மலையாளக் கவிதைகள் - எஸ். ஜோஸப்

>> Wednesday, May 12, 2010

மலையாளக் கவிதைகள் -  எஸ். ஜோஸப்


தமிழில் : சுகுமாரனஅக்காவின் பைபிள்

அக்காவின் பைபிளில் இருப்பவை:

தையல் விட்ட ரேஷன் கார்டு

கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள்

கந்துவட்டிக்காரர்களின் அட்டை

திருவிழா, பண்டிகை நோட்டீசுகள்

அண்ணன் குழந்தையின் போட்டோ

குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம்

ஒரு நூறு ரூபாய் நோட்டு

எஸ்எஸ்எல்சி புத்தகம்.அக்காவின் பைபிளில் இல்லாதவை:

முன்னுரை

பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு

நிலப்படங்கள்

சிவப்பு மேலட்டை.


மீன்காரன் / பக். 20/ 2003

****

காதலிக்கும்போது...


ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளுடைய மணம்,

நிறம், சிரிப்பையெல்லாம்

வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்அவளுடைய பவுடர்

சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை

அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள்

கதைப் புத்தகங்கள்

அவுன்சு குப்பியில் நிரப்பிய மணல்வெளியில் ரோஜா

பலரகமானவை.ஜன்னலினூடே இருளும் அந்தியை

வெறுமே அவள் பார்த்தபடியிருப்பதையெல்லாம்

மனதில் நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது

எப்போதும்அவள் எப்போதும் இறந்துபோகலாம்

அவள் இல்லாத ஒரு பெரும் உலகம்

இங்கிருக்கும் எப்போதும் இதுபோலவே.அவளில்லாமலும் வழிகள் நீளும்

திறந்திருக்கிறது ஒப்பனைப் பொருள்

சுவர்க்கண்ணாடியில் மரமசைகிறது

வழக்கம்போல இதோ

பறவைகள் வந்து

செடிகளுக்கு மேலே

சலசலத்து நிற்கின்றனஅப்படியே இருக்கையில் பொழுதும் இருளும்ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது

அவளை நினைத்து அவன் தலை குனிந்து

நசிந்தவனைப் போல நடக்க நேரும்இருட்டுக்குள் அவன் ஜன்னலாவானே

அவளை எப்போதும் கனவில் காண்பானே

கனவினூடவன்

அவளையும் தேடி

மரணத்தை நோக்கி

நடந்து போவானே.


மீன்காரன் / பக். 47 / 2003

**

படகைப் பற்றி ஒரு கவிதைபுத்தகத்தில் ஒரு கவிதை எழுதிவைத்தேன்

எடைக்கு விற்ற காகிதங்களில் அதுவும் இருந்தது.கடைக்காரன் மிளகாயமோ வெங்காயமோ பொட்டலம் கட்டியிருப்பானோ?

குடிசையிலே குழந்தைக்கு அது கிடைத்திருக்குமோ?

அவனால் எழுத்துக் கூட்டிப் படிக்க முடிந்திருக்காதே?

அவன் தங்கைக்குப் படகு செய்து கொடுத்திருப்பானோ?

தோணியில் அவர்கள் எங்கே போக?ஏனென்றால்

ஏராளமான கவிதைகள் அங்கும் இங்கும்

எழுதிப் போட்டிருக்கிறேன்

கடையிலிருந்து மிளகாயும் வெங்காயமும்

பொட்டலம் கட்டிய காகிதங்கள் வாசித்திருக்கிறேன்

எழுத்துக் கூட்டிப் படிப்பது சில வேளைகளில் கடினந்தான்

தங்கைகளுக்குப் படகு செய்து கொடுத்திருக்கிறேன்

தோணியில் அவர்கள் ஏறியதுமில்லை.புத்தகத்தில் எழுதிவைத்த கவிதை

எதைப் பற்றியதாக இருந்தது?

எதைப் பற்றியதாக இருக்க வேண்டும்?

படகைப் பற்றி.

சரி, அது படகைப் பற்றியதுதான்.


மீன்காரன் / பக். 37 / 2003

**மீன்காரன்

கொஞ்சமே நீரோட்டமுள்ள வாய்க்காலில்

மீன்காரன் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தான்.தாழைகள் தென்படவில்லை

வாய்க்கால் நேராகப் போய் முட்டித் திரும்பும் இடம்

ஒரு ஒர்க்ஷாப்பாக இருந்தது.

அதன் கற்சுவரும் தெரியவில்லை.வாய்க்காலுக்கு இணையாக

தெற்கும் வடக்குமாக

எம்.சி.ரோடு பாய்ந்து போனது.நாங்கள், குழந்தைகள்தாம் பார்த்தோம்

அரையடிகூட உயரமில்லாத நீரில்

கவிழ்ந்து கிடக்கும் மீன்காரனின் உடல்

பாத்திரம், தராசும் படிக்கல்லும்.இவனை வலிப்பு சுழற்றிப்போட்டிருக்கிறது

தலையில் தண்ணீர் விளையாடுகிறது

தண்ணீரில் தாழை மடல்

குத்திக் கிழித்து விளையாடுகிறது.வாய்க்காலின் ஓய்ந்துபோன மூலையில்

நீர்ப்பூச்சி சுழல்கிறது.இப்போது அதே இடத்தையடையும்போது

தெரிபவை:ஒரு கோழிக்கடை

சிமெண்ட் பூசிய ஒர்க்ஷாப்

மண்கொட்டி உயர்த்திய வயல்மீன்காரனைப் பார்க்கவே முடிவதில்லை.


மீன்காரன் / பக். 54 / 2003


**

இந்த வரிகளுக்கிடையில்


இந்த வரிகளுக்கிடையில்

சில சமயம் நானும் சிலசமயம் நீங்களும்

இல்லாமற் போகலாம்.

நமக்கிடையில் அறிமுகமில்லை.

பட்டணத்திலோ கடற்கரையிலோ பார்த்திருக்கலாம்

பாலத்தின் கைப்பிடிச் சுவரைப் பற்றிக்கொண்டு

கீழே ஒருவன் தூண்டில்போடுவதைப் பார்த்துக்கொண்டிருந்தது

நீங்களாக இருக்கலாம்

அல்லது

இறைச்சியோ மருந்தோ வாங்கப்

போகும்போது பார்த்திருக்கலாம்

நாமெல்லாம் எத்தனை சாதாரணர்கள், இல்லையா?

அசாதாரணமான காரியங்கள் செய்ய முயல்கிறோம்

நீங்கள் ஒரு வண்டி ஓட்டுகிறீர்கள்

அல்லது லோன் வாங்கி ஒரு கடை தொடங்குகிறீர்கள்

பரீட்சையில் தேறுகிறீர்கள் பாட்டுப் பாடுகிறீர்கள்

நான் கவிதைகள் எழுத முயல்கிறேன்

நமது செயல்கள் நம்மைத்தாண்டி நீண்டு நிற்கலாம்

எழுத்துக்களுக்கிடையில் நான் இல்லாமற் போகலாம்

வாசிப்புக்கிடையில் நீங்களும்.


ஐடென்டிட்டி கார்ட் / பக். 21 / 2005

**


ஐடென்டிட்டி கார்டு


படித்துக்கொண்டிருந்த காலத்தில்

ஒரு பெண் சிரித்துக்கொண்டு வந்தாள்அவளுடைய சோற்றுக்கும் சூரைமீன் கறிக்கும் மேலாக

எங்களுடைய கைகள் குழைந்தனநாங்கள் ஒரே பெஞ்சில்

இந்து கிறித்துவக் குடும்பமானோம்நான் நெரூதாவின் கவிதைகள் வாசித்து நடந்தேன்

அதற்கிடையில் என் ஐடென்டிட்டி கார்டு காணாமற் போனதுநான் பார்த்தேன். கார்டைக் கொடுத்தவள் சொன்னாள்:

சிவப்புப் பேனாவால் குறித்திருக்கிறதே

ஸ்டைபெண்ட் வாங்கிய கணக்கு.இந்தக் காலத்தில் ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் உட்கார்ந்து

தம்மை மறப்பதைப் பார்ப்பதேயில்லை

சற்றுக் கழிந்து அவர்கள் பிரிந்து போவார்கள்

இனி அவர்கள் சேர்ந்தாலும் வியப்பில்லை

அவர்களுடைய ஐடென்டிட்டி கார்டுகளில் செந்நிறக் குறிகள் இருக்காது.ஐடென்டிட்டி கார்டு / பக். 28 / 2005

***


நிலவை நேசித்த பெண்


வீடுவாசல் பெருக்கி, செருப்பணிந்த

கோழிக்குத் தீனிவைத்து, சிரிக்கின்ற

பூனைக்குப் பால்வார்த்து, காலையுணவுண்டு

நேசம் பரிமாறி நிலவை நேசித்து

இரவுக்குப் பயந்து நீ உறங்குகிறாயோ?சோஃபீ, பிஞ்சுமனமே, உனக்கானவை என்

கவிதைக் குருவிகள் எல்லாமும்.நிலவை நேசித்த குழந்தாய், தனிமையால்

உருவாக்கப்பட்டாயோ நீ, பள்ளியின்

வாசலில் கூட்டாளிகள் ஓடியாட

பேசாமல் பார்த்து நிற்கிறாய் சோஃபியா, நீ,

பேசாதிருப்பதேன் பசித்ததோ?கூட்டாளிகளில்லாத பெண்ணே, ஒருமுறை நீ

பாட்டுப் பாடக் கேட்டேன், உன் நீள்முடி

காற்றிலவிழ்த்து வட்டமிட்டு நீ

விழுந்து சிரிப்பதைப் பார்த்தேன், வழிகளில்

தனக்குத்தானே மெதுவாகப் பேசி

மெல்ல நடந்து நீ போவதைப் பார்த்தேன்.வீட்டருகில் ஒருமுறை காணாமற்போக

வாய்க்கால் கரைவரை தேடித் திரும்பிய

நீ வளர்க்கும் நாய், குரைத்தபடி

கேட்டதென்ன? பதிலுக்கு என்ன சொன்னாய் நீ?

ஆந்தைகள் முனகும் இரவில்

பெட்டைப் பூனையும் நீயும் உறங்குகிறீர்கள்

பிரார்த்தனைபோல குறுக்கும் நெடுக்குமாய்.குட்டிச் சிறுத்தைகள்போல வெய்யில்

துள்ளி விளையாடிக் களிக்கும் புலரியில்

வீட்டின் கதவை விரியத் திறந்து நீ

சிந்தும் புன்னகை வாழ்வின் நீர்.தாயிழந்த குழந்தாய், உனக்கு நான்

என்ன கொடுக்க, பசிக்கும், நேசத்துக்கும்?

என் கை வெறுமை, இதயம் விஷமயம்

இல்லை, சேற்றில் மலர்கிறது பவளமல்லி.என் கவிதை காட்டு நாவல் பழம்

என் கவிதை தாயின் உதடுகள்

என் கவிதையின் ஞானஸ்நானத்தால்

உன்னைச் சகோதரியாக்குகிறேன் நான்.துக்கங்களையெல்லாம் கவிதைகளாக்க

துக்கமே, நீ என்னுடனே இருக்க வேண்டும்.


கறுத்த கல் / பக். 16 / 2000

***
கறுத்த கல்


கறுத்த கல்லின் மேலமர்ந்து

சிறுவயதில் விளையாடியதை நினைக்கிறேன்.

எனக்கு முன்பே பிறந்த கல்லிது

கறுத்தவன் என் கடுமையுள்ள கல்

வெய்யிலிலும் கொடும் மழையிலும்

ஒரு வருத்தமுமில்லாமல்

உணர்ச்சியில்லாமல் கிடந்திருந்த கல்

அதன் யானைமுதுகிலமர்ந்து

சடசடவென்று மண்ணப்பம் சுட்டு விளையாடியதை நினைக்கிறேன்.அரண்ட காற்றின் சன்னலில்

அம்மா வருவதைப் பார்த்து

கறுத்த கல்லின் தாழ்வாரத்தில்

தனித்திருந்தேன்

மகர வயல்கள் கடந்து பணியிடங்களிலிருந்தோ

தலையில் ரேஷனும் பயிறுமாக

தூரத்து நாற்சந்தியிலிருந்தோ

அம்மா வருகிறாள்.பசிக்கு மேலாகச் சாரல் மழை.இருள் மூடிய விளைநிலங்கள்

இருட்டில் பாடும் மலைப் பறவை

இருட்டினூடே வரும் அண்டை வீட்டான்

ஓரினச் சேர்க்கையாளனுக்கு நிறமில்லை.இவையெல்லாம் பால்யத்தின் குப்பைக்கூடை

இவையெல்லாம் மொத்தமாய் எறிந்து தொலைவில் போகிறேன்

எனினும்

ஆய்வகத்தைக் குடைந்து போயின பிரவாகங்கள்.கறுத்த பாதைகள்

கறுத்த வேசிகள்

கறுத்த குழந்தைகள்

கறுத்த புத்தகத்தைத் திறக்கையில் காலாட்படைகள்

கறுப்புக்கு என் கறுப்புக்கு

நான் திரும்பி வருகிறேன்.

கருங்கல் உடைத்து எனக்கு

உணவு தந்த தகப்பனை

மரணத்திலிருந்து அழுகையால்

நாங்கள் மீட்ட அன்னையை

சிரட்டை எரித்து

உடைகளைத் தேய்த்துத் தந்த சகோதரிகளை

மறந்தாலும் உன்னை மறவேன் நான்.போதாது எனக்கு, கருங்கல்லே,

உன் உள்ளம் குடைந்து போகணும் நான்

தூர வனங்களில்

இறந்த நண்பர்கள் கிடக்கும் கல்லறையின்

மூடி திறந்து பார்க்கணும் நான்

தெருவிலலையும் நாடோடிக்கு இசைந்தவன் ஆகணும்

அவளுடன் சேர்ந்து மழையில் நனையணும்

வானில் ஒரு புலியை

விழிகளால் தோண்டி வரையணும்.கடும் குளிரில் கறுத்த வெறுமை

அதற்குள்ளிருக்கிறது கல்

கதவு மூடாத மௌனத்துக்குள்ளே

மறு வாக்கு இல்லாமல் உறங்குகிறதோ?

கருங்கல் முன்பு ஆழத்திலிருந்து எழுந்து வந்ததோ?

முடிவின்மைக்குள்ளே உருண்டு போகுமோ?


கறுத்த கல் / பக்.36 / 2000


எஸ். ஜோசப் என்ற செபாஸ்டியன் ஜோசப் 1965ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்டம் பட்டித்தானத்தில் பிறந்தார். பதினாறாவது வயது முதல் கவிதை எழுதி வருகிறார். இப்போது எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியில் மலையாள விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். கோட்டயத்தில் வசிக்கிறார்.


தொண்ணூறுகளில் வாசக கவனத்துக்கு வந்த புதிய தலைமுறையின் நம்பிக்கைக்குரிய கவிஞர்களில் ஜோசப்பும் ஒருவர். இதுவரை நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. அவை - கறுத்த கல் (2000), மீன்காரன் (2003), ஐடண்டிட்டி கார்டு (2005), உப்பன்டெ கூவல் வரைக்குன்னு (2009). இதில் ‘கறுத்த கல்’ தொகுதி கேரள சாகித்திய அக்காதெமியின் கனகஸ்ரீ விருதும் ‘உப்பன்டெ கூவல் வரைக்குன்னு’ தொகுதி திருவனந்தபுரம் புத்தக் கண்காட்சி விருதும் பெற்றவை. ‘புலரியியிலெ மூந்நு தெங்ஙுகள்’ என்ற நாவலும் எழுதியிருக்கிறார். இங்கே இடம் பெறும் கவிதைகள் ஜோசப்பின் மேற்குறிப்பிட்ட தொகுதிகளிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. 2008 மே மாதம் ஜெயமோகன் உதகை நாராயண குருகுலத்தில் நடத்திய தமிழ் மலையாளக் கவிஞர்கள் சந்திப்பில் விவாதிப்பதற்காக இவற்றுள் பெரும்பான்மையும் தமிழாக்கம் செய்யப்பட்டன.
 
நன்றி : சுகுமாரன் & காலச்சுவடு
 

0 comments:

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP