தமிழ் மொழிபெயர்ப்பு 'மீட்சி'-யாளர் பிரம்மராஜன்

>> Monday, August 3, 2009

தமிழ் சிறுபத்திரிக்கைகள் மற்றும் புதிய சிந்தனைகளின் காலமாக கருதத்தக்க 80-களில் வெளிவந்த மிக முக்கிய சிறுபத்திரிக்கை மீட்சி. கலை மற்றும் கருத்துக்களை முன்னெடுக்கும் அறிவிப்புடன் வந்த மீட்சி, ஐரோப்பிய மற்றும் லத்தின் அமேரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய சிற்றிதழ் ஆகும். ஒருவகையில் தமிழில் ஐரோப்பிய, லத்தின் அமேரிக்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வழியாக மொழிபெயர்ப்பிற்கான ஒரு மீட்சியை ஏற்படுத்தியது அப்பத்திரிக்கை எனலாம். அதன் ஆசிரியர் பிரம்மராஜன் என தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ராஜாராம் பிரம்மராஜன். ஆங்கில இலக்கியப் பேராசிரியரான இவர் தமிழின் நவீனத்துவத்தின் மற்றும் நவீன கவிதையின் தவிர்க்கவியலா ஒரு படைப்பாளி ஆவார். டி.எஸ். எலியட் துவங்கி எண்ணற்ற கவிதைகளை இன்றுவரை தமிழில் மொழிபெயர்த்தும், அறிமுகப்படுத்தியும் பெரும்பணி ஆற்றிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கவிதையின் நவீனக்குரலை முன்வைத்து இவர் எழுதிய பல கவிதைகள் புதிய தமிழ்க் கவிஞர்கள் பலருக்கும் ஆதர்சமாக உள்ளது.

தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக பணியாற்றிவருகிறார். அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபக சிற்பங்கள் மற்றும் புராதன இதயம் என்பன இவரது கவிதை நூல்கள் ஆகும். பல நவீன கவிதை உத்திகளையும், படிமங்களையும் தமிழுக்க அறிமுகப்படுத்தியவர் இவர். புதுக்கவிதை எனப்படும் நவீனக் கவிதைக்கான கோட்பாட்டு அடிப்படைகளை தந்த எஸ்ரா பவுண்டு பற்றி அறிமுகம், பதினைந்து ஐரோப்பிய நவீனத்துவவாதிகள் மற்றும் நாடோடி மனம் போன்ற முக்கியமான அறிமுக நூல்களை எழுதி உள்ளார். நவீன மனத்தின் இருத்தலியல் துயரங்களைச் சொன்ன ஆல்பர் காம்யூவின் எழுத்துக்கள், உலக கவிதைகள், உலக இலக்கிய முன்னோடியும், உலகின் தற்போதைய நவீன படைப்பாளிகள் பலரின் ஆதர்ச படைப்பாளியும் ஆன ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே கதைகள், நவீன நாவல்கள் பலவற்றை எழுதிய சிறந்த கதைசொல்லியான இடாலோ கால்வினோ கதைகள் மற்றும் ஐரோப்பிய இலக்கிய உலகை லத்தின்-அமேரிக்க மற்றும் கீழ்திசை நாடுகளின் இலக்கியங்கள், நம்பிக்கைகள் நோக்கி திருப்பிய காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஒரு நூறு வருசத்து தனிமை' (One Hundred years of Solitude) போன்றவை ஆங்கிலத்திலிருந்த தமிழில் இவரால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமகால உலக கவிதைகள், வார்த்தையின் ரசவாதம் மற்றும் ஜென் மயில் இவரது சமீபத்திய படைப்புகள். ஐரொப்பிய மற்றும் லத்தின்-அமேரிக்க எழுத்தாளர்கள் பற்றிய இவரது சிறப்பான அறிமுகத்தையும், படைப்புகளையும் இவரது இந்த பதிவில் படிக்கலாம். பிரம்மராஜன் பற்றி தாஜ்

தொடர்ந்து தமிழில் நவீனக் குரலை, இலக்கியத்தை, கவிதையை ஒலித்துக் கொண்டிருக்கும் பிரம்மராஜன, தமிழ் இலக்கிய உலகிற்கு தனது மொழிபெயர்ப்புகள் மூலம் செய்துள்ள அளப்பரிய பணியை மனதில்கொண்டு எட்டுத்திக்கும் அவரது அறிமுகத்துடன் அவரது ஒரு மொழிபெயர்ப்பு கவிதையை முன்வைத்து தனது பயணத்தை தொடர்கிறது.

குறிப்பு - ஜமாலன் - 02/08/2009

************************************

ஸ்பரிசம்

எனது கைகள்
உனது உயிரின் திரைகளைத்திறந்து
உடுத்துகிறது உன்னை
இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில்
உனது உடல்களின் உடல்களைக் களைந்து
எனது கைகள்
கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென
வேறொரு உடலை
- பிரம்மராஜன்

Touch

My hands
open the curtains of your being
clothe you in a further nudity
uncover the bodies of your body
My hands
invent another body for your body

Octavio Paz

Translation by Eliot Weinberger

2 comments:

Unknown August 3, 2009 at 10:50 AM  

உங்களுடைய அறிமுகம் பதிவினைப் படித்தேன். நல்ல முயற்ச்சி தொடருங்கள்...

முனைவர் மு.இளங்கோவன் August 3, 2009 at 11:35 AM  

பிரம்மராசனை அறிமுகப்படுத்தியமைக்குப் பாராட்டுகள்
மு.இளங்கோவன்
புதுச்சேரி

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP