ஏ. கே. ராமானுஜன் – தமிழின் “அகநிலப்பரப்பை” புறத்திற்கு எடுத்துச் சென்றவர்.

>> Sunday, July 26, 2009

ங்கிலேயக் காலனியம், தங்கள் தேசத்து மற்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள், அறிவுஜீவிகள் கொண்டு “இந்தியவியல்” (Indology) என்கிற ஒரு ஆய்வுப் புலத்தைக் கட்டமைத்தது. இந்த ஆய்வுப்புலம் இந்திய மொழிகளில் குறிப்பாக வடமொழியான சமஸ்கிருதத்தில் இருந்த எண்ணற்ற புராணங்கள், வேதங்கள் மற்றும் இலக்கியங்களை மொழிபெயர்த்து ஆங்கில உலகிற்கு இந்தியா பற்றிய ஒரு அறிமுகத்தை செய்வித்தது. இதன் தொடர்ச்சியாக இந்திய ஆய்வாளர்கள், அறிவுஜிவிகள் ஆங்கிலம் படித்து, இந்தியா பற்றி ஆய்வுகளையும், இந்திய இலக்கியங்களையும் மொழிபெயர்ப்புகள் வழியாக வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு முயன்றனர். இத்தகைய இந்தியவியல் ஆய்வுப்புலத்தின் மிக முக்கிய ஆய்வாளர்களில் ஒருவர் ஏ.கே. ராமானுஜன். இவர் வடமொழியில் அதீத கவனம் செலத்திவந்த மேற்கத்திய ஆய்வுப் புலத்தை தென்னிந்திய இலக்கியங்கள் நோக்கி திருப்பிவிட்டவர் என்றால் மிகையாகாது.



தெற்காசிய ஆய்வியலில் குறிப்பிடத்தகுந்தவரும், இந்தியாவின் தென்பகுதிகளின் இலக்கியங்களையும், இந்திய நாட்டுப்புறக் கதைகளையும் விரிவாக ஆய்வு செய்து அதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தென்னிந்தியா பற்றிய கவனத்தை உலக அறிவுச்சுழலில் உருவாக்கிய ஒரு முக்கிய இலக்கிய, மொழியியல், ஆய்வாளர், கவிஞர் ஏ.கே. ராமானுஜன்.



1929-ல் மைசூரில் பிறந்தவர். 1959-ல் அமேரிக்காவிற்கு ஆய்விற்காக சென்றவர். 1993-ல் இறக்கும்வரை பல பல்கலைக்கழகங்களில் ஆய்வாளராக, விரிவுரையாளராக இருந்தவர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய அறிவுஜீவிகளில் ஒருவரும், பல பல்கலைக் கழகங்களில் இந்திய குறிப்பாக தென்னிந்திய மொழிகள் பற்றியும், அவர்களது இலக்கியம், வாழ்வியல் பற்றியும் ஆய்வுப்புலங்களையும், தென்னிந்திய மொழிகளுக்கான கவனத்தையும் உருவாக்கியவர். அமேரிக்க-ஐரோப்பிய தத்துவங்களும், அதன் யுத-கிறித்துவ அடிப்படைகளும் உலக சிந்தனை முறையில் செலத்தும் ஆதிக்கத்திற்கு எதிராக, கீழ்திசையியல் சுதந்திரச் சிந்தனைமுறையை முன்வைத்தவர்.



ஆங்கிலத்தில் எழுதியவர் என்றாலும், தான் பிறந்த நிலத்தின் மொழியான கன்னடம் மற்றும் தனது குடும்ப மொழியான தமிழ் ஆகியவற்றில் புலமை மிக்கவராக இருந்ததால், அம்மொழிகளின் முக்கிய இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். குறிப்பாக, தமிழின் சங்க இலக்கியங்களான அகநானூறு, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய நாட்டுப்புறக் கதைகளை தானே தொகுத்து அவற்றையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மொழியியல் குறித்து ஆய்வுகள் செய்துள்ள ஒரு மொழியியல் அறிஞர். சிவம் என்கிற புராணிகம் பற்றிய இவரது ஆய்வு இந்திய புராணிக ஆய்வில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஐரோப்பிய-அமேரிக்க மையவாத காலனிய சிந்தனை கட்டமைக்கும் ஒருபடித்தான (Streotype) (கருப்பர்கள், காட்டுமிராண்டிகள், பழமைவாதிகள், நாகரீகமற்றவர்கள் இப்படியான) ஆசிய-இந்திய காலனிய பிம்பத்திற்கு எதிராக, சுதந்திரமான கீழ்திசைவியல் சிந்தனை பற்றிய கருத்தாக்கத்தை முன்வைத்தவர். “இந்திய வழியில் சிந்திப்பது” (Is There an Indian Way of Thinking?) என்பதான பின்காலனிய ஆய்வியல் கருத்தாக்கத்தை உருவாக்கியவர். இவரது கவிதைகள் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தால் முழுத்தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இவரது சில கவிதைகள் பின்காலனியக் கருத்தாக்கமானcover கலப்பினம் (hybridity), போலச்செய்தல்-பகடி (mimicry) என்பதை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளதை ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள். இவர் குறித்த சுருக்கமான அறிமுகத்தை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம். இவரது சில கவிதைகளை ஆங்கிலத்தில் இங்கு வாசிக்கலாம்.

இவரது நாட்டுப்பறவியல் நூலான Folktales from India, Oral Tales from Twenty Indian Languages. இங்கு இணையத்தில் வாசிக்க கிடைக்கும். இவரது நூல்கள் சில தமிழில் வெளிவந்துள்ளது.



எஸ். ராமகிருஷ்ணன் ஏ.கே. ராமானுஜன் பற்றி எழுதிய விரிவான அறிமுகம் உயிர்மை இதழில் வெளிவந்துள்ளது.



எட்டுதிக்கும் ஏ.கே. ராமானுஜன் போன்ற மொழிபெயர்ப்பு முன்னொடிகளுக்கு செய்யும் கௌவரமாக, அவரது மொழிபெயர்ப்பு ஒன்றை மீள்பதிவு செய்து தனது பணியைத் துவக்குகிறது.



– குறிப்பு – ஜமாலன். – 26/07/2009

1 comments:

கிருஷ்ண மூர்த்தி S July 28, 2009 at 4:04 PM  

நல்ல முயற்சி! வெற்றி பெற நல்வாழ்த்துக்களுடன்!

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP