பாப்லோ நெரூதா கவிதைகள் - 10 - சுகுமாரன்
>> Monday, August 2, 2010
மாச்சுபிச்சுவின் சிகரங்கள்
பத்து
@
கல்லுக்குள் கல், மனிதன், எங்கிருந்தான் அவன்?
காற்றுக்குள் காற்று, மனிதன், எங்கிருந்தான் அவன்?
காலத்துக்குள் காலம், மனிதன், எங்கிருந்தான் அவன்?
நீயும் நிச்சயமின்மையின் நொறுங்கிய துண்டுதானா?
இன்றைய தெருக்கள்வழியே,
பழைய தடங்களில்,
இலையுதிர்காலச் சருகுக்குவியல்களினூடே,
ஆண்மையைக் கல்லறைகளில் மோதிச் சிதறும்
வெற்றுக்கூடான கழுகின் நொறுங்கிய துண்டுதானா நீயும்?
பாவம் கைகள், பாவம் கால்கள், பாவம் அருமையான உயிர்.
விழாக்காலத்தில்
காளைச்சண்டைக்காரர்களின் குத்தீட்டிகள்மேல் பெய்யும் மழைபோல
உன்னில் வந்துவிழும் ஒளியின் நாட்கள்.
அவை தமது இருண்ட உணவை
பசித்த வாயில்
ஒவ்வொரு இதழாகப் புகட்டியதோ?
பஞ்சம், மனிதகுலத்தின் பவளம், பசி, ரகசியத்தாவரம், விறகுவெட்டிகளின் வேர்,
வழுக்குச் சுவர்களுள்ள இந்த கோபுரங்களிலேறி
உனது சங்கிலிப்பாறைகளையும் பஞ்சம் துளைத்ததோ?
நெடுஞ்சாலைகளின் உப்பே,
ஒரு கொல்லக்கரண்டியைக் கேட்கிறேன்.
கட்டிடமே,
கல்லால் ஆன மகரந்தக் கேசரத்தை
ஒரு சிறு சுள்ளியால் குடைய அனுமதி,
காற்றின் பறவைகளனைத்தையும் ஏறிக்கடந்து
வெறுமைக்குள் நுழைய அனுமதி,
மனிதனைத் தீண்டும்வரை உன் குடல்களைச் சுரண்ட அனுமதி.
மாச்சுபிச்சு,
கந்தையான அஸ்திவாரத்தின்மேல்
கல்லின்மேல் கல்லாக எழும்பினாயா நீ?
நிலக்கரிமேல் நிலக்கரி அடர்ந்து அதன் ஆழத்தில் கண்ணீரா?
நெருப்பின்பொன்மகுடம், அதற்குள்ளே
இரத்தத்தின் வீக்கமா?
நீ இங்கே புதைத்த அடிமையை என்னிடம் திரும்பக்கொடு.
இந்த நிலங்களின் ஏழைகளது வறண்டரொட்டியைப் பிடுங்கி வீசு.
அந்த அடிமைக்குடிலின் சன்னலை,
அவன் உடுத்திருந்த கந்தலை எனக்குக் காட்டு.
உயிரோடிருந்தபோது அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு,
தளர்ச்சியால் அவன் உராய்ந்து சுவரில் தோன்றிய
கறுத்த தழும்புபோல வாய்பிளந்திருக்கக்
குறட்டைவிட்டு அவன் உறங்கியதெப்படி என்று சொல்லிக்கொடு.
அந்தச் சுவர், அந்தச் சுவர்.
ஒவ்வொரு கல்லும் தளர்ந்து
அவனது உறக்கத்தின்மேல் அழுத்தியிருக்குமோ?
நிலவுக்குக் கீழே உறங்குவதுபோல அவன் அகப்பட்டிருப்பானோ?
புராதன அமெரிக்கா, கடலின் முகத்திரையணிந்த மணமகளே,
வெளிச்சமும் ஆராதனையும் கலந்த திருமணத் தோரணங்களின் கீழே
முரசுகளிலும் ஈட்டிகளிலும் தெறிக்கும் இடிமுழக்கத்துடன் இணைந்த
உன் விரல்கள்
கானகத்தின் விளிம்பிலிருந்து
கடவுளரின் அசாதாரண பீடங்கள்வரை நீளும்போது
அமிழ்ந்துபோயின.
மனதில் ரோஜாவையும் குளிரின் மயிரிழையையும்கொண்டிருந்த
உன் விரல்கள்,
புது தானியத்தின் இரத்தம்படிந்த நெஞ்சை
ஒளிரும் பொருளாக மாற்றிய உன் விரல்களும்
திட்டமான வெறுமையில் அமிழ்ந்தன.
அவற்றோடு, அவற்றோடு புதைந்துபோன அமெரிக்கா!
உனது குமட்டும்குடலுக்குள்
பருந்துப்பசியை ரகசியமாக வைத்திருந்தாயா?
@
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)
நன்றி : சுகுமாரன்
0 comments:
Post a Comment