பாப்லோ நெரூதா கவிதைகள் - 12 - சுகுமாரன்
>> Monday, August 16, 2010
மச்சுபிச்சுவின் சிகரங்கள்
பன்னிரண்டு
@
என்னுடன் உயிர்தெழுந்து வா, என் சகோதரா.
உனது துயரங்களால் புதைக்கப்பட்ட ஆழத்திலிருந்து
உனது கைகளை நீட்டு.
இறுகிய கல்லறைகளிலிருந்து நீ திரும்பப்போவதில்லை
புதையுண்ட காலத்திலிருந்து நீ எழப்போவதில்லை
உனது கனத்த குரலோ
கண்குழியிலிருந்து தோண்டப்பட்ட உனது விழிகளோ
மீண்டும் வரப்போவதில்லை.
பூமியின் அடியாழத்திலிருந்து என்னைப் பார்.
நிலங்களை உழுபவனே,
நெசவாளியே,
வாய் திறவாத மேய்ப்பனே,
குலச்சின்னத்தின் சந்ததியே,
வஞ்சிக்கும் சாரத்தின்மேல் நிற்கும் கொத்தனே,
நசுங்கிய விரல்களுள்ள பொற்கொல்லனே,
நாற்றுகளை நினைத்துப் பதறும் உழவனே,
களிமண்ணுக்கிடையே விரயமாகும் குயவனே,
உனது
புதையுண்ட புராதன துக்கங்களை
புதுவாழ்வின் குவளைக்குள் கொண்டுவா.
உனது இரத்தத்தையும் உனது தழும்பையும்
என்னிடம் காட்டு.
பிறகு
வைரம் ஒளிமங்கிப்போனதாலோ
சோளக்கதிரையோ கல்லையோ
காலத்திற் தராமல் நிலம் பொய்த்ததாலோ
சவுக்கடி பட்டது இங்கேதான் என்று
என்னிடம் சொல்.
நீ இடறிவிழுந்த பாறையும்
உனது உடலை சிலுவையேற்ற
அவர்கள் தறித்த அந்த மரத்தையும்
என்னிடம் காட்டு.
புராதன விளக்குகளையேற்ற
சிக்கிமுக்கிக் கற்களை உரசு.
நூற்றாண்டுகளாக
உனது காயங்களில் ஒட்டியிருக்கும்
சவுக்குகளைக் கொளுத்து.
உனது இரத்தத்துடன் ஒளிரும்
கோடரிகளைக் கொளுத்து.
உனது இறந்த உதடுகளுக்காகப் பேசவந்திருக்கிறேன் நான்.
பூமிமுழுவதிலும்
இறந்த உதடுகள் ஒன்றிணையட்டும்.
ஆழங்களிலிருந்து
இந்த நீண்ட இரவை எனக்காக நெய்துகொடு.
உன்னோடு இங்கே நிலைப்பேன்.
சங்கிலி சங்கிலியாக
கண்ணி கண்ணியாக
படிப்படியாக
எல்லாவற்றையும் என்னிடம் சொல்.
நீ ஒளித்துவைத்திருக்கும் கத்திகளைக் கூராக்கு.
சூரியச் சீற்றத்தின் பெருக்காக
புதையுண்ட சிறுத்தைகளின் அமேசான் நதியாக
அந்தக் கத்திகளை
என் மார்பில் பாய்ச்சு.
மணிக்கணக்காக
நாட்கணக்காக
ஆண்டுக்கணக்காக
இருண்ட யுகங்களாக
நட்சத்திர நூற்றாண்டுகளாக
என்னை அழவிடு.
எனக்கு மௌனத்தைக்கொடு, எனக்கு நீரைக்கொடு,
நம்பிக்கையையும்.
எனக்கு போராட்டத்தையும் இரும்பையும்
எரிமலைகளையும் கொடு.
காந்தங்கள்போல என் உடலோடு தொற்றட்டும் உடல்கள்.
எனது நாளங்களுக்குள்ளும் எனது நாவுக்குள்ளும்
விரைந்து வா.
எனது குரலினூடே எனது இரத்தத்தினூடே பேசு.
@
- பாப்லோ நெரூதா கவிதைகள் (உயிர்மை வெளியீடு 2004)
நன்றி : சுகுமாரன்
0 comments:
Post a Comment