பாப்லோ நெரூதா கவிதைகள் - 5 - சுகுமாரன்

>> Monday, June 28, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


ஐந்து
@

அந்த அறையிலிருந்த ஏழை
உள்ளீடற்ற சருமத்துக்கடியிலும்
அவசரமாக விழுங்கிய உணவுகளுக்கிடையிலும்
ஏற்றுக்கொண்டிருந்தது,
கடின இதயமுள்ள மரணமே,
இரும்புச் சிறகுள்ள பறவையே,
உன்னையல்ல.
ஒரு பழங்கயிற்றின் சுருண்ட இழையை
துணிவுடன் முன்வராத ஓர் அணுவை
ஒருபோதும் வியர்வையாக மாறாத ஒரு பனித்துளியை.
ஒருபோதும் அது மறுபடிப் பிறக்கவில்லை
இரங்கற்பாடல் பெறாத மரணத்தின் துகள், வெறும் எலும்பு,
உள்ளுக்குள்ளேயே நொறுங்கிப்போன ஒரு தேவாலயமணி.

அயோடின் நாறும் இந்தக் கட்டுகளை அவிழ்த்து
மரணத்தை மென்மையாக்கிய நோவுகளுக்குள்
என் கைகளை நுழைத்தேன்.
ஆன்மாவின் இடைவெளிகளைச் சில்லிடச்செய்யும்படி வீசும்
காற்றைத்தவிர
வேறு எதையும் அந்தக் காயத்தில் நான் சந்திக்கவில்லை.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 4 - சுகுமாரன்

>> Monday, June 21, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


நான்கு
@

தவிர்க்க முடியாத மரணம் என்னை அழைத்திருக்கிறது பலமுறை:
அலைகளில் கரைந்திருக்கும் உப்பைப்போன்றது அது.
அதன் அரூப வாசனை,
சிதிலங்களையும் உயரங்களையும்
அல்லது
காற்றின் பரந்த வடிவங்களையும் பனிப்பொழிவையும் உணர்த்தியது.


கத்தியின் விளிம்பை
காற்றின் இடுங்கிய வழியை
வயலும் கல்லுமான சவப்போர்வையை
இறுதிப்படிகளின் நட்சத்திரவெறுமையை
அச்சந்தரும் சுழல்வழியை
வந்தடைந்தேன் நான்.
எனினும்
மரணத்தின் பெருங்கடலே,
அலையலையாக அல்ல...
அந்திவெளிச்சத்தின் பாய்ச்சலாக
இருளின் முழுமையானகணக்காக
எங்களை வந்தடைகிறாய்.

எங்கள் பைகளைத்துளாவ ஒருபோதும் நீ வந்ததில்லை,
சிவந்த ஆடையில்லாமலோ,
மௌனத்தில் பொதிந்த கம்பளத்தை ரகசியமாக்காமலோ
இங்கே புதைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட
கண்ணீரின் மரபு இல்லாமலோ
எங்களை ஒருபோதும் நீ சந்திததில்லை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
தனது மிஞ்சிய இலையுதிர்காலங்களை முதுகில்சுமந்து நிற்கும்
ஒரு மரத்தை (ஆயிரக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
இலைகள்) என்னால் நேசிக்கமுடியாது.
மண்ணில்லாத இந்தப் போலிமரணங்களை,
ஆழமில்லாத புத்துயிர்ப்புகளை
என்னால் நேசிக்கமுடியாது.
மிகச் செழிப்பான வாழ்நிலங்களில்
பரந்த கழிமுகங்களில் நீந்த விரும்பினேன்.

தனது காயம்பட்ட வாழ்வை
எனது உயிர்ப்புள்ள விரல்களால் தொடமுடியாமல்
தனது வாசல்களையும் வழிகளையும் அடைத்து
மனிதன் என்னை நிராகரித்துக்கொண்டிருந்தபோது,
வேறு வழிகளில்
தெருக்களினூடே
நதியிலிருந்து நதிக்கு
நகரத்திலிருந்து நகரத்துக்கு
ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு வந்தேன் நான்.
கானகத்தினூடே
என் உப்புச்சாயலை இழுத்துக்கொண்டு
கடைசிக் குடிசைகளுக்கு வந்தேன்.
வெளிச்சமும் நெருப்புமில்லாமல்
உணவில்லாமல்,
கல்லும் மௌனமுமில்லாமல்
எனது சொந்த மரணத்தை இறந்தபடி
தனியே நடந்தேன் கடைசியில்.
@

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 3 - சுகுமாரன்

>> Monday, June 14, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்


மூன்று
@

நிரப்ப முடியாத களஞ்சியத்துக்குள் விழும்
சோள மணிகள்போல
கடந்துபோன செயல்களுக்குள்ளும்
அலுப்பூட்டும் நிகழ்வுகளுக்குள்ளும்
ஒன்பது முதல் ஐந்துமணிவரை விழும் மனித வாழ்வு.
ஒவ்வொருவர்க்கும் மரணம் ஒருமுறையல்ல, பலமுறை.
ஒவ்வொரு நாளும் ஒரு மரணம்.
புழுதி, புழு, நகரவிளிம்புகளின் சகதியில் அலையும் வெளிச்சம்.
பருமனான சிறகுகளுடன் ஒரு குறுகிய மரணம்
ஒரு குறுவாள்போல
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நுழைகிறது.

மேய்ப்பர்கள்மீதும்
துறைமுக மைந்தர்கள்மீதும்
கறுத்த ஏர் ஓட்டிகள்மீதும்
இடுங்கிய தெருக்களில் எலிகளாக அலைபவர்கள்மீதும்
ரொட்டியாலும் கத்திகளாலும் ஆக்கிரமிக்கிறது.

எல்லோரும் அவரவரது
சுருக்கமான அன்றாடச் சாவுக்காகக் காத்திருந்து
வலுவிழந்துபோனார்கள்.
ஒவ்வொரு நாளும்
அவர்களது சகிக்கமுடியாத் துயரம்
நடுங்கும் கைகளால் அவர்கள் காலிசெய்த
கறுப்புக்குவளை போலிருந்தது.


- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - 2 - சுகுமாரன்

>> Monday, June 7, 2010

மாச்சுபிச்சுவின் சிகரங்கள்
*******************************
இரண்டு
மலர் மலருக்காகத்
தனது விதைகளைப் பரப்புகிறது.
பாறை, தனது மலர்ச்சியை
வைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.
எனினும், மனிதன்
கடலின் நிச்சயிக்கப்படாத ஆழத்திலிருந்து
தானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்
கசக்கியெறிகிறான்.
தனது கைகளில் துடிக்கும்
உலோகத்தைத் துளையிடுகிறான்.
துணிகளுக்கும் புகைப்படலத்துக்குமிடையில்
சீக்கிரமே அகப்பட்டு
கசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து
மூழ்கிப்போன தரைமீது கிடக்கிறான்.
படிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,
குளிர்ந்த தடாகங்களாக ஆகிறான்.
எனினும் இது போதவில்லை:
கொல்கிறான், அதை
வெறுப்புடன் தாளில் ஒப்புக்கொள்கிறான்,
பழக்கத்தின் போர்வையில் மூடிமறைக்கிறான்,
துவேஷமுள்ளாடையால் அதைக்
கிழித்துத் துண்டாடுகிறான்.

இல்லை:
தாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்
சிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்
அவனது இரத்தநாளங்களைக்
காப்பாற்றுவது யார்?
உயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து
சீற்றம் இப்போது
இரத்தமாகப் பீறிடும்போது,
பிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்
பனித்துளி
நூற்றாண்டுகளாக மறையாதிருக்கும்
தனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.
இதயமே,
இலையுதிர்காலத்தின் பள்ளங்களுக்கிடையில்
நசுங்கிச் சிறிதான முகமே!


எத்தனைமுறை
குளிர்கால நகரத்தெருக்களில்
அல்லது பேருந்தில்
அந்தியில் ஒரு படகில்
அல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய
விழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி
மனித மகிழ்வின் உறைவிடத்தில்
தங்கியிருக்க விரும்பினேன்.
முன்பு,
ஒரு கல்லிலிருந்தோ
அல்லது
ஒரு முத்தத்தின் மின்வெட்டிலிருந்தோ
நான் தொட்டுணர்ந்த
நித்தியமானதும் அளந்தறிய முடியாததுமான
உண்மையின் இழையைத் தேடினேன்.

(அது
சிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல
முடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்
என்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.
என்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.
என்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.
தனித்திருக்கும் பனிப்படலம்முதல்
இந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)

திருஷ்டிப்பொம்மையின் உடைகள்போன்ற முகக்குவியல்களையும்
அல்லது
உள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்
திகைப்படைந்து நின்ற இனங்களின்
பட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்
என்னால் வசப்படுத்த முடிந்தது.

எனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.
தடுக்கப்பட்ட நீர்போலப் பாயவோ
நிலக்கரிபோல வெம்மையாகவோ
ஸ்படிகம்போல குளிர்ச்சியாகவோ
எனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.

என்னவாக இருந்தான் மனிதன்?
அவனது உரத்த உரையாடலின் அடுக்குகளில் எங்கே
கடைகளுக்கும் சங்கொலிக்குமிடையில்
அவனது உலோக அசைவுகளில் எதில்
அழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு?

- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)


நன்றி : சுகுமாரன்

Read more...

பாப்லோ நெரூதா கவிதைகள் - சுகுமாரன்

>> Wednesday, May 26, 2010

மாச்சு பிச்சுவின் சிகரங்கள் - ஒரு முன் குறிப்பு
- சுகுமாரன்

நெரூதாவின் 'கான்டோ ஜெனரல்' (Canto General - பொதுக் காண்டம்) தொகுப்பில் இடம்பெறும் நீள் கவிதையான 'மாச்சு பிச்சுவின் சிகரங்களின் மையம் - வரலாறு. புதையுண்டுபோன ஒரு நகரத்தின் இறந்த காலத்தை நிகழ்கால அனுபவமாக மீட்டுருவாக்கம் செய்கிறார் நெரூதா.

இன்கா இனத்தவரின் அழிந்துபோன நகரம் மாச்சு பிச்சு. ஆண்டீஸ் மலைத்தொடரில் உருபம்பா ஆற்றங்கரையில் மாச்சு பிச்சு, ஹ¤வாய்னா பிச்சு ஆகிய இரட்டை மலைகளுக்கிடையில் உருவான புராதன நகரம். கலைத் தேர்ச்சியுடனும் நீர்நிலைகளும் வழிபாட்டுத் தலங்களும் சதுக்கங்களும் வீடுகளும் வாயில்களும் படித்துறைகளுமாக நுட்பமான தொழில் திறனுடன் நகரம் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாறு சான்றளிக்கிறது.
  
காலத்தின் மறதிக்குள் புதையுண்டிருந்த இந்த மலைநகரமும் கோட்டை கொத்தளங்களும் 1910 ஆம் ஆண்டு அகழ்வாராய்ச்சியில் மீட்டெடுக்கப்பட்டது. காற்றின் உராய்வுக்கும் நீரின் அரிப்புக்கும் ஈடு கொடுத்து நின்ற நகரம், தொன்மைச் சின்னமாக இன்று பராமரிக்கப்பட்டு
வருகிறது. 1943 இல் நெரூதா இந்த நகரத்தைச் சென்று பார்வையிட்டார். மனித வாழ்வின் ஊற்றைத் தேடிய புனிதப் பயணம் என்று தனது அனுபவத்தைக் குறிப்பிடவும் செய்தார்.

ஸ்பானிய ஆக்கிரமிப்பால் இன்கா நாகரிகமும் மாச்சு பிச்சு நகரமும் அழிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. எனினும் அங்கு வாழ்ந்த மக்களினத்தின் மறைவு ஒரு புதிர். இந்தப் புதிரின் உண்மையை அறிய ஒரு கவிதைமனம் மேற்கொள்ளும் சாகசமான பன்முகப் பயணம் -'மாச்சு பிச்சுவின் சிகரங்கள்'.

மாச்சு பிச்சுவின் சிகரங்கள்
---------------------------------
ஒன்று

காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல
குளிர்காலத்தின் உச்சத்தில்
நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது
கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று
நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்
வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்
இசைவான சூழ்நிலையில்
தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.

(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;
மௌனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு
கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்
காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)

வயலின்களுக்கு இடையில் எனக்காக காத்திருந்த எவரோ,
இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்
புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.
வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய
விசையுள்ள வாளைப்போல
பூமியின் பொன் நாளங்களுக்குள்
அதன் மர்ம உறுப்புகளுக்குள்
எனது மென்மையான கையை நுழைத்தேன்.

ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து
கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.
ஒரு குருடனைப்போல
நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்
மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.

-  பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)

நன்றி :  சுகுமாரன்

Read more...

இயற்கையும் மனிதனும்

>> Monday, May 24, 2010

இயற்கையும் மனிதனும்

-  பாவண்ணன்

கனவுகள் - தமிழாக்கப் பாடல்கள்
மொழியாக்கம் - தங்கப்பா
வானகப் பதிப்பகம்

எல்லா மொழிகளிலும் உள்ள பெரிய படைப்பாளிகள் அனைவரும் தம் படைப்பு முயற்சிகளோடு கூடவே தமக்குப் பிடித்த படைப்புகளைப் பிறமொழிகளிலிருந்து மொழிபெயர்ப்பதில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். தமிழில் பாரதியார் முதல் புதுமைப்பித்தன் வரை இத்தகு முயற்சிகளில் ஈடுபட்டவர்களே. நாற்பதாண்டுகளுக்கும் மேலாகத் தம் வாழ்வனுபவத்தைக் கலையுணர்வோடு மரபுக்கவிதை வடிவில் முன்வைத்துவரும் ம.இலெ.தங்கப்பா தம் இளமைக்காலம் முதல் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த கவிதைகள் 'கனவுகள் ' என்கிற பெயரில் வெளியாகியுள்ளன.


இத்தொகுப்பில் 60 கவிதைகள் உள்ளன. வோர்ட்ஸ்வொர்த், தாமஸ் ஹார்டி, தாமஸ் க்ரே, ஷெல்லி, டென்னிசன், ஆலிவர் கோல்ட்ஸ்மித், கீட்ஸ் ஆகிய ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளும் சில ஆப்பிரிக்கக் கவிதைகளும் ரசூல் கம்சுதேவின் ரஷ்யமொழிக் கவிதைகளும் தாகூரின் கவிதைகளும் இவற்றில் அடங்கும். சுவையும் பொருளும் குன்றாத வகையில் மிக அழகிய தமிழல் இக்கவிதைகளைத் தமிழாக்கியுள்ளார் தங்கப்பா. இவை அனைத்தையும் இனிய மரபுக்கவிதை வடிவில் செய்திருப்பது மேலுமொரு சிறப்பாகும். மொழிபெயர்ப்பு என்னும் குறிப்பு இல்லாவிடில் இக்கவிதைகள் அனைத்தும் தமிழிலேயே புனையப்பட்டவை என்று சொல்வதில் யாருக்கும் தடையிருக்காது. தங்கப்பாவின் சொல் தேர்வும் பொருத்தமாக அவற்றைக் கையாளும் விதமும் கவிதைகளுக்கு அழகைச் சேர்க்கின்றன. எளிமையும் தெளிவும் அழகும் இவரது சொந்தக் கவிதைகளுக்கு எப்போதும் பெரும் வலிமையாக இருப்பவை. மொழிபெயர்ப்புகளுக்கும் இவையே வலிமையாகத் திகழ்கின்றன.


மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிஞர்கள் அனைவரும் நவீன யுகத்துக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவர்கள். அழகின் வழியே இயற்கையையும் இயற்கையின் வழியே இறைவனையும் தரிசிக்கும் ஆசையும் ஆற்றலும் மிகுந்தவர்கள் அவர்கள். அழகான ஒரு மலரைப் பாடினாலும் தும்பியைப் பாடினாலும் இயற்கையின் தரிசனத்தை மானுடர்க்கு நுட்பமாகச் சுட்டிக்காட்டும் புள்ளிகளாக அவற்றை மாற்றிவிடும் வலிமை மிகுந்தவர்கள் . அக்கவிதைகளின் மூல வடிவத்தில் படிந்திருந்த அதே பரவசத்தோடும் துடிப்போடும் எழுச்சியோடும் தமிழிலும் முன்வைத்திருக்கும் தங்கப்பாவின் சொல்லாட்சித் திறமை பாராட்டுக்குரிய ஒன்றாகும்.


இம்மொழிபெயர்ப்புத் தொகுதியில் இடம்பெற்றுள்ள தாமஸ் ஹார்டியின் 'வாலாட்டிக்குருவியும் குழந்தையும் ' என்ற கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மொத்தத் தொகுப்பின் தொனிப்பொருளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கவிதையாக இதைக்கொள்வதில் தவறில்லை. மிக எளிய சித்தரிப்புத்தன்மையை உடைய இக்கவிதை முடியும் போது உருவாகும் மனஅலைகள் எளிதில் அடங்குவதில்லை. கவிதையில் ஒரு வாய்க்கால் இடம்பெறுகிறது. ஒருபுறம் ஒரு குழந்தை வேடிக்கை பார்க்கிறது. மறுபுறம் வாலாட்டிக்குருவியொன்று உட்கார்ந்திருக்கிறது. முதலில் அந்த வாய்க்கால் வழியாக ஒரு முரட்டுக்காளை செல்கிறது. காட்சியில் எந்தவிதமான சலனமும் இல்லை. இரண்டாவதாக அவ்வாய்க்கால் வழியாக ஒரு குதிரை செல்கிறது. அப்போதும் காட்சியில் எவ்விதமான சலனமும் இல்லை. மூன்றாவதாக நாயொன்று வருகிறது. அப்போதும் அக்காட்சியில் எவ்விதமான மாற்றமும் நேர்வதில்லை. இறுதியாக ஒரு மனிதன் வருகிறான். சட்டென காட்சியில் சலனமெழுகிறது. பயத்துடனும் பதற்றத்துடனும் குருவி பறந்து விடுகிறது. இவ்வளவுதான் விவரணை. இவ்விவரங்கள் வழியாக உருவாகும் மனச்சித்திரத்தில் கவிதை உன்னதம் எய்துகிறது. விலங்குகள் இயற்கையோடும் காற்றோடும் சேற்றோடும் பயிர்பச்சைகளோடும் மாறாத உறவுகொண்டு நடமாடுகின்றன. ஒன்றின் வரவை மற்றொன்று அறிந்தாலும் அச்சம் கொள்வதில்லை. அவற்றிடையே இயங்கும் சமன்பாட்டில் எந்தவிதமான குழப்பமும் இல்லை. குழந்தையைக்கூட அவை மனத்தளவில் எவ்விதமான வேறுபாடும் பாராட்டாமல் ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் அவை ஏற்கத்தயங்கி அஞ்சி ஒதுங்குவது மனிதர்களை மட்டுமே.


இயற்கையின் படைப்பில் மனிதர்களும் விலங்குகளும் குழந்தைகளே. ஆனால் ஒரு குழந்தையைக் கண்டு மற்றொரு குழந்தை ஏன் அஞ்சவேண்டும் ? அதுதான் நம் துயரங்கள் அனைத்துக்குமான காரணப்புள்ளி. மனிதன் தன்னைச்சுற்றியுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மேலானவனாகவும் வலிமையானவனாகவும் தன்னை நினைத்துக் கொள்கிறான். அன்போடும் அனுசரணையோடும் அணுகவேண்டிய இயற்கையை வென்றெடுக்க வேண்டிய ஒரு கோட்டையாக எண்ணி விடுகிறான். வெற்றிக்கொடி நாட்டி எல்லாவற்றையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவர எண்ணுகிறான். அரவணைத்தல் அல்ல, அடிமைப்படுத்துவதே அவன் இயல்பாகிறது. முதலில் இயற்கையை நுகர்கிறவனாக இருக்கிற மனிதன், ஆசையின் காரணமாக அதை அடிமைப்படுத்துகிறான். பின்னர் பேராசையின் காரணமாக அதை நாசப்படுத்திச் சிதைக்கிறான். உச்சியில் தன் வெற்றிக்கொடி பட்டொளிவிசிப் பறக்கவேண்டும் என்கிற வெறியில் காலடி மணணையும் சிதைத்துப் பள்ளமாக்குகிறான். தன் தாயின் இதயத்தையே அறுத்து எடுக்கிற வெறிகொண்ட பிள்ளையைப்போல இயற்கையைக் குலைக்கவும் தயங்காதவனாகிறான். தாயின் இதயகீதத்தைக் கேட்க அவனுக்குக் காதுகளில்லை. அவள் கண்களில் ஒளிரும் தரிசனக்காட்சியைக் காணக் கண்களுமில்லை. மாறாக, எல்லாமே வெற்றிகொள்ளத்தக்க கோட்டைகளாகவே தென்படுகின்றன. தன் மீட்சிக்கான பாதை மிக அருகிலேயே இருந்தும் அதைக் காணவியலாத மனிதன் தன் அழிவுப்பாதையைத் தானே தேடிக்கொள்கிறான் என்பதே இயற்கையுகக் கவிஞர்கள் அனைவருடைய ஒட்டுமொத்தச் செய்தி. தங்கப்பாவின் சொந்தக் கவிதைகளின் உள்ளடக்கத்தைப்போலவே அவர் தேர்ந்தெடுத்திருக்கும் மொழிபெயர்ப்புக் கவிதைகளும் அமைந்திருப்பதைச் சிறப்பான ஒற்றுமையாகச் சொல்லவேண்டும்.


இத்தொகுப்பின் முக்கியமான இன்னொரு பகுதி தாகூரின் கதையொன்றை அடிப்படையாகக்கொண்டு தங்கப்பா யாத்துள்ள 'வெற்றிஓசை ' என்கிற கவிதைநாடகப் பிரதியாகும். அங்கதச் சுவை மிகுந்த இந்த நாடகம் அரசு எந்திரத்தின் அபத்தமான திட்டமுறைகளைக் கிண்டல்களுடன் முன்வைக்கிறது. கிளிக்கும் பாடக் கற்றுக்கொடுக்கும் முயற்சி படிக்கக் கற்பிக்கும் முயற்சியாக மாறுவதும் பிறகு நுால்களைக் கரைத்துக் குடிப்பாட்டும் முயற்சியாக மாறுவதும் நகைச்சுவை ததும்ப எழுதப்பட்டுள்ளன. இறுதியில் தொண்டை அடைத்த கிளியைக் காட்டி அறிவின் ஆழ்ந்த அமைதிநிலை என்று அதிகாரிகள் உரைத்து முழக்கமிடும் போது கிண்டல் உச்சம் பெறுகிறது. நுண்ணுணர்வில்லாத ஆட்சியில் நடைபெறும் அபத்தக் கோலங்களை உணரும் விதத்தில் ஒவ்வொரு வரியும் அமைந்திருக்கிறது.

நன்றி :  திண்ணை

Read more...

வெள்ளிநிலவு

>> Monday, May 17, 2010

வெள்ளிநிலவு

சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை
வெள்ளிக் காலெடுத்து நிலவும்
இரவைக் கடக்கிறாள்

அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்
அடவெள்ளி மரங்களில் விளைந்தன வெள்ளிக்கனிகள்

கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து
ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்
வேய்ந்து போனாள்

காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்
அசைவற்ற உறக்கத்தில் நீளும்
வெள்ளிக் கால்கள்

இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்
வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்
வெள்ளை புறாக்கள்

வயலில் திரியும் குட்டி எலிக்கும்
இருட்டில் மிளிரும்
வெள்ளிக் காலும் கண்ணும்

நிலவில் குளித்த
வெள்ளி ஓடையில் மின்னும்
வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்

தமிழில் :  பூங்குழலி

Silver by Walter de la Mare

Slowly, silently, now the moon
Walks the night in her silver shoon;
This way, and that, she peers, and sees
Silver fruit upon silver trees;
One by one the casements catch
Her beams beneath the silvery thatch;
Couched in his kennel, like a log,
With paws of silver sleeps the dog;
From their shadowy cote the white breasts peep
Of doves in silver feathered sleep
A harvest mouse goes scampering by,
With silver claws, and silver eye;
And moveless fish in the water gleam,
By silver reeds in a silver stream

Read more...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP