நானூறு புறத்திலிருந்து 'நான்கள்' - நாகார்ஜுனன்

>> Monday, August 10, 2009

மேற்குலகத்தின் இருத்தலியம், மார்க்சியம், குறியியல் போன்ற சிந்தனை முறைகள் மற்றும் பல கோட்பாட்டுக் கட்டுரைகளின் தமிழாக்கங்கள் எண்பதுகளில் வெளியாகத் தொடங்கின. அப்போது அமைப்பியல், பிறகான-அமைப்பியல் மற்றும் பிறகான-நவீனத்துவம் சார்ந்த கோட்பாட்டுக்கட்டுரைகளும் அறிமுகங்களையும் தமிழில் கொண்டுவந்தவர்களில் ஒருவர் நாகார்ஜுனன் என்கிற ரமேஷ். தவிர, அவற்றின் தர்க்கங்களை தமிழ்ப்படைப்புகளோடு ஒட்டி உரையாடல்களையும் நடத்தியிருக்கிறார். அதிகார உறவுநிலைகள் குறித்த ஆய்வுகளைச் செய்த பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷெல் பூக்கோவின் கட்டுரைகள் மற்றும் நேர்காணல்களை இவர் தமிழாக்கி வெளியிட்டிருக்கிறார். Discourse என பூக்கோ அறிமுகப்படுத்திய ஒரு சொல்லாட்சியை தமிழில் 'சொல்லாடல்' என்பதாக இவர் செய்த மொழியாக்கம், இன்று சாதாரணச் சொல்வழக்கிலும் பயன்படும் ஒன்றாக மாறியுள்ளது. இவரைக் கேட்டால், தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் ஏற்கனவே இந்தச் சொல்லைப் பயன்படுத்தியதாகக் கூறுகிறார்!

தவிர, பிரெஞ்சு மொழி கற்று அதிலிருந்து நேரடியாக தமிழாக்கம் செய்து இவர் பதிவுகளில் வெளியிட்ட, பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சார்ந்த
ஆர்தர் ரைம்போவின் கவிதைகள் தமிழில் புதிய கவிதைநடையுடன், கவிதைக்கான இசைத்தன்மையுடன் கூடிய சங்கப்பாடல்களின் சொல்லாட்சிகளைக் கொண்ட ஓர் அசலான தமிழ் வடிவத்தில் இயங்குகின்றன. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆங்கிலக்கவிஞர் சில்வியா பிளாத்தின் கவிதைகளையும்தான். தற்கொலை செய்துகொண்ட இந்தக்கவிஞரின் 36 கவிதைகளை இவ்வாண்டு தொடங்கி சுமார் நான்கு மாத காலத்தில் தமிழாக்கியிருக்கிறார். இலங்கைத்தீவில் போர் உச்சக்கட்டத்துக்கு வந்து ஈழத்தில் நடந்த பெரும் படுகொலைகள், அழிவுகள் பற்றிய செய்திகள் வரவர அவற்றுக்கு முகம் கொடுக்கும் ஆய்வுகளை ஒருபுறம் செய்துகொண்டே, சில்வியா ப்ளாத்தின் கவிதைகளையும் தமிழாக்கியதாக கூறும் இவர், அப்போது வெவ்வேறான, சிக்கல்மிக்க, பேதலித்த, பித்த உணர்வுகளை அடைந்தேன் என்கிறார். இவற்றுக்கும் கூட சங்கப்பாடல் போன்ற அமைப்பை நாடியிருக்கிறார்.

பிறகு post-marxist and post-politics கோட்பாட்டாளரான ஜோர்ஜியோ அகம்பென் மற்றும் அமைப்பியல்- மானுடவியலை உருவாக்கிய கிளோத் லெவி-ஸ்டராஸ், நவீனக் கோட்பாட்டாளர்கள் புரூனோ லத்தூர் மற்றும் மிஷெல் செர் போன்றவர்களின் கோட்பாட்டுக் கட்டுரைகளையும் தொடர்ந்து தமிழாக்கி, தற்காலத்திய சிந்தனைகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். தவிர, இந்தச்சிந்தனைகளை முன்வைத்து புதிய கட்டுரைகளையும் அவ்வப்போது எழுதுகிறார். சில வேளை, ஸ்பானிஷ் மற்றும் இத்தாலிய மொழிகளிலிருந்து நேரடித் தமிழாக்கங்களை முயன்றும் வருகிறார். தமிழில் தாம் விரும்பும் ஆக்கங்களை ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளில் செய்ய முயலப்போவதாகவும் கூறுகிறார். இது தமிழுக்கு இவர் செய்யும் பெரும் பங்களிப்பாக அமையும்.

நாகார்ஜுனன், இளமைப்பருவத்தில் பொறியியல் படித்து அணுசக்தித்துறை தொடர்பான நிறுவனத்தில் பணியாற்றியவர். இந்திய அணுசக்தித்திட்டத்தில் பொதிந்திருந்த அணுஆயுதத் தயாரிப்பு தன் மனசாட்சிக்கு விரோதம் என்பதால் அந்தப் பணியைத் துறந்து பிறகு, பத்திரிகைத்துறையில் ஈடுபட்டவர். 

Deccan Herald, UNI செய்தி நிறுவனங்களில், பத்திரிகைகளில் பெங்களூர், சென்னை, டில்லி ஆகிய இடங்களில் பணியாற்றிவிட்டு பத்தாண்டுகள் முன்பு லண்டன் சென்று BBC வானொலி உலக சேவையில் ஆறாண்டுகள் பணியாற்றிவிட்டு தற்சமயம் Amnesty International - சர்வதேச மனித உரிமைகள் ஸ்தாபனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய துணைவியார், காலனியக்கால இந்தியாவில் விஞஞானத்தின் வரலாறு குறித்து ஆய்வு செய்பவர். மகள் இளநிலை அறிவியல் மாணவி. இவர்களுடன் லண்டன் நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் நாகார்ஜுனன் வேகமாக மலையாள மொழியும் பயின்றுவிட்டார். பத்தாண்டுகள் தமிழில் எழுதாமலிருந்த இடைவெளியில் இப்படிப் பல மொழிகளைப் பயிலும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். பிறகு கடந்த ஒன்ற்ரை ஆண்டுகளாக தமக்கான வலைத்தளம் தொடங்கி அதில் நிறையத் தமிழாக்கங்களைப் பதிந்து வரும் நாகார்ஜுனன் அண்மையில் ஐம்பது வயதைக் கடந்திருக்கிறார்.


படிகள், மீட்சி உள்ளிட்ட தமிழில் வெளிவந்த முக்கிய ஆய்வுப் பத்திரிக்கைகளில் இணைந்து செயல்பட்டவர். வித்யாசம் என்கிற பத்திரிக்கையை ஆசிரியர் குழுவில் இருந்து நடத்தியவர். அந்தக்காலகட்டத்தில் தமிழில் புதிய கதைசொல்லும் உத்தியை உருவாக்கும் நோக்கில் கர்நாடக முரசும் தமிழ் இலக்கியம் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற தலைப்பில் நான்-லீனியர் வகை சிறுகதைகளை தொகுத்து வெளியிட்டுள்ளார்.

இவருடைய கட்டுரைகளின் தொகுப்பு கலாச்சாரம் அ-கலாச்சாரம் எதிர்-கலாச்சாரம், திரைப்பட மேதை செர்கய் ஐஸன்ஸ்டைன், திணை இசை சமிக்ஞை - நளிர் - ஆகியவையும் ஊழிக்குப்பின் - ஆர்தர் ரைம்போ கவிதைகள் என பிரெஞ்சிலிருந்து நேரடியாக தமிழாக்கமான கவிதை நூலும் ஆகும்.

நவீன கோட்பாடுகளின் இணைய தள இதழான C-Theory-யில் இந்தியாவின் அணுவெடிப்பு சோதனைகள் பற்றி இவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரை India's Nuclear Blasts - Siddharta's Betrayal - Ramesh Gopalakrishnan. பத்தாண்டுகள் முன்பு வெளியானது இந்தக்கட்டுரை. இந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த சிந்தனையாளர் மறைந்த ழான் போத்ரியார் மற்றும் பேராசிரியர் ஆர்தர் குரோக்கர் இருவரும் வாசித்து அலசிய பிறகே அவர்கள் வெளியிட்டதாக நாகார்ஜுனன் கூறுகிறார்.

இவருடைய வலைத்தளம் - திணை இசை சமிக்ஞை

தமிழை அடுத்ததளத்துக்குக் கொண்டுசெல்லும் முனைப்புள்ள இவரிடம் பிரெஞ்சு மொழியிலிருந்தும் ஆங்கிலத்திலிருந்தும் தமிழாக்கங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது தமிழ் மொழிபெயர்ப்புலகில் மகிழ்ச்சியளிக்கக்கூடிய வியஷயமாகும். நாகார்ஜுனனின் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவர் தமிழாக்கிய கவிதை ஒன்றை அவரது பதிவிலிருந்து மீளபதிவாக வெளியிடுவதில் பெருமை அடைகிறது எட்டுத்திக்கும்.
[Doom+of+Exiles.jpg]
Doom of Exiles
Now we, returning from the vaulted domes
Of our colossal sleep, come home to find
A tall metropolis of catacombs
Erected down the gangways of our mind.

Green alleys where we reveled have become
The infernal haunt of demon dangers;
Both seraph song and violins are dumb;
Each clock tick consecrates the death of strangers

Backward we traveled to reclaim the day
Before we fell, like Icarus, undone;
All we find are altars in decay
And profane words scrawled black across the sun.

Still, stubbornly we try to crack the nut
In which the riddle of our race is shut.

புலம் பிரிந்தோர் அழிவிதி - ஸில்வியா ப்ளாத்

ஈண்டு
அதிபேருறக்கம் எமதின்
வணர் கும்மட்டம் பலதினின்றும்
வீடு திரும்பக் காண்போம்,
மனம் எமதின்
குறுவழி பலதினூடே
எழும்பிச் சுருங்கைநிறை
பேருயர் நகரம்.

அன்று
யாம் களியாட்டமிட்ட
பசும் நடைவழி பல,

ஈண்டு
அபாய ராட்சதக்கணங்கள்

நடமாடும் நரகம்.

யூதத்தேவதை, வயலின் பல
இரண்டும் ஊமையாக,

நாள் மீட்கப் பின்செல்வோம்
ஐகாரஸெனக் கழன்று வீழுமுன்.

பாழ்பட்ட பலிபீடம் பல,
ஒளிஞாயிறதன் குறுக்கே
கறுப்பாய்க் கிறுக்கிய
கெட்ட வார்த்தை பல
மாத்திரம்
காணும் யாம்.

இருந்தும்
எம் இனமெனும்
புதிர்க்காய் மூடும்
ஓடுடைக்கப் பிடிவாதமாய்
முயலும் யாம்.

--- Sylvia Plath, The Doom of Exiles, 1954.

குறிப்பு: ஜமாலன் - ஆகஸ்ட் ஒன்பது 2009.

0 comments:

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP