இதயதேவி – வைக்கம் முகம்மது பஷீர்

>> Monday, April 5, 2010

வைக்கம் முகம்மது பஷீர் மலையாளத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவர். 1937 முதல் 1941 வரை இவர் எழுதிய கதைகள் அடங்கிய “விஷப்பு” (பசி) என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள சிறுகதை இது.



நினைவின் ஆழத்தில் புதைந்து போயிருந்த அது, நிலவொளியில் மூழ்கும் தாஜ்மஹாலென தெளிவடைகிறது இப்போது. இந்தக் காதல் கதை துக்கம் நிறைந்ததாய் இருக்கலாம். இல்லையெனில் வேறேதோ, அதன் சூட்சமத்தை பற்றி நான் ஒன்றும் விளக்கப்போவதில்லை.

பிரம்மாண்டமான கட்டிடங்கள் நிறைந்த தெருக்களின் வழியே தாய் தந்தையற்ற அனாதையாய் திரிந்துகொண்டிருந்தேன், அதன் விரிவைக் கண்டு ஆச்சரியப்படும் லட்சோபலட்சம் மனிதர்களை இடித்து உரசியபடி. சத்தங்கள் நிறைந்த, விசாலமான இந்நகரம் என்னை மிகவும் துன்புறுத்தியது. எவ்வளவு முயற்சித்தும் வேலை கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் ஓர் அடைக்கலமில்லை. உடலும் மனதும் ரணப்பட்டிருந்தன. உச்சிவெயிலில் இருந்து தப்பிக்க அருங்காட்சியகத்தினுள் நுழைந்தேன். அங்கிருந்த எதையும் நின்று பார்க்கவில்லை. மரநிழலிலிருந்த இருக்கையில் சென்றமர்ந்தேன். என்னருகில் ஓர் பெண் சிற்பம். வெண்பளிங்கில் செய்யப்பட்டது. உறைந்த நிலா பெண் உரு கொண்டதைப் போன்ற தோற்றம். அங்கங்கலெல்லாம் பூரண வளர்ச்சியடைந்திருந்தன. முந்திரி இலைகளைக் கொண்டு மானம் காத்துக்கொண்டிருந்தது அது.

என் கண்கள் கலையெழுச்சிமிக்க அந்த மௌன அழகில் பதிந்திருந்தன – ஆனால் சிந்தனை துக்கம் நிரம்பியதாய், மேகங்களினிடையே ஓடும் நதியினைப்போல் எங்கெங்கோ பாய்ந்துக்கொண்டிருந்தது. நான் இருப்பது நகரத்தின் இதயத்தில் எனும் நினைவே மறந்துபோனது. அப்போது தான் இடிமுழக்கம் போன்ற சத்தத்துடன் ஹிந்தியில் அந்த கேள்வி:

‘நீ யார்?’

சிவப்பேறிய இரு கண்கள் என்னை உற்றுநோக்கின. செம்மண் அப்பிய உடைகள் அணிந்த பார்ஸி இளைஞன். தூக்கலான வியர்வை நெடி – கூடவே ஏதோ வன மிருகத்தின் மேலிருந்தெழுவதைப் போன்ற கெட்ட வாடையும். அச்சமுற்றவனாய் திகைத்து நின்றுவிட்டேன் நான். இலக்கில்லாத அந்த கண்களில் ஒரு பிரகாசம் தோன்றியது. கோபம் கணன்ற அந்த முகத்தில் ஓர் புன்சிரிப்பு நிழலெனப் படர்ந்தது.

‘ஓ. நீ தானா?’ சிரித்துக்கொண்டே அவன் எனக்கு கைகொடுத்தான். அந்த முகமாற்றத்திற்கான காரணம் என்னவென்று ஆச்சரியப்பட்டேன். அந்த மனிதனை அப்போது தான் முதல்முறையாகக் காண்கிறேன்.

‘நீ அவனோ என்று நினைத்துவிட்டேன்’

‘எவன்?’

‘தெரியாதா?’ ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தான். உலகப்புகழ் பெற்ற அவனைப் பற்றிய எனது அறியாமையை எண்ணி சிரித்தான்.

‘என்னுடைய ஜட்காகாரன்!’

‘ஜட்காகாரன்?’

‘அவன் தான். என்னுடைய இதயதேவியை….’

‘இதயதேவியை?’

அந்த கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. அவன் எல்லாவற்றையும் மறந்துவிட்டான் என்றெனக்குத் தோன்றியது. துக்கம் நிறைந்த அசைவுகளுடன் காதலின் உணர்வெழுச்சியுடன் அச்சிலையருகே சென்றான். ஒரு நாற்பது ஐம்பது கண்கள் அவனை பின் தொடர்ந்தன. சிலது ஏளனப்புன்னைகை தூவியபடி. சிலது உணர்ச்சிகளற்று.

வெண்பளிங்குச் சிற்பம் புன்னகைக்கும் பாவனையுடன் நின்றது.

‘தில்பஹார்!’ உணர்ச்சிப்பொங்க அழைத்தான். வேதனையுடன் அக்கண்கள் உயர்ந்தன.

‘நான் தாமதித்து விட்டேனா?’ தீனமாய் எழுந்தது அந்த குரல்!

நிறைந்தொழுகிய கண்களுடன் அந்த முகத்தை பார்த்துக்கொண்டு அதன் பாதங்களில் விழுந்தான். பதிலேதும் கிடைக்காததால் மீண்டும் எழுந்து சிற்பத்தை கட்டிப்பிடித்தான். அதன் மார்பில் முகம் புதைத்து உடைந்தழுதான்:

‘தேவீ! இன்றாவது என்னோடு பேசு….’

தமிழில் : சித்தார்த்

0 comments:

எதற்காக இந்த வலைப்பதிவு...

“பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்“ என்கிற கனவினை மெய்ப்பிப்பதற்கான மொழிபெயர்ப்புகளுக்கான ஒரு வலைப்பதிவு இது.

மொழிபெயர்ப்புகள் பற்றி..

ஒரு மொழி தன்னை வளமானதாகவும் வனப்பானதாகவும் ஆக்கிக்கொள்ள மற்ற மொழிகளுடன் கொள்ளும் ஒரு உறவே மொழிபெயர்ப்பு.

  © Blogger template Digi-digi by Ourblogtemplates.com 2008

Back to TOP