பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்
>> Wednesday, May 26, 2010
மாச்சு பிச்சுவின் சிகரங்கள் - ஒரு முன் குறிப்பு
- சுகுமாரன் நெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.
இன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.
காலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு
ஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.
மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
---------------------------------
ஒன்று
காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல
குளிர்காலத்தின் உச்சத்தில்
நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது
கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று
நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்
வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்
இசைவான சூழ்நிலையில்
தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.
(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;
மௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு
கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்
காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)
வயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,
இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்
புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.
வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய
விசையுள்ள வாளைப்போல
பூமியின் பொன் நாளங்களுக்குள்
அதன் மர்ம உறுப்புகளுக்குள்
எனது மென்மையான கையை நுழைத்தேன்.
ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து
கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.
ஒரு குருடனைப்போல
நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்
மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)
நன்றி : சுகுமாரன்
0 comments:
Post a Comment