கமலாதாஸ் கவிதைகள்
>> Monday, November 2, 2009
காலி நெற்குதிர்
தனிமை -
ஒருசமயம் அது என் வீடாக இருந்தது
இன்று நான் அதன் வீடாகிவிட்டேன்.
உருவமற்றது எனினும் ஒரு காலி நெற்குதிர்போல
அது என்றென்றும் எனக்குள் நிலைத்திருக்குமென்று
நான் அறிகிறேன்.
கனமில்லாதது எனினும் அதன் பாரத்தால்
என் கால்கள் தளருவதை நான் புரிந்துகொள்கிறேன்.
வாசகா, சொல், நான் முன்னோக்கி நகர்கிறேனா,
அல்லது, பின்னோக்கியா எனது இந்தப் பயணம்?
எனது விருந்தாளிகள் என் கண்களைப் புறக்கணித்து
வெள்ளி மெட்டிகளணிந்த என் கால்விரல்களை மட்டும்
பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
முந்தின நாள் நெட்டுருச் செய்த அன்புமொழிகளையெல்லாம்
எனது முற்றத்திலேயே அவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
விடைபெற்றுப் போனபிறகும் வாசற்படியில்
அவர்கள் ஒவ்வொருவரும் தயங்கி நிற்கிறார்கள்.
எதையோ நினைத்துக்கொண்டதுபோல அவர்கள்
திரும்பிப்பார்க்கிறார்கள்
ஆனால், அவர்கள் திரும்பிவருவதில்லை, ஒருபோதும்
திரும்புவதில்லை.
அவர்களது காலடிகள் பாதையிலூடே
விலகிவிலகிப் போகின்றன, என்னிலிருந்து
விலகிவிலகிப் போகின்றன.
எனது இரும்பு கேட்டின் விசும்பலைமட்டும்
பிறகு, என் கனவுகளில் நான் கேட்கிறேன்.
*****************************
ஜூலைக்குப் பிறகு ...
அந்த ஜூலைக்குப் பிறகு
கொழும்பு நகரத்தில்
தமிழர்களை வெளியில் பார்க்கவில்லை
மண்டபங்களில்
அரங்கேற்றங்கள் இருக்கவில்லை
பெண்களின் கூந்தலுக்கு வாசனை பகிர
முல்லைச்சரங்களுடன்
ஒரு பூக்காரியும் வாசலில் வரவுமில்லை.
வெருண்ட எலிகள்போல
அவர்கள் பொந்துகளில் ஒளிந்தனர்
அவர்களது உடல்களில்
எலியின் நாற்றமிருந்தது.
சாணமும் செம்பும் வெடிமருந்தும் கலந்த நாற்றம்
அவர்கள் வேட்டையாடப்பட்டவர்களாக இருந்தனர்
அவர்களது அறைகளின் . . . மாலை ஒளியில்
கதவுக்குப் பின்னால் பயந்து அரண்டு
அவர்கள் நின்றார்கள்
அவர்களது விழிவெண்மைகள்
முத்துக்கள்போல மின்னின.
இறந்தவர்களிலிருந்து
ஹிட்லர் எழுந்து வந்தான்
மீண்டும் ஒரு கைத்தட்டல்
தேவைப்படுகிறது அவனுக்கு.
வலிமையான ஆரிய ரத்தத்தைப்
புகழ்ந்து பேசுகிறான் அவன்.
அவனது
முன்னாள் நண்பர்களைக் கொல்ல
உரிமைதரும் அந்த ரத்தம்
ஒரு போதையூட்டும் பானம்.
கறுத்த திராவிடன்
மகளை அணைத்து
மடியில் கிடத்திச் சொல்கிறான்:
“கண்ணுறங்கு, மகளே,
கண்ணுறங்கு.”
(பெண்வழிகள் மலையாளக் கவிதைகள் - தமிழில்: சுகுமாரன்)
நன்றி - கவிஞர் சுகுமாரன் & காலச்சுவடு
0 comments:
Post a Comment