நெஞ்சின் அலைகள் – ஜெயபாரதன்

>> Sunday, August 30, 2009தமிழின் முதல் குறிப்பிடத்தகுந்த அணுசக்தி நூலை எழுதியவரும், இந்தியாவில் முதன்முதலாக இலக்கியத்திற்கான நோபல் பரிசபெற்ற கவிஞரும் படைப்பாளியுமான இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலியைத் தமிழாக்கம் செய்தவருமான ஜெயபாரதன்
தமிழில் விஞ்ஞானம் சார்ந்தும் மொழிபெயர்ப்பு சார்ந்தும் பல பெரும் பணிகளை செய்துவருபவர். மதுரையில் பிறந்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்று நாற்பது ஆண்டுகளுக்கு மேல் இந்தியா மற்றும் கனடாவிலுள்ள அணுமின் சக்தி நிலையங்களில் உயர் பதவிகளில் வகித்தவர்.

அவரின் தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு எழுந்து நீராடிப் பாரதியாரின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ்ப் பற்றும் அவரிடம் பதிந்துவிட்டன.

இவரது வலைதளமான 'நெஞ்சின் அலைகள்' என்பதிலும் திண்ணை வலைப் பதிவிலும் அண்டவெளிப் பயணங்கள் பற்றியும் அணுசக்தி பற்றியும் விஞ்ஞான மேதைகளைப் பற்றியும் முன்னூறிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வாசிக்க கிடைக்கின்றன. அவற்றில் அவசியம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள்.

* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பரிதி குடும்பத்தில் ஒன்றான புளுடோ ஏன் விலக்கப் பட்டது ?
* பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா
* ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
* இந்தியாவின் முதல் விஞ்ஞானத் தமிழ்ப் பெண்மணி
* கணித மேதை ராமானுஜன்
* முதல் விஞ்ஞானி கலிலியோ
* விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர்
* விஞ்ஞானி ஜெயந் நர்லிகர்
* பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலப் பிண்டத்தின் அடிப்படை மர்மமான நியூடிரினோ நுண்ணணுக்கள் !

இதுவரை அவரின் மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. இரண்டு நூல்கள் அச்சில் உள்ளன : விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா

ஜெயபாரதனின் 'அணுசக்தி' நூலில் அணுசக்தியின் ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின் அழிவுத் தன்மையும் தயக்கமின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்களும், எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல் கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றிய விபரங்களும் உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.


'வானியல் விஞ்ஞானிகள்' என்ற அவரது இரண்டாம் நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர், மேலும் சிலரின் விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன.

இவர் பல நாடகங்களையும் சிறுகதைகளையும், கவிதைகளையும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்துள்ளார். அவரது மொழிபெயர்ப்பில் உருவான படைப்புகள் :

1. தாகூரின் கீதாஞ்சலி மற்றும் பிற கவிதைகள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. பாப்லோ நெருடாவின் கவிதைகள்
4. ஷேக்ஸ்பியரின் கவிதைகள், ஜூலியஸ் சீஸர், ஆண்டனி & கிளியோபாத்ரா ஆகிய நாடகங்கள் 5. பெர்னாட்ஷாவின் சீஸர் & கிளியோபாத்ரா, உன்னத மனிதன் ஆகிய நாடகங்கள்
6. காற்றினிலே வரும் கீதங்கள் என மீராபாயின் பாடல்கள்
7. எலிஸ்பெத் பிரௌனிங் கவிதைகள்
8. ஆப்ராஹாம் லிங்கன் பற்றிய வரலாற்று தொடர் நாடகம்
9. 'சாக்ரடிஸின் மரணம்' என்ற மூவங்க நாடகம்
10. சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)
11. நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்)
12. எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்)
13. பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்)
14. உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்)

இவை மட்டுமல்லாமல் "சீதாயணம் (ஓரங்க நாடகம்), முக்கோணத்தில் மூன்று கிளிகள் (குறு நாவல்), முடிவை நோக்கி, ஒரு பனை வளைகிறது, என் விழியில் நீ இருந்தாய், எமனோடு சண்டையிட்ட பால்காரி" ஆகிய சிறுகதைகளையும், பல கவிதைகளையும் இயற்றியுள்ளார்.

சீதாயண நாடகத்தைப் பற்றி ஜெயபாரதன் குறிப்பிடுகையில் :

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது. "

'உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று!' .

"மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்றெழுந்த துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்."
என்று கூறுகிறார்

தாகூரின் கீதாஞ்சலிப் பாக்களுக்கு மூலத்தில் இல்லாத தலைப்புக்களை அவரே அளித்துள்ளார். அம்மொழிபெயர்ப்பு தொகுப்பிலிருந்து ஒரு பாடலை இங்கு மீள்பதிவு செய்கிறோம்.

கீதாஞ்சலி 35
மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன்


விழித்தெழுக என் தேசம்!
———————————
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம்!


- ஜெயபாரதன் (jayabarat@tnt21.com)


*****************************************
Where the mind is without fear and the head is held high;
Where knowledge is free;
Where the world has not been broken up into fragments
by narrow domestic walls;
Where words come out from the depth of truth;
Where tireless striving stretches its arms towards perfection;
Where the clear stream of reason has not lost its way into the
dreary desert sand of dead habit;
Where the mind is led forward by thee into ever-widening
thought and action-
Into that heaven of freedom, my Father, let my country awake.

- Rabindranath Tagore

1 comments:

ரௌத்ரன் September 7, 2009 at 12:35 PM  

அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP