பாப்லோ நெரூதா கவிதைகள் - 7 - சுகுமாரன்
>> Monday, July 12, 2010
மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
ஏழு
@
ஒரே இருட்குழியில் மடிந்தவர்களே,
ஒரே மலையிடுக்கின் ஆழத்து நிழல்களே,
உங்களது மகத்துவம் நோக்கி
உண்மையான, சகலத்தையும் விழுங்கும் மரணம்
இப்படித்தான்
துளைவிழுந்த பாறைகளிலிருந்து,
செந்நிற சுவர்ப்புடைப்புகளிலிருந்து,
அருவியாகப் பெருகும் வாய்க்கால்களிலிருந்து வந்தது.
ஓர் இலையுதிர்காலம்போல
நீங்கள் தடுமாறி ஒற்றை மரணத்துக்குள் விழுந்தீர்கள்.
இன்று, வெறும் காற்று
உங்களுக்காகத் துக்கப்படுவதில்லை.
உங்களது களிமண் கால்களை உணர்வதில்லை.
மின்னலின் கத்திகள் வானத்தை வெட்டியபோதும்
வலுவான மரம் காற்றால் வீழ்த்தப்பட்டு
பனியால் விழுங்கப்பட்டபோதும்
ஆகாயத்தை வடிகட்டிய
உங்கள் பாத்திரங்களை நினைக்கவில்லை.
அது உயர்த்திய கை சட்டென்று
சிகரங்களிலிருந்து காலத்தின் ஆழத்தில் எறியப்பட்டது.
நீங்கள் இப்போது இல்லை.
சிலந்தி விரல்கள், மெல்லிய இழைகள், பின்னப்பட்ட துணி...
நீங்கள்
என்னென்னவாக இருந்தீர்களோ, அவையெல்லாம்-
சடங்குகள், சிதிலமான சொற்கள்,
கண்கூசச் செய்யும் வெளிச்சத்தின் முகமூடிகள்...அவையெல்லாம்
உதிர்ந்து போயின.
எனினும்
கல்லிலும் மொழியிலும் நிரந்தரமாயிற்று ஒன்று.
உயிருள்ளதும் இறந்ததும் விறைத்ததுமான
ஒவ்வொரு கையும்
ஒரு குவளைபோல அந்த நகரத்தை உயர்த்தின.
ஏராளமான மரணங்களால்
தாங்கி நிறுத்தப்பட்ட அந்த மதில்,
ஏராளமான வாழ்வுகளால்
உராயப்பட்ட நெருப்புக்கற்களின் இதழ்கள்,
வாடாத ரோஜா, நமது வீடு, ஆண்டீஸ் மலைத்தொடர்கள்,
அதன் பனிபடர்ந்த எல்லைகள்.
களிமண் நிறக் கை
முழுவதும் களிமண்ணாக மாறியபோது,
தாக்கப்பட்ட சுவர்கள்மீதும்
கொத்தளங்கள் மீதும்
குறுகிய இமைகள் மூடியபோது,
நம்முள்ளிருந்த எல்லாரும்
மறுபடியும் வளைக்குள் ஒடுங்கியபோது,
மானுட விடியலின் சிகரங்களின்மேல்
கலையாத துல்லியமாக மிஞ்சியது:
எப்போதும் நமது மௌனத்தை நிறைத்துவைத்திருக்கும்
இந்த நீண்ட குவளை.
ஏராளமான வாழ்க்கைகளைக் கடந்த
இந்தக் கல்லின் வாழ்வு.
@
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)
நன்றி : சுகுமாரன்
0 comments:
Post a Comment