே புரியாமல் குழம்பினேன்; வருந்தினேன். ஆரம்பத்திலேயே விரட்டியிருக்க வேண்டும் என்று தான் வருந்தினேனோ. எனது செயல்களின் கண்ணியில் நானே சிக்கிக் கொண்டேனோ.

என் பூனையுடன் சமரசம் செய்து அன்புடன் இருக்க முடிவெடுத்தேன். கவனமாக உணவு வாங்கி வந்து உண்ணக் கொடுத்தேன். அதுவும் அவனுக்குப் பிடித்த உணவாக. பத்து நாட்கள் போனதும், மீண்டும் கொழுத்துப் போனான். ரோமங்களும் பளபளவென்று மின்னின. நடையில் சூழ்ச்சியும் தந்திரமும் மீண்டும் திரும்பி இருந்தது. எப்போதாவது தான் வெளியே வந்தான். குப்பைக் கூடையிலேயே பெரும்பாலும் தன் கர்வமிகு அமைதியில் கழித்தான்.

தினமும், நான் குப்பைக் கூடைக்கு அருகில் குனிந்து, என் கைக் காயத்தைக் காட்டி அவனோடு பேசினேன். என் வலியையும் நான் அவனை நடத்தும் விதத்தையும் அவன் எனக்குக் காட்டிய நன்றியையும் விளக்கிப் பேசினேன். சில வேளைகளில் என்னுள் எழுந்த வன்மத்தையும் அவன் பால் சுரந்த அன்பையும் அவனிடம் நான் எதிர்பார்ப்பவற்றையும் குறித்தும் கூடப் பேசினேன். இவ்வகையான அனுபவங்கள் எனக்கு வேறொரு மனிதனோடு ஏற்பட்டதில்லை. ஏன்? ஏனெனில், மனிதர்களின் மேல் என் ஈடுபாடு மறைந்து போனது. அந்தப் பூனையைப் போல் ஒரே ஒரு தோழமை மட்டுமே வேண்டியிருந்தது எனக்கு. என் இனமாக இல்லாதிருந்தால் தான் என்ன? எங்களுக்கு ஒருவர் மீது ஒருவர் ஈடுபாடு இருக்கிறது.

இந்தக் கூளங்கள் மிகுந்த உலகில் எனக்கு ஒரு துணை வேண்டியிருந்ததே. நான் அவனுக்காக என் வாழ்க்கை முறையைக் கூட மாற்றிக் கொண்டேன். எப்போதுமே வேறொரு நபருக்கு நான் செய்திராதது அது. ஏனெனில், நான் சுயநலமும் அடமும் மிகுந்தவன். பூனை மூத்திர நாற்றத்தினூடே சகித்தபடியே வாழ்ந்திருப்பது என்பது வேறு யாரால் முடியும்? இதையெல்லாம் சொன்னேன் அவனிடம், எந்த பதிலையும் எதிர்பார்க்காமல். அவனுடன் சமரசத்துக்கு வர விருப்பப்பட்டு தான் நான் பேசினேன். என்னிடம் அவன் விரோதம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்று மட்டுமே நான் விரும்பினேன். என்னிடம் அவன் கொஞ்சம் இரக்கம் காட்டவும் என்னோட சிநேகமாக இருக்கவும் மட்டுமே அவனைக் கேட்டேன். முன்பு என்னைக் கொடூரமாக நடத்தியதைப் போல இனி நடத்தாதேடா!

இவ்வுலகில் நான் தனி தான். எனக்கு சொந்தமோ சிநேகமோ, உறவோ இல்லாததால் அவனுடன் எனக்கேற்பட்டிருந்த பந்தம் வாழ்நாள் முழுவதும் நீடிக்க ஆசை கொண்டேன். இவ்வுறவு உடைந்தால் மனம் மிகக் கசந்திடுவேன் என்று தோன்றியது. இந்த அறை எங்களுக்கு சிறிதாக இருக்கிறது. ஒற்றை அறை வேறு. நாங்களிருவரும் சிநேகமற்றிருந்தால், கடைசியில் என்னவாகும்? யோசித்தேன். என் கடின வாழ்வைக் குறித்துப் பேசினேன். வாழ்க்கையில் நான் அனுபவித்த இடர்களையும் இன்னல்களையும் குறித்துப் பேசினேன். நான் பேசிய படியே அழுதேன். அவனிடமிருந்து கொஞ்சம் நேசத்தைத் தானே எதிர்பார்த்தேன். எங்கள் உறவு மேம்படவும் விரும்பினேன்.

என்ன பேசி என்ன பயன்? சரியாகவே யூகித்தீர்கள். ஒரு மாற்றமும் நிகழவில்லை. சொட்டைத் தலையில் முடி வளர்க்கப் பட்ட பாடு தான் அவனிடம் பேசிப் புரிய வைக்க முயல்வதும். முதலில், நான் மனதில் இருந்ததைக் கொட்டிய போதும் அவன் தன் குள்ளநரித் தனத்தை மறைக்கவில்லை. ஒரு கண்ணை மூடிக் கொண்டு இன்னொரு கண்ணைத் திறந்து கொண்டு கேட்டான். சீக்கிரமே கால்களை மேலே தூக்கிய படி தூங்க ஆரம்பித்தான். அவனது எதிர்வினை அவ்வளவு தான்!

மேலும் ஒரு வாரம் போனது. அவன் நிலையில்லாது தவித்தான். அசௌகரியமானான். குப்பைக் கூடையை உடைத்து விடுவதைப் போல உறுமினான். பிறகு, இரவெல்லாம் என் காலடியில் சுரண்டிய படியே இருந்தான். அந்தச் சத்தம் நாராசமாக இருந்ததென்று சொல்லத் தேவையில்லை. பயங்கரக் கனவுகள் ஏற்பட்டன. சூடேறியிருப்பானோ! ஆண் பூனையாயிற்றே என்று யோசித்தேன். பொதுவாகவே, அவனும் வெளியே போக வேண்டும். வெளியே நிறைய ஆண் பூனைகள் ஊளையிட்ட படியிருந்தன. கீழிறங்கி நீண்ட ஒரு மூங்கில் கழியை எடுத்தேன். வெளியேற்ற நினைத்தேன். அவன் வெளியே போய் கொஞ்சம் மேயட்டும் என்று நினைத்தேன். எத்தனை அடித்தாலும் அறையைவிட்டு வெளியேற மறுத்தான். வெளியே இருந்த சத்தங்களைக் கேட்கவும் மறுத்தான். அவர்களில் தானும் ஒருவன் என்று உணர மறுத்தே விட்டான். மீண்டும் நான் படுக்கைக்குப் போனதும், மீண்டும் என்னைச் சுரண்ட ஆரம்பித்தான். சில நாட்களுக்குப் பிறகு கட்டிலின் கீழ்ப்பகுதி காணச் சகிக்காத மாதிரி மாறிவிட்டது. இரண்டு ஆழமான பள்ளங்களை ஏற்படுத்திருந்தான். எனக்கோ ஒவ்வொரு இரவும் சுரண்டல்களுக்கு இடையே பயங்கரக் கனவுகள் வந்தபடியே இருந்தன. ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குப் போகும் போது முகம் சாம்பல் பூத்தாற் போலிருந்தது.

ஒரு வேளை படுக்கையின் மீதேறி எதையோ சொல்ல வந்தானோ. ஓர் இரவில் பயங்கரக் கனவுகளுக்கிடையே, எதையோ வைத்து வெட்டியது போல என் கால்கள் எரிந்தன. திடுக்கிட்டு எழுந்தேன். படுக்கையிலிருந்த அவன் பயப்படக் கண்டேன். என் பாதத்தின் அடியிலிருந்து ஒரு கொத்து சதையைப் பிய்த்து எடுத்திருந்தான்.

என் பொறுமையின் விளிம்புக்கு வந்து விட்டேனோ? இவனது அட்டகாசத்தை எத்தனை நாள் தான் பொறுத்துக் கொள்வது. என்னையே கேட்டுக் கொண்டு பதிலில்லாது தவித்தேன். என்ன தான் செய்வது? என் இதயத்தில் ஏற்கனவே இடம் பெற்று விட்டான். அவனைக் கொன்றால் என் மனம் நொறுங்கி விடுமே. என் உடலில் காயமும் மனதில் கோபமும் தான் மிச்சம். ஆனாலும் என்ன? ஏதேனும் செய்யலாம். படுக்கும் போது காலணி அணிந்து கொள்ளலாம். போர்வையை இறுக்கமாக மூடிக் கொள்ளலாம். என் தலையில் தாக்கினான் என்றால், தலைக் கவசம் வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம். தீர்வுகள் இருக்கவே செய்தன.

ஆடைகளுடன் காலுறை, காலணி, தலைக் கவசம் அணிந்து கொண்டு படுக்க ஆரம்பித்தேன். விளக்கை அணைக்காது விட்டேன். ஒரு நாளிதழைக் கொண்டு விளக்கை வெறுமே முடியிருந்தேன். அப்போது அவன் சுரண்டவில்லை. ஆனால், விளக்கு அவனுக்குப் பிடிக்கவில்லை. அது அவனை ஆத்திரப் படுத்தியது. விளக்கை நான் அணைக்கா விட்டால் கண்ணாடி, பீங்கான் ஜாடி போன்ற பொருட்களைக் கலைத்தும் உடைத்தும் அட்டகாசம் செய்தான். இரண்டு ராத்திரிகள் அட்டகாசம் செய்த பிறகு படுக்கையில் ஏறி அழுதான். என் கவசத்தில் சுரண்டினான். மீண்டும் கடிக்க முயன்றான். எனக்கு மிகவும் பயமாகி விட்டது. விளக்கை அணைப்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

முதல் இரவு விளக்கு அணைந்ததும் ஒன்றும் நடக்கவில்லை. அடுத்த இரவு வெளியே ஓடி மேலும் இரு ஆண் பூனைகளை அழைத்து வந்தான். இரண்டும் அறையில் ஒன்றையொன்று துரத்திக் கொண்டு ஓடின. ஒன்றை ஒன்று பிராண்டிக் கொண்டன. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து அட்டகாசம் செய்தன. ரத்தம் உறையும் அளவுக்கு கத்தின. மறுநாளின் மத்தியின் தான் இரண்டும் வெளியேறின. மூன்றாம் இரவில், அவை மீண்டும் அதே போல அறைக்குள் வந்து அதே போல நடந்து கொண்டன.

நான் நினைத்தேன்: ஒரு வருடம் முடிந்த நேரத்தில் என் பூனை ஒரு தனியனாகிப் போனான். வெளியே போகாமல் இருந்தான். துறவியைப் போலக் காணப் பட்டான். சில காட்டுப் பூனைகளின் பரிச்சயம் அவனுக்கு ஏற்பட்டிருந்த போதிலும் அவன் அவர்களது அட்டகாசத்தில் பங்கேற்கவில்லை. அவர்களுடன் ஓடவும் இல்லை. ஏதோ உள்நோக்கம் இருந்தாற்போலத் தென்பட்டான். பிரச்சனைகளைத் தோற்றுவித்து என் வாழ்க்கையைக் குலைப்பதே அவனது குறிக்கோளோ. என் வீட்டை காட்டுப் பூனைகளின் விளையாட்டு மைதானமாக்க எண்ணினான் போலும். இருந்தும், அவர்களில் ஒருவனாகவில்லை அவன். அங்கே அமைதியாயிருந்தான் வெறும் ஒரு பார்வையாளனாய்.

மேலும் ஓரிரு தினங்கள் சென்றதும், காட்டுப் பூனைகள் இரண்டிலிருந்து ஐந்தாகின. நான் விளக்கை அணைத்தேன். அப்போது நிழல்கள் அங்குமிங்கும் உலவுவதைக் கண்டேன். மிகவும் அச்சமூட்டுவதாக இருந்தது. இப்போது, இவன் படுக்கையிலோ மேசையிலோ இருக்காமல் குப்பைக் கூடையினுள் போய் எதுவும் நடக்காததைப் போலத் தூங்கிய படி இருந்தான். ஓய்வெடுக்க வழியில்லை. ஏனெனில், காட்டுப் பூனைகளும் நான் அவற்றை விரட்டவில்லை என்று அறிந்து கொண்டன. அப்போது, முன்பைவிட மேலும் அதிகமாக அட்டகாசம் செய்தன.

கடைசியில், என் படுக்கை மீதேறி ஒன்றோடு ஒன்று கத்தியும் பிராண்டியும் சண்டையிட்டுக் கொண்டன. என்ன செய்வதென்றே புரியாத நிலையில் நான் இருந்த போது, எழுந்து விளக்கைப் போட்டேன். ஒரு சுத்தியலை எடுத்தேன். கரும்பூனையைக் குறி பார்த்து பலமாக ஒரு போடு போட்டேன். கீழே விழுந்து, துடிதுடித்து இறந்தது. மற்ற காட்டுப் பூனைகள் மிரண்டு போய் பாய்ந்தோடி விட்டன. நடுநடுங்கிய படியே, இறந்த பூனையை எடுத்து வெளியே நூறடி தொலைவில் இருந்த குப்பைக் கூடையில் எறிந்தேன். அறைக்குத் திரும்பியதும் என் தலை கனத்தது. சுவரில் முட்டிக் கொள்ªத் தோன்றியது. குப்பைக் கூடையிலிருந்து மௌனமாக அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது என் பூனை. பார்த்து விட்டான், எல்லாவற்றையுமே. புர்புரென்று என்னைக் கண்டு முறைந்தான்.

அடுத்த நாள் காலையில் மீண்டும் வேலைக்கு சோர்வுடன் போனேன். எல்லோரும் என்னைப் பற்றியே பேசினர். நான் இளைத்துக் களைத்து மெலிந்து போனேன் என்றனர். சிலர் நான் ஏதேனும் ஆவியுடன் உடலுறவு கொண்டேனோ என்றெல்லாம் கேலி பேசினர். இவ்விஷயங்களை எல்லாம் அவர்களிடம் எப்படிச் சொல்வேன். நான் சொன்னாலும், ஏதோ பைத்தியம் என்றோ வேற்றுக் கிரகத்துவாசி என்றோ தானே நினைப்பார்கள். ஒரு ஆள் மட்டும் அலுவலகத்தில் 'ஆவியுடனான என் கதை'யைக் கேட்டு நச்சரித்தான். எல்லோருக்கும் அந்தக் கதையைக் கேட்க ஆவல் என்று வேறு சொன்னான். நான் முதலில் அவனை அலட்சியப் படுத்தினேன். ஆனால், தொடர்ந்து என்னைத் தொந்தரவு செய்த போது, இதற்கெல்லாம் காரணமான என் பூனை மீது என் ஆத்திரமெல்லாம் திரும்பியது. ஒழித்துக் கட்டுகிறேன் பார். திரும்பி வரவே முடியாமல் செய்கிறேன். வாழ்க்கை சூன்யமாகிடுமா? ஆகட்டும். மற்றவர்களின் இவ்வகை அவமானங்களை விட அவ்வித வாழ்க்கை எத்தனையே பரவாயில்லை.

மனதிற்குள் ஒரு திட்டம் வகுத்தேன். என் உணர்வுகள் வெளிப்படவில்லை. வீட்டுக்குப் போகும் வழியில், நான் ஒரு பொரித்த மீனை வாங்கினேன். அது அவனுக்கு மிகவும் விருப்பம். அவன் தின்று கொண்டிருந்த போது ஒரு கோணிப்பையை வைத்து அப்படியே அவனை உள்ளே போட்டு அமுக்கி வாயைக் கட்டினேன். பிறகு, பேருந்தில் ஏறி நகர்புறத்துக்குப் போனேன். அவனுக்குத் தெரிந்து தானிருக்கும் என் மனதில் இருந்தது. வழியெல்லாம் ஒரு சத்தமும் போடவில்லை அவன். எனக்குக் கொஞ்சம் பரிதாபம் தோன்றுவது போலிருந்தது. ஆனால், சட்டென்று சுதாரித்துக் கொண்டேன். அவனால் நான் பட்ட கஷ்டத்தையெல்லாம் நினைவு படுத்திக் கொண்டேன். தளரவிருந்த என் வலுப்பெற்றது. கதையின் மூர்க்க நாயகன் போல பையை மரத்தில் தொங்க விட்டேன். உடனே, துரத்தப் படும் திருடனைப் போல இடத்தை விட்டு ஓடினேன். யாராவது வந்து அவனை விடுவிப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரண்டு நாட்கள் அமைதியாகப் போனது. மீண்டும் திரும்பி வந்தான். நீங்கள் நினைப்பதைப் போல நான் அவனை உள்ளே விடவில்லை. உங்களில் யாரேனும் சொல்வீர்களா எதிர்காலத்தில் என்னவாகும்? என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்னவெல்லாம் நடக்குமென்று.

ஆங்கில மொழிபெயர்ப்பு: Karen Gernant and Zeping Chen

நன்றி: உயிர்மை – ஜனவரி 2009

*****************
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு : மதுரையில் பிறந்து, புலம்பெயர்ந்து சிங்கப்பூரில் இருபதாண்டுகளாக வசிக்கும் இவர் பிற கலாசாரங்களின் மீது, குறிப்பாக சீனக்கலாசாரத்தில் ஈடுபாடு கொண்டவர். சிங்கப்பூரைக் களமாகக் கொண்ட புனைவுகளுக்கு பரவலாக அறியப்பெறும் இவருக்கு இசையிலும் ஆழ்ந்த ரசனையுண்டு. கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிவரும் படைப்பாளியான ஜெயந்தி சங்கரின் புனைவுமொழி எளிமையானது; நடை எதார்த்தமானது. இலக்கியச் சிந்தனை, சிறுகதைத் தொகுதி (நியாயங்கள் பொதுவானவை-2006) மற்றும் நாவலுக்கு (மனப்பிரிகை-2008) ஆகியவற்றுக்கு இருமுறை அரிமா சக்தி விருது, திசையெட்டும் (மொழியாக்க) இலக்கிய விருது 2009 உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது ‘பின் சீட்’ சிறுகதைத் தொகுப்பு சிங்கப்பூர் இலக்கிய விருது 2008க்குத் தேர்வானது. இதுவரை பிரசுரமாகியுள்ள 20க்கும் மேற்பட்ட நூல்களில் மொழிபெயப்பு மற்றும் கட்டுரைகள் தவிர 5 சிறுகதைத் தொகுப்புகளும் 1 குறுநாவல் தொகுப்பும் 4 நாவல்களும் அடங்கும்.

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP