Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

ஓ.வி. விஜயன் – அறிமுகம்

>> Monday, April 19, 2010



ஓ. வி. விஜயன் (ஜூலை 2, 1930 - மார்ச் 30, 2005)




பரிணாம வளர்ச்சி என்பது எந்த ஒரு துறையிலும் நிகழ்வது தான். முன்னமே இருக்கும் நிலையை அடித்தலமாய் கொண்டு, அதை ஆதரித்தும் மறுத்தும் அதன் நீட்சியாய் வளர்ந்தபடி இருக்கும் அந்த துறை. ஆனால் எப்போதாவது ஒரு முறை ஒருவர் வந்து அந்த துறையை சட்டென நெடுந்தூரம் அழைத்துச்சென்றுவிடுவார். அப்போதிலிருந்து, அந்நிகழ்விற்கு முன் / அந்நிகழ்விற்கு பின் என இரண்டாக பிரித்துவிடலாம் அத்துறையை. காட்டாக, 1982ல் வெளிவந்த “ஜெ.ஜெ. சில குறிப்புகள்” மூலம் சுந்தர ராமசாமி தமிழ் நாவல் துறையை அப்படி ஒரு தூரத்திற்கு இட்டுச்சென்றார். கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு பாதிப்பை மலையாளத்தில் நிகழ்த்திய எழுத்தாளர் ஓ.வி. விஜயன். 1969ல் வெளிவந்த அவரது முதல் நாவலான “கசாக்கிண்டே இதிகாசம்”(கசாக்கின் இதிகாசம்) மலையாள நாவல் உலகில் ஓர் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது. மலையாள நாவல் இயக்கத்தை கசாக்கிற்கு முன் / கசாக்கிற்கு பின் என பிரித்துவிடலாம் என்னும் அளவிற்கு.

ஓ.வி. விஜயன் 1930ஆம் ஆண்டு பாலக்காட்டில் பிறந்தார். 1953ல் இவர் எழுதிய “பாதிரியார் கோன்ஸாலெஸிடம் கூறுங்கள்” என்ற சிறுகதையே இவரது முதல் இலக்கிய முயற்சி. 9 சிறுகதை தொகுப்புகளும், 9 நாவல்களும் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளராக மட்டுமன்றி கேலிச்சித்திரக்காரராகவும், பத்திரிக்கையாளராகவும் விளங்கினார். ஹிந்து, ஸ்டேட்ஸ்மேன், பாட்ரியாட் உள்பட இந்தியாவின் தலைசிறந்த பல இதழ்களில் பணிபுரிந்துள்ள விஜயனின் கேலிச்சித்திரங்கள் மூன்று தொகுப்புகளாக வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைகள் மற்றும் நாவல்கள் பலவற்றை இவரே ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார்.

கசாக்கின் இதிகாசம் என்ற தனது முதல் நாவலை எழுத இவர் 12 ஆண்டு காலம் எடுத்துக்கொண்டார். கசாக் எனும் கற்பனை கிராமத்தை கதைக்களமாக கொண்ட நாவல் “கசாக்கின் இதிகாசம்”. கசாக்கில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள பள்ளிக்கு ஆசிரியராக வரும் ரவி என்ற கதாபாத்திரத்தில் இருந்து தொடங்கும் இந்நாவல், ரவியின் இருத்தலியல் தேடல்களையும் அலைகழிப்புகளையும் அவரது வருகை கசாக்கில் நிகழ்த்தும் சலனங்களையும் விவரிக்கிறது. மனிதனின் இருப்பிற்கான காரணம் என்ன என்ற ஆதி கேள்விக்கு விடை தேடும் முயற்சியாகவும் இந்நாவலை கூறலாம். பாலக்காட்டின் தமிழ் கலந்த கொச்சை மலையாளம், காலத்தின் முன்னும் பின்னும் தங்குதடையற்று கதைசொல்லி உலாவும் விதம், மிகச்சிறிய வெளிநிகழ்வுகளின் மூலம் கதாபாத்திரங்களின் உள்போராட்டங்களை விளக்கிச்செல்லும் பாணி என நாவலின் பல பண்புகள் மலையாள இலக்கிய உலகின் மைல்கல்லாக இப்படைப்பை நிறுவின. “கசாக்கின் இதிகாசம்” மாத்ருபூமி வார இதழில் 1968ஆம் ஆண்டு தொடராக வந்து பெரும் வரவேற்பை பெற்றது. அடுத்த ஆண்டே புத்தக வடிவிலும் வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு இந்நாவல் ஓ. வி. விஜயனின் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் பென்குயின் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.

ஓ.வி. விஜயனின் மற்ற நாவல்கள் : தர்மபுராணம், குருசாகரம், மதுரம் காயந்தி, பிரவாசகண்டே வழி மற்றும் தலைமுறைகள்.

ஓ.வி. விஜயன், தேசிய அளவில் பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் பல்வேறு கேரள மாநில இலக்கிய விருதுகளையும் வாங்கியுள்ளார்.

10 வருடங்கள் பார்கின்ஸன்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த ஓ.வி. விஜயன், மார்ச் 30, 2005ல் மறைந்தார்.

கஸாக்கிண்டே இதிகாசம் நாவலின் ஒரு சிறு பகுதி, தமிழில் :

…முன்பொரு காலத்தில், ராட்சஸ பல்லிகளுக்கும் டினோசர்களுக்கும் வெகு காலம் முன்பு, ஓர் அலாதியான பயணத்தை துவக்கிய இரு மகரந்தத் துகள்கள், சூர்ய அஸ்தமனத்தின் ஒளிவெள்ளத்தில் குளித்துக்கொண்டிருந்த ஒரு பள்ளத்தாக்கை வந்தடைந்தன.

“அக்கா, இதற்கும் அப்பால் என்ன இருக்கிறதென பார்க்கலாம் வா” என்றாள் இளைய துகள்.

“பசுமை நிறைந்த இந்த பள்ளத்தாக்கை விட்டு வேறெங்கும் நான் போகப்போவதில்லை” என்றாள் மூத்தவள்.

“எனக்கு பயணம் வேண்டும். அறிதலின் சுகம் வேண்டும்” என்றாள் இளையவள், நீண்டிருந்த பாதையை ஆச்சரியத்துடன் பார்த்தபடி.

“அக்காவை மறந்துவிடுவாயா?”

“மாட்டேன்”

“மறப்பாய், தங்கையே. அது தான் விதி. அதில் பிரிவும் துயரமும் மட்டுமே நிறைந்துள்ளன”

இளையவள் பயணத்தை தொடர்ந்தாள். மூத்த மகரந்தத் துகள் பள்ளத்தாக்கில் தங்கினாள். அவளது வேர் ஈர மண்ணை துளைத்துச்சென்று, மரணத்தையும் நினைவையும் உணவாய்க் கொண்டது. பசுமையும் நிறைவுமாய் அவள் பூமியெங்கும் முளைத்தாள்.

… வெள்ளிக்கொலுசும் மையிட்ட கண்ணுமாய் செதலி மலையின் அடிவாரத்தில் பூப்பறிக்க வந்தாள் அச்சிறுமி. அங்கு சாந்தமாய், தனிமையில் நின்றிருந்தது பூத்துக்குலுங்கும் ஒரு செண்பக மரம். பூப்பறிக்க அதன் சிறு கிளையொன்றை வளைத்தாள் சிறுமி. கிளை முறிகையில் செண்பகம் கூறியது, “தங்கையே, என்னை மறந்துவிட்டாய்!”


ஆக்கம் : சித்தார்த்

Read more...

தமிழ் மொழிபெயர்ப்பு 'மீட்சி'-யாளர் பிரம்மராஜன்

>> Monday, August 3, 2009

தமிழ் சிறுபத்திரிக்கைகள் மற்றும் புதிய சிந்தனைகளின் காலமாக கருதத்தக்க 80-களில் வெளிவந்த மிக முக்கிய சிறுபத்திரிக்கை மீட்சி. கலை மற்றும் கருத்துக்களை முன்னெடுக்கும் அறிவிப்புடன் வந்த மீட்சி, ஐரோப்பிய மற்றும் லத்தின் அமேரிக்க இலக்கியத்தை தமிழில் அறிமுகப்படுத்திய ஒரு முக்கிய சிற்றிதழ் ஆகும். ஒருவகையில் தமிழில் ஐரோப்பிய, லத்தின் அமேரிக்க இலக்கியங்களின் மொழிபெயர்ப்புகள் வழியாக மொழிபெயர்ப்பிற்கான ஒரு மீட்சியை ஏற்படுத்தியது அப்பத்திரிக்கை எனலாம். அதன் ஆசிரியர் பிரம்மராஜன் என தமிழ் இலக்கிய உலகில் அறியப்பட்ட ராஜாராம் பிரம்மராஜன். ஆங்கில இலக்கியப் பேராசிரியரான இவர் தமிழின் நவீனத்துவத்தின் மற்றும் நவீன கவிதையின் தவிர்க்கவியலா ஒரு படைப்பாளி ஆவார். டி.எஸ். எலியட் துவங்கி எண்ணற்ற கவிதைகளை இன்றுவரை தமிழில் மொழிபெயர்த்தும், அறிமுகப்படுத்தியும் பெரும்பணி ஆற்றிக்கொண்டிருப்பவர். தமிழ்க்கவிதையின் நவீனக்குரலை முன்வைத்து இவர் எழுதிய பல கவிதைகள் புதிய தமிழ்க் கவிஞர்கள் பலருக்கும் ஆதர்சமாக உள்ளது.

தருமபுரி அரசுக் கலைக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக பணியாற்றிவருகிறார். அறிந்த நிரந்தரம், வலி உணரும் மனிதர்கள், ஞாபக சிற்பங்கள் மற்றும் புராதன இதயம் என்பன இவரது கவிதை நூல்கள் ஆகும். பல நவீன கவிதை உத்திகளையும், படிமங்களையும் தமிழுக்க அறிமுகப்படுத்தியவர் இவர். புதுக்கவிதை எனப்படும் நவீனக் கவிதைக்கான கோட்பாட்டு அடிப்படைகளை தந்த எஸ்ரா பவுண்டு பற்றி அறிமுகம், பதினைந்து ஐரோப்பிய நவீனத்துவவாதிகள் மற்றும் நாடோடி மனம் போன்ற முக்கியமான அறிமுக நூல்களை எழுதி உள்ளார். நவீன மனத்தின் இருத்தலியல் துயரங்களைச் சொன்ன ஆல்பர் காம்யூவின் எழுத்துக்கள், உலக கவிதைகள், உலக இலக்கிய முன்னோடியும், உலகின் தற்போதைய நவீன படைப்பாளிகள் பலரின் ஆதர்ச படைப்பாளியும் ஆன ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே கதைகள், நவீன நாவல்கள் பலவற்றை எழுதிய சிறந்த கதைசொல்லியான இடாலோ கால்வினோ கதைகள் மற்றும் ஐரோப்பிய இலக்கிய உலகை லத்தின்-அமேரிக்க மற்றும் கீழ்திசை நாடுகளின் இலக்கியங்கள், நம்பிக்கைகள் நோக்கி திருப்பிய காப்ரியல் கார்சியா மார்க்வெஸின் 'ஒரு நூறு வருசத்து தனிமை' (One Hundred years of Solitude) போன்றவை ஆங்கிலத்திலிருந்த தமிழில் இவரால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சமகால உலக கவிதைகள், வார்த்தையின் ரசவாதம் மற்றும் ஜென் மயில் இவரது சமீபத்திய படைப்புகள். ஐரொப்பிய மற்றும் லத்தின்-அமேரிக்க எழுத்தாளர்கள் பற்றிய இவரது சிறப்பான அறிமுகத்தையும், படைப்புகளையும் இவரது இந்த பதிவில் படிக்கலாம். பிரம்மராஜன் பற்றி தாஜ்

தொடர்ந்து தமிழில் நவீனக் குரலை, இலக்கியத்தை, கவிதையை ஒலித்துக் கொண்டிருக்கும் பிரம்மராஜன, தமிழ் இலக்கிய உலகிற்கு தனது மொழிபெயர்ப்புகள் மூலம் செய்துள்ள அளப்பரிய பணியை மனதில்கொண்டு எட்டுத்திக்கும் அவரது அறிமுகத்துடன் அவரது ஒரு மொழிபெயர்ப்பு கவிதையை முன்வைத்து தனது பயணத்தை தொடர்கிறது.

குறிப்பு - ஜமாலன் - 02/08/2009

************************************

ஸ்பரிசம்

எனது கைகள்
உனது உயிரின் திரைகளைத்திறந்து
உடுத்துகிறது உன்னை
இன்னும் கூடுதலாகும் நிர்வாணத்தில்
உனது உடல்களின் உடல்களைக் களைந்து
எனது கைகள்
கண்டுபிடிக்கின்றன உனது உடலுக்கென
வேறொரு உடலை
- பிரம்மராஜன்

Touch

My hands
open the curtains of your being
clothe you in a further nudity
uncover the bodies of your body
My hands
invent another body for your body

Octavio Paz

Translation by Eliot Weinberger

Read more...

அறிமுகம்

>> Saturday, July 25, 2009

‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும் - கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.’ என்றான் மகாகவி பாரதி. ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து பெறும் கலைச்செல்வங்கள் அம்மொழியை மேலும் வளமானதாகவும், வனப்பானதாகவம் மாற்றுகிறது. பழம்பெருமையும், பாரம்பரீயமும் பேசி தனது மொழியை தானே உயர்த்திக்கொண்டு வாழும் "கிணற்றுத்தவளை" வாழ்வைவிட்டு வெளியேறி உலகின் எட்டுத்திக்கும் சுழற்றியடிக்கும் காற்றை, தென்றலை சுவாசிக்க வெவ்வேறு மொழிகளின் வளர்ச்சியையும் புரிந்துகொண்டு அதனை நமது மொழிக்குள் கொண்டுவருவதும், நமது மொழியின் சிறப்பை பிற மொழிகள் அறிந்து கொள்வதற்குமான ஒரு பாலமே மொழிபெயர்ப்பு.

இவ்வலைப்பதிவு மொழிபெயர்ப்பிற்காகவென தனிக்கவனம் செலுத்தும் வண்ணம் உருவாக்கப்படுகிறது. இது ஒரு கூட்டு முயற்சி. நண்பர்கள் இப்பணியில் இணைந்து செயல்பட ettuththikkum@gmail.com மின்அஞ்சலில் தொடர்புகொண்டு தங்களது மொழி பெயர்ப்புகளை வலை ஏற்றலாம். விதிமுறை என்று எதுவும் இல்லை. அதிகபட்சம் இலக்கியம், கலை படைப்புகள் மற்றும் அவை சார்ந்த கோட்பாடுகள், உரையாடல்கள் மற்றும் விவாதங்களை மொழிபெயர்த்து வெளியிடலாம்.

  1. நீங்கள் மொழிபெயர்க்கும் படைப்பை அல்லது கட்டுரையை மூல மொழியுடன் அனுப்பினால் அதனை மொழிபெயர்ப்பில் திறமை உள்ள நண்பர்களிடம் தந்து சரிபார்த்து வெளியிடப்படும்.

  2. அரசியல் சார்ந்த மொழிபெயர்ப்புகளை தவிர்ப்பது நலம். கலை, இலக்கிய மொழிபெயர்ப்புகளுக்கு அதிகம் கவனம் செலுத்துதல் நலம்.

  3. கூடுமானவரை ஆங்கிலம்-தமிழ் அல்லது தமிழ்–ஆங்கிலம் என இருந்தால் சிறப்பு. பிறமொழியிலிருந்து மொழிமாற்றம் செய்யப்படுபவை அம்மொழிதெரிந்த நண்பர்களிடம் தந்து சரிபார்க்கப்பட்டே வெளியிடப்படும். அதற்கு சற்று தாமதமாகலாம்.

  4. வருட இறுதியில் சிறந்த மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து நூலக வெளியிடும் எண்ணமும் உள்ளது. அதனால் கூடுமானவரை காப்பிரைட் பிரச்சனைகள் இல்லாமல் மொழிபெயர்ப்பது நல்லது. அப்படி மொழிபெயர்த்துவிட்டாலும், அதற்கான காப்பிரைட் பெற சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு நாம் முயற்சிப்போம்.

மொழிபெயர்ப்பிற்கான ஒரு வலைப்பதிவாக இதனை துவக்கியுள்ளோம். துவக்கமாக எங்களால் இயன்ற மொழிபெயர்ப்புகளை இதில் வெளியிடுகிறோம். நண்பர்கள் தங்களது மொழிபெயர்ப்புகளை அனுப்பலாம். அல்லது இதில் வெளிவரும் மொழிபெயர்ப்புகளையும் திருத்தலாம். இந்த கூட்டமுயற்சியால் "பலநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களை" தமிழில் கொண்டுவருவது நமக்கும் வருங்காலத் தலைமுறைக்கும் பயனுடையதாக அமையும்.

சிற துளிகள்தான் பெருவெள்ளத்திற்கு காரணம் என்பது நமது மூதாதைகள் கண்ட முதுமொழித்தானே….

அன்புடன்

எட்டுத்திக்கும்

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP