பாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்

>> Monday, June 7, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்
*******************************
இரண்டு
மலர் மலருக்காகத்
தனது விதைகளைப் பரப்புகிறது.
பாறை, தனது மலர்ச்சியை
வைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.
எனினும், மனிதன்
கடலின் நிச்சயிக்கப்படாத ஆழத்திலிருந்து
தானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்
கசக்கியெறிகிறான்.
தனது கைகளில் துடிக்கும்
உலோகத்தைத் துளையிடுகிறான்.
துணிகளுக்கும் புகைப்படலத்துக்குமிடையில்
சீக்கிரமே அகப்பட்டு
கசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து
மூழ்கிப்போன தரைமீது கிடக்கிறான்.
படிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,
குளிர்ந்த தடாகங்களாக ஆகிறான்.
எனினும் இது போதவில்லை:
கொல்கிறான், அதை
வெறுப்புடன் தாளில் ஒப்புக்கொள்கிறான்,
பழக்கத்தின் போர்வையில் மூடிமறைக்கிறான்,
துவேஷமுள்ளாடையால் அதைக்
கிழித்துத் துண்டாடுகிறான்.

இல்லை:
தாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்
சிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்
அவனது இரத்தநாளங்களைக்
காப்பாற்றுவது யார்?
உயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து
சீற்றம் இப்போது
இரத்தமாகப் பீறிடும்போது,
பிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்
பனித்துளி
நூற்றாண்டுகளாக மறையாதிருக்கும்
தனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.
இதயமே,
இலையுதிர்காலத்தின் பள்ளங்களுக்கிடையில்
நசுங்கிச் சிறிதான முகமே!


எத்தனைமுறை
குளிர்கால நகரத்தெருக்களில்
அல்லது பேருந்தில்
அந்தியில் ஒரு படகில்
அல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய
விழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி
மனித மகிழ்வின் உறைவிடத்தில்
தங்கியிருக்க விரும்பினேன்.
முன்பு,
ஒரு கல்லிலிருந்தோ
அல்லது
ஒரு முத்தத்தின் மின்வெட்டிலிருந்தோ
நான் தொட்டுணர்ந்த
நித்தியமானதும் அளந்தறிய முடியாததுமான
உண்மையின் இழையைத் தேடினேன்.

(அது
சிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல
முடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்
என்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.
என்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.
என்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.
தனித்திருக்கும் பனிப்படலம்முதல்
இந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)

திருஷ்டிப்பொம்மையின் உடைகள்போன்ற முகக்குவியல்களையும்
அல்லது
உள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்
திகைப்படைந்து நின்ற இனங்களின்
பட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்
என்னால் வசப்படுத்த முடிந்தது.

எனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.
தடுக்கப்பட்ட நீர்போலப் பாயவோ
நிலக்கரிபோல வெம்மையாகவோ
ஸ்படிகம்போல குளிர்ச்சியாகவோ
எனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.

என்னவாக இருந்தான் மனிதன்?
அவனது உரத்த உரையாடலின் அடுக்குகளில் எங்கே
கடைகளுக்கும் சங்கொலிக்குமிடையில்
அவனது உலோக அசைவுகளில் எதில்
அழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு?

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

0 comments:

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP