பாப்லோ நெரூதா கவிதைகள் - 8 - சுகுமாரன்

>> Monday, July 19, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


எட்டு
@

என்னுடன் வா, அமெரிக்கக் காதலியே!

என்னோடிணைந்து இந்த மர்மக்கற்களை முத்தமிடு.
உருபம்பா நதியின் வெள்ளிநீரோட்டம்
மகரந்தத்தை அதன் தங்கக்கிண்ணத்தில் பறந்துவிழச் செய்கிறது.
குருட்டுக்கொடிகளின் புதர்,
உறைந்த தாவரம்,கட்டறுபடாத பூமாலை - எல்லாமும்
இந்தப் பெட்டகத்தின் மௌனத்திலிருந்து
உயரப் பறந்துபோகின்றன.
பூமியின் சிறகுகளுக்கிடையில்
குறைபட்ட வாழ்வே வா,
அறையும் காற்றில் செதுக்கப்பட்ட ஸ்படிகமே,
கானக நீரே,
படையெடுப்புக்காக அணிவகுத்து நிற்கும்
மரகதங்களைப் பிளந்து
பனியின் விளிம்பிலிருந்து விழு.

ஆண்டீஸ் மலையின் நெருப்புக் கற்களிலிருந்து
இரவு சரிந்து
விடியலின் பாதம் தொடும்வரை
காதல்செய், காதல்செய்.
பிறகு வெளியே வந்து
பாடிக்கொண்டிருக்கும்
பனியின் குருட்டுச் சந்ததியைப் பற்றிச் சிந்தனைசெய்.

ஒலிக்கும் தறிகளின் வில்கமயுவே,
காயம்பட்ட பனிப்படலத்தின் வெண்நுரையில்
உனக்கு பிதுரார்ஜிதமாகக் கிடைத்த
இடிகள் முழங்கும்போது,
உனது தென்திசைக் காற்று
பனிமலை சரிவதுபோல உறுமி
ஆகாயத்தை எழுப்ப உயரும்போது,
உனது ஆண்டியன் சதுப்பிலிருந்து
ஒரு கணம் விடுபட்ட சொல்லை
என்ன மொழியில் உச்சரிப்பாய் நீ?

குளிரின் மின்னலைக் கைப்பற்றியதும்,
கைவிட்டதும்,
மலைச்சிகரங்களில் அதைக் கட்டியிட்டதும்,
உறைந்த கண்ணீருக்கிடையில்
அதைக் கைக்கொண்டதும் யார்?
மெல்லிய வாள்களின்மேல் அது சுழல்கிறது
அதன் பதமான சூலகங்களில் தாக்கப்படுகிறது
போர் வீரனின் படுக்கையறைக்கு இட்டுச்செல்லப்படுகிறது
அவனது
பாறைபோல இறுகிய முடிவுகளுடன் வேட்டையாடப்படுகிறது.

உனது மின்னல் வெட்டுக்கள்
கிசுகிசுப்பதென்ன?
உனது ரகசியக்ககலமான மின்னல் வீச்சு
சொற்கள் நிரம்பிப் பயணம் செய்திருந்ததா?
மிஞ்சியிருக்கும் உனது நுட்பமான நீரில்
அரைபடும் உறைந்த சொற்களாக,
கறுத்த மொழிகளாக, பொன்னிழைத் தோரணங்களாக,
அடியாழமில்லாத உதடுகளாக,
ஒடுக்கப்பட்ட அலறல்களாக
அலைவது யார்?

தொலைதூர பூமியிலிருந்து நம்மைக் காணவரும்
பூக்களின் இமைகளை வெட்டியெறிவது யார்?
நிலக்கரியின் பரப்பில் அவர்கள் சிதைந்து மடிய
அருவியாகத் துள்ளும் உனது கைகளிலிருந்து
இறந்த விதைகளைத் தட்டிச் சிதறச் செய்வது யார்?

இந்தச் சங்கிலிகளின் கிளைகளைத்
தொங்கவிட்டது யார்?
நமது விரகத்தை மீண்டும் புதைத்தது யார்?


அன்பே, அன்பே,
விளிம்புகளுக்கு அருகில் வராதே!
புதையுண்ட தலையை வழிபடாதே!
தீர்மானங்களை முறிக்கும் தனது உறைவிடத்திலிருந்து
எல்லா செயல்களையும் காலம் தீர்க்கட்டும்.
இங்கே
மலைச்சரிவுகளுக்கும் பெருக்கெடுத்தோடும் நீருக்குமிடையில்
இந்தக் கணவாய்களுக்கு மத்தியில்,
ஒளி ஊடுருவும் படிமமாக வீசும் காற்றை
உயர்ந்த மலைகளைக் குடைந்தோடும் நீரோடையை
கசப்பு வாழ்த்துக்கள்கொண்ட பனித்துளியை
உள்வாங்கி
ஒவ்வொரு மலராக
அடர்ந்த வனத்தினூடே
படர்ந்திருக்கும் சாத்தானியக் கொடியை
மிதித்து விலக்கி மேலே ஏறி வா!

கல்லும் கானகமும்
பச்சைநிற நட்சத்திரத் துகள்கள்
தெளிந்த ஆகாயம்...
உயிருள்ள தடாகம்போலவோ
மௌனத்தின் புதிய தளம்போலவோ
மாண்டூர் பள்ளத்தாக்கு பிளந்து திறக்கிறது.

எனது வாழ்க்கைக்கு வா,
எனது விடியலுக்கு வா,
எனது தனிமையின் உச்சங்கலுக்கு வா.

வீழ்ந்த பேரரசு
இப்போதும் பிழைத்திருக்கிறது.
இந்தக் கற்தளத்தின் மேல்
சூறையாடப்போகும் கொள்ளைக்கப்பல்போல
கழுகின் நிழல் விரைகிறது.

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)




நன்றி : சுகுமாரன்

0 comments:

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP